போனால் திரும்பி வராத நேரம்

போனால் திரும்பி வராத நேரம். பலர் இதை உருப்படியான காரியங்களுக்காக அதிகம் செலவிடுவதில்லை. ஏனெனில் நாம் அதிகம் சிந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை. இந்த கூற்றைத் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சராசரியான ஒரு நாளில் நாம் இன்றியமையாதகளைத் தவிர்த்து, வேறு என்னென்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதை கூர்மையாக ஆராய்ந்தால், நாம் சிந்தனை செய்வதை தவிர்க்கவும், கற்பனை செய்யாமல் இருக்கவும்தான் என்பது தெரிய வரும்.

ஒரு நாள் முழுதும் செல் போன் உபயோகிக்காமல், டிவி நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல், YouTubeலோ, computerலோ, திரைப்படங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா? ஒரு வேளை உங்களால் அது முடிந்தால், ஒன்று நீங்கள் அமைதி , தியானம் மற்றும் மௌனத்தை விரும்புபவர்களாக இருக்க வேண்டும் அல்லது அதிகம் புத்தகம் படிப்பவராகவோ அல்லது ஆழந்த சிந்தனை செய்பவராகவோ இருக்க வேண்டும்.

சிலர் என்னிடம் "டிவி, சினிமா , whatsup, facebook பார்த்தால்தான் அனாவசியமான சிந்தனைகளும் கவலைகளும் இருக்காது" என்று கூறக் கேள்விபட்டிருக்கிறேன். ஏன், நீங்களும் கூட இதை பிறரிடம் கூறியிருக்கலாம், பிறரும் கூட உங்களிடம் கூறியிருப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம்? அதிகம் சிந்தித்தால் அது உங்களை பாதிக்கிறது என்று. ஆனால் இதை கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால் சில, கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மைகள், எளிதாக வெளிப்படும்.

1. காலத்தை வேகமாக கடத்துவதில்தான் நாம் குறியாக இருக்கிறோமே தவிர காலத்தை யோகமாக, சிறப்புடன் உபயோகிக்க வேண்டும் என்பதில் இல்லை.
2. ஏதாவது ஒரு வெளிப்புறம் தழுவிய விஷயத்தில் லயித்து விட்டால், நாம் அதிகம் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை. இதனால் தான் வெளிப்புறம் சார்ந்த கேளிக்கைகள் மற்றும் செயல்கள்.
3. இந்த மாதிரி ஏதாவது செய்தால் தான் கவலையையும், தேவை இல்லாத சிந்தனைகளையும் தவிர்க்க முடியும்.இதுவும் ஒரு முக்கிய காரணம்.

என் தோராயமான கணிப்பில் 90% மக்கள் மேற்கூறிய கருத்து உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். நம் ஒவ்வொருவரிடமும் ஆற்றல்கள், கலைகள் உள்ளது. ஆனால் பலரும் இந்த ஆற்றல்களை முழுமையாகப் பயன் படுத்துவதில்லை. அதற்கு மிகவும் முக்கிய காரணம் மேற்கூறியபடி நேரத்தை கடத்து வேண்டும் என்பதுதான்.

நேரத்தை விரயமாக்குவதை ஆங்கிலத்தில் "killing the time" என்று சொல்லப்படுகிறது. நம் எல்லோருக்குமே விதவிதமான கற்பனை சக்திகள் உள்ளன. ஆனால் மனதை ஈடுபடுத்தி சிந்தனை செய்தால்தான் கற்பனைகள் பிறக்கும், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடையும். பிறகு அதை எந்த வகையில் உபயோகப் படுத்தலாம் என்பது உங்கள் நினப்பினிலும், செயல்களிலும் இருக்கிறது.

சினிமா பாருங்கள், டிவி பாருங்கள், வாட்ஸ்அப் பாருங்கள்! செல் போனுடன் உறவாடுங்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கணிசமான நேரத்தை உங்களின் கற்பனையை தூண்டிவிடும் சிந்தனைகளில் செலவிட்டால் அது தனி ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த மகிழ்ச்சியை வேறு எந்த வெளிப்புற சாதனமும் உங்களுக்கு கொடுக்க முடியாது. இவ்வித கற்பனைகளையும், எண்ணங்களையும், மற்றவர்களுக்கும் உபயோகமாக இருப்பின், அதை மற்றவர்களுடனும், ஏதாவது வழிகளில் பகிரலாம். அல்லது தியானம், இசை போன்ற தனிப்பட்ட செயல்கள் ஆயின் அதில் தனிப்பட்ட முறையில் நீங்கள் ஈடுபட்டு மகிழ்ச்சியும் அமைதியும் அடையலாம்.

சொல்ல வேண்டியதை சொல்லியாகி விட்டது. இனி உங்கள் விருப்பம்!
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (17-Jun-21, 3:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 156

மேலே