கார் நாற்பது 2 - தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது - நேரிசை வெண்பா
கார் நாற்பது
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
நேரிசை வெண்பா
கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து! 2
பொருளுரை:
வளைந்த குழையையுடையாய், ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளை யீன எழுச்சியையுடைய முகில் நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று அவரது தூதாய் அறிவித்து மின்னா நின்றது!
கடுங்கதிர் : அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம்.
ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப்படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார்.
முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு.
கொடுமை - வளைவு. கொடுங்குழை காதணி.
1. கொடுங்குழை என்றும் பாடம்

