வெள்ளிக்கிழமை

வளைகுடா நாடுகளில்...
வெள்ளிக்கிழமை... அது
ஒரு பாலைவனத்தின்
ஈரமுள்ள நாள்...

கைபேசிகள்...
கண்களோடும் காதுகளோடும்
இன்று அதிகம் பேசும்...

இன்னொரு வாரத்திற்கு
பசுமையைத் தக்கவைத்துக் கொள்ள
இதய நந்தவனத்தில்
இந்திய உரையாடல்கள்
நீர் பாய்ச்சிக் கொள்ளும்...

திட்டமிடப்படாத நாள்தான்...
திட்டமிடும் நாட்களை விடவும்
தீர்க்கமாகவே இருக்கும்...

வாராவாரம் வந்து போகும்
வசந்த நாள்...
செலவழிக்காத நேரத்தை
சேமித்து வைக்கத்தான் முடியாது...

இந்த நாள் மட்டுமே
இன்னொரு நாள்
இது போலிருந்தால்
நன்றாய் இருக்கும் என
நினைக்க வைக்கும்...

எல்லா நாட்களும் ஒன்றல்ல
இருபத்திநான்கு மணிகள்
இருந்தும் கூட...
😃👍💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Jul-21, 10:45 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 105

மேலே