எங்கள் அப்பா
உன் நிஜத்தின் நிழலாய்
படி எடுத்த எங்களை,
நிஜமாக்கத் தேய்ந்தாய்
எங்கள் அப்பா!
தோள் சுமந்து தாலாட்டி
தலை அமர்த்தி வான்காட்டி
குரல் உயர்த்திச் சோறூட்டி
அம்பாரி ஊர்வலத்தில்
நீ காட்டும் உலகம்,
நாங்கள் வளர்ந்த நாட்கள்...,
உடற்பயிற்சி உடல்கட்டு
சிலம்பம் காட்டு மின்னல் வெட்டு உடல் உரமும் மன அறமும்
சேர்ந்து இயங்க,
கொல்லைநோய் உடல் அரிக்கத் தேய்ந்து உறைந்தது மீத நாட்கள்!
வெள்ளைத்தாள் உன் மனதில்
பலர் எழுதும் கிறுக்கல்களில்
உன் நிஜம் புரியா நாட்களில்
உனது பயணம்!
நீ இழந்த பருவ நொடிகளை வாழ்க்கை முழுதும் வாழ நினைத்து,
மன வெடிப்புகள் எல்லாம்
இதய கீறல்களாய் பயணிக்கும் எங்களுடனே...,
ஓட்டலுக்கு அழைத்துச் செல்வாய் ஆர்டர் கூட சொல்லி வைப்பாய் சட்டை பாக்கெட் தடவி பார்த்து ருசிபார்க்கப் பங்கு கொள்வாய் குவளை நீர் போதும் என்பாய் இன்னும் சொல்லவா,
என வாசல் பார்ப்பாய்!
தோல்விக்குச் சுணக்கம் காட்டா
உன் பேச்சில் உதிரும் சொற்கள் "இதுவும் கடந்து போகும்"
உதிர்ந்த சொல் மட்டும்
நிலைத்து நிற்க,
நீ எங்கோ கடந்து போனாய்..., ராசியில்லாப் பிறவியானத்
தப்புக் கணக்குப்
போட்டுக் கொண்டாய்,
ராசிக்குள் ரகசியங்கள் உண்டென மரித்துப்போன மனதுக்குச்
சொல்ல மறந்தாய்!
காளன் கூட கருணை காட்ட காலனை மிஞ்சிய
உன் எண்ண ஓட்டம்,
முற்றுப்பெற்றது
உன இறுதி ஆட்டம்.
இறுதி ஆட்டத்தில்,தொடங்கியது எங்கள் ஓட்டம்!!!!