எங்கள் அம்மா
இப்பிறவி நொடியில்,
எதிர்வரும் யுகத்தில்,
சுருங்கி விரியும் உறவுக்குள் அடங்கா உன் உறவு அம்மா....,
பணி எதுவெனத் தெரியாமலேயே பதவி உயர்வு பெற்றவள்.
என்னை உணர்ந்த நொடியில் அறிந்து, தெரிந்து, புரிந்து, பாதுகாத்தாய்
சிறுதுளி பிண்டத்தை....,
பிண்ட இருப்புக்குள்
மீண்டு எழும் பிரளய ஓலம்..
பிண்டம் பண்டமாகப்
பனிக்குடம் தவமிருந்தது.
ஐம்புலன் தன்னை,
கால் விரல் மெட்டிக்கு அர்ப்பணித்தவள்..,
நெற்றி வகுடு பொட்டு,
கழுத்துத் தாலி கயிருக்கு வாக்கப்பட, வளையல் ஒலி வீணையாக,
மெட்டி ஒலி மத்தளமாய்,
நடை ஒலி நடனமிட,
உன் உயிர் ஒளி மின்னிறக்கம் செய்தது என்னை!
உன் கண்ணாடி வளையல் சத்தம்,
நான் ரசித்த முதல்
இசைக் கச்சேரி!
ஊர் பாட்டிகள் பாடம் எடுப்பார்கள் தாய்மைப் பாடத்தில்
நீ வெற்றி பெற!
பத்தியத்துக்குப் பந்தயம் கட்டி பாதுகாப்பாய் என்னை.
பாசமும் வேஷமும்
ஒன்று இணைந்து
பயணிக்கும் உரசலின்றி.
தேடித்தேடி சேர்ப்பாய்
நடைவண்டி, கிலுகிலுப்பு,
பாலாடை என நீளும்
உன் எண்ணத்தில்...,
என்னிடம் பேசுவாய்
கதை கதையாய்
உச்சுக் கொட்ட முடியாது
கேட்டு கிடப்பேன்.
எதிர்காலச் சிற்பத்துக்கு
நீ தாங்கும் உளிவலி
தாய்மையைப் போற்றும்
உலகவழி!
பிடித்தது இதுவெனச் சொன்னாள் அத்தை கூட கருணை காட்டுவாள் என் காதில் சீழ் வடிய!
நாளுக்கு நாள் வளரும்
வளர்பிறை நிலவை,
நீ சுமக்கும் இரகசியம் ஆம்ஸ்டாங்குக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் விண்ணைக் கடந்து இருக்கமாட்டான்..,
மல நாற்றத்தையும்
சிறுநீர் ஈரத்தையும்
தாங்கி வந்தவளுக்கு
இன்பம் யாதெனில் "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்" எனக்
கேட்கும் ஒலிகளில்....!!!