வறுமையில் சிலர்

முன்னாள் காவல்துறை கவி செல்வ ராணி அவர்களின் அனுபவ பகிர்வு

அன்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறையில கணினி பணியில இருக்கேன்.
பயங்கரமான இடி ,மின்னல் , மழை. இரவுல முழிச்சி இருந்தாலே பசி எடுக்கும். மழை வேற அடிச்சி பெய்யுது பசி தாங்கல . காலையில அஞ்சு மணிக்கெல்லாம் DSR கமிஷனருக்கு அனுப்பனும். அவசர அவரமா டைப்பண்ணிகிட்டு இருந்தேன் லேசா மழை விட்டுச்சி.

பக்கத்துல நாகநாதன் டீ கடையில போயி ,ஒரு பிஸ்கெட் பாக்கெட்ட காசு குடுத்து வாங்கிட்டு, என் தோழி பக்கத்துல மகளிர் காவல்
நிலையத்துல இருந்தா, அவளுக்கு பாதி பிஸ்கெட் குடுக்கலாம்ன்னு லேசான மழையில மெதுவா ஓடினேன்.

அவ ரெண்டு பெண்கள விபச்சார வழக்குல கூட்டிக்கிடு வந்து வச்சிக்கிட்டு, வாக்கி டாக்கில தகவல் சொல்லிக்கிட்டு இருந்தா. என்ன பார்த்ததும் அவளுக்கு மகிழ்ச்சி .ஏய் செல்வா வா..வா என்ன மழையில நனைஞ்சிகிட்டு வர? ஒரு போன் பண்ணிருந்தா நானே கொட எடுத்துட்டு வந்திருப்பேன்லன்னு சொன்னா. பரவால்ல இந்தா.. பிஸ்கெட்ன்னு பிரிச்சி குடுத்துக்கிட்டே இவுங்க யாருடி? என்ன கேஸ்ன்னு கேட்டேன். விபச்சார வழக்குன்னு சொன்னா.

அந்த ரெண்டு பேருமே அழகு. பூணம் சேலையால போத்திக்கிட்டு ,குளிர்ல கால் ரெண்டையும் கட்டிக்கிட்டு உட்காந்திருந்துச்சிங்க. மனசு கேட்கல பிஸ்கெட் சாப்பிடுங்கம்மான்னு ஆளுக்கு ரெண்டு பிஸ்கட்ட குடுத்தேன். வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா கொஞ்சம் காபி தண்ணி வாங்கி குடுக்குறீங்களான்னு ஒரு அம்மா கேட்டுச்சி. பாவம் தான் ஆனா உடம்ப வித்துதான் சாப்பிடுனுமா என்ன? உழைக்கலாம்ல்ல? இவுங்களுக்கு நன்ப சொன்னா புரியாது.

தோழி கிட்ட ஏய் காபி வாங்கி குடுக்கலாமான்னு கேட்டேன்? ஆமாம் உனக்கு உடனே இரக்கம் வந்துடுமே! இவளுங்க என்ன சொன்னாலும் திருந்த மாட்டாளுங்க. கொஞ்சமாவது மூஞ்சில வருத்தம் தெரியுதான்னு பாரேன். திமுரு புடிச்சவளுங்க காலையில கோர்ட்ல போய் பைன கட்டிட்டு போய்கிட்டே இருப்பாளுங்கன்னு சொன்னா.

அத கேட்டுட்டு ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டே முழுக்க நனைச்சாச்சி இனிமே வெக்கப்பட்டு என்ன பண்ண போறோம் போங்கம்மா.ஒரு காபி வாங்கி குடுங்கம்மான்னு மறுபடியும் கேட்டதும் மனசு கேட்கல. நான் நாக நாதன் கடையில ரெண்டு டீ குடுக்க சொல்லி சொன்னேன். டீ கொண்டு வந்த பையன் அவுங்கள பார்த்து எனக்கெல்லாம் பெத்தவ இல்ல. ஒரு தாய் இல்லாம நாய் வாழ்க்க வாழ்றேன். நீங்க என்னாடான்னா இப்புடி திமுருல அலையிறீங்கன்னு கண் கலங்கிக்கிட்டே சொன்னான். அதுங்க டீ ய வாங்கிக்கிட்டு அவுங்க அவுங்க படுற கஸ்ட்டம் அவுங்க அவுங்களுக்கு தான் தெரியும் போ தம்பின்னு சொல்லிக்கிட்டே டீய குடிக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.

இது என்ன வாழ்க்கை? இவுங்க மேல கோபப்படுறதா? அனுதாபபடுறதா? அதுல ஒரு அம்மா கிட்ட பேசுனா ..என் குடுபத்துக்கே நான் தான் சோறு போடுறேன். தம்பி தங்கச்சிங்கள படிக்க வைக்கிறேன்னு நியாயம் பேசுது. இன்னொரு அம்மா புருசன் வுட்டுட்டு இன்னொருத்தி கூட ஓடிட்டான், புள்ளைய படிக்க வைக்கனும் ,வேற வழி தெரியில விருப்பம் இல்லாம தான் இந்த தொழிலுக்கு வந்தேன், ஆனா இப்ப இத விடமுடியிலன்னு சொல்லுது. கருத்துகள எடுத்து வைக்கும் போது அவுங்க அவுங்கள நியாயப்படுத்தான் பார்ப்பாங்க.

ஒருவிதத்துல பாவமா தான் இருந்துச்சி. எத்தனை !எத்தனை! ஆண்களோட கோர பசிக்கு இவுங்களோட உடம்பு தீனி போட்டு இருக்கும்! வலிச்சா கூட வலிக்குதுன்னு வெளியில சொல்ல முடிதுல்ல? ஒரு அம்மாவுக்கு கையிலயும் நெஞ்சுல நகத்தோட கீறல்கள பார்த்தேன். வரி குதிரைக்கு இருக்குற மாதிரியே இருந்துச்சி. அய்யோ என்ன இப்புடி கீறல்ன்னு கேட்டேன் இதாவது பரவால்ல சில நேரத்துல மாருல கடிச்சிப்புடுவானுங்கன்னு சொன்னுச்சி. எவ்வளவு பெரிய ரணம்ல்ல?

ஏதோ ஒரு நாளுல யாரோ ஒரு அரக்கன் கிட்ட மாட்டிக்கிட்டு தான் இந்த கீறல் பட்டுருக்கும். நிச்சயமா வலிக்குது விட்டுடுங்கன்னு போராடியிருப்பா, கெஞ்சி அழுதுருப்பா பாவம் தான். ஆனாலும் நேர்மையா உழைச்சி சம்பாதிச்சி சாப்பிடுற எத்தனை எத்தனையோ பெண்கள் சுய கவுரவத்தோட வாழலையா? அப்படி வாழ்ந்தால் என்னன்னு கேட்டேன் அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டா.

நேரம் ஆயிடுச்சி இருங்க வரேன்னு சொல்லிட்டு, அவசர அவசரமா போய் DSR டைப் பண்ணி குடுத்துட்டு திரும்பவும் இவுங்க கிட்ட வந்து பேச ஆரம்பிச்சேன்.

ஏன் இந்த தொழில் ?
விட்டுடுங்கன்னு சொன்னேன்.
கண்ணுல லேசா ஈரத்தோட விடுலியே அவனுங்கன்னு சொன்னா. பாவம் தான் இல்ல? இவுங்க திருந்தனுன்னு நினைச்சா கூட அனுபவிச்சவனுங்க இவங்கள திருந்த விடுறதுல்ல. இது பெரும் துயரம் தான்.
உழைச்சி சம்பாதிச்சா என்னன்னு கேட்டேன்? உடனே டக்குன்னு
இதுவும் உடல் உழைப்புதான்ன்னு சொன்னா. அடக்கொடுமையே!
மானத்த விக்கனுமான்னு கேட்டேன்? எங்களுக்கு ஏதும்மா மானமும் மரியாதையுமுன்னு கேட்டா.
இப்புடியே எத்தன காலத்துக்கு உங்க பயணம்ன்னு கேட்டேன்? எய்ட்ஸ்சோ ,சாவோ
இரண்டில ஒன்னு
முந்தி வரும்ல்ல அதுவரைக்கும் வாழ்ந்துட்டு நிம்மதியா போய் சுடுகாட்டுல படுக்கனும். அப்ப கூட எவனாவது வந்து எழுப்புவான்னு சொன்னா. எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைல்ல?
சாக துணிஞ்சிட்டியான்னு கேட்டேன்?
இல்ல இல்ல
யோனி விரிய திராணி இருக்குற வரைக்கும்
நான் சாக மாட்டேன்னு சொன்னா.

ஆசை பட்டத வாங்க தான் வக்கில்ல உடம்பையாவது விக்கலாம்முன்னு
விக்கிறேன். இதுலயாவதுதொழிலாளியா இல்லாம முதலாளியா இருங்கலாம்ல்லன்னு ஒரு ஆசைன்னு சொன்னா. மனசே வலிக்குதும்மான்னு சொன்னேன்.
எனக்கெல்லாம் வலியே மறுத்து போச்சிம்மா.
மனசுலேர்ந்து , யோனிவரைக்கும் எல்லாமே மறுத்துபோச்சி போங்கம்மான்னு சொன்னா.
எப்படின்னாலும் இந்த தொழில் தவறுதானேன்னு கேட்டேன்?
நான் என்ன தப்பு செஞ்சேன்? தாகம் தானே தீர்த்தேன்னு சொன்னா. செய்ற தப்ப
நியாயப்படுத்துறியான்னு? கேட்டேன். நாங்க
நிரப்பிராதிம்மான்னு தேம்பிகிட்டே சொன்னா. எனக்கு புரியில கொஞ்சம்
வேகமா பேசுன்னு சொன்னேன் . அழுதா...
ஆமால்ல ரப்பர் வளையளுக்கு
சத்தமிட வாய் ஏது?

என்ன தான் உன்ன நீ நியாயப்படுத்துனாலும் தப்பு தப்புதான்னு சொல்லிட்டு காலை டிபன் சாப்பிட காசு குடுத்தேன். வேண்டாம்மா பணமெல்லாம் இருக்கு, உங்க கிட்ட பேசுனதுல மனசு பாரமே போச்சிம்மான்னு சொன்னா. ஆனா எனக்கு மனசு பாரமாச்சி. டூட்டி முடிஞ்சிடுச்சிம்மா நான் கெளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பி யோசிச்சிக் கிட்டே வந்தேன். ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு போராட்டம் இருக்க தானே செய்யுது? நேர்மையான எத்தனையோ வழிகள் இருந்தும் இந்த மாதிரி சிலர் விலைமாதுகளாகி, போதைக்கி அடிமையாகி ,அதுதான் வாழ்க்கை ,அதுதான் சுதந்திரம்ன்னு வாழுதுங்களே! இந்த மாதிரியான சூழல்ல பொண்ணுங்க மாட்டவே கூடாது. அப்புடி மாட்டிட்டா அதுல இருந்து மீண்டு வரவே முடியாது.

எவனையோ திருப்த்தி படுத்த எத்தனை எத்தனை வேசம் ! என்னதான் இந்த மாதிரி பொண்ணுங்க மேல எனக்கு அனுதாபம் வந்தாலும் ஆதரிக்க முடியாது. திருந்தனும் இப்படிப்பட்ட பொண்ணுங்க திருந்தியே ஆகனும். ஆண்கள மட்டுமே குறை சொல்றதவிட்டுட்டு பொண்ணுங்களையும் திட்டி திருத்தனும். இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்க்கையே இல்ல மரண வாழ்க்கைன்னு எப்படி புரிய வைக்கறது? தெரிலங்க. வேதனையுடன் விடைத்தேடும் நான்.நன்றி.

எழுதியவர் : (24-Jul-21, 8:13 am)
சேர்த்தது : Jp subramani
Tanglish : VARUMAIYIL silar
பார்வை : 130

மேலே