நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

அந்த ஊர் கிராமமும் இல்லை நகரமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் வீடுகள்,மக்கள் நிறைந்த ஊர்.  தேசிய நெடுஞ்சாலை மிக அருகில் அமைந்துள்ளதே அந்த ஊரின் சிறப்பு.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஒரு பிரதான சாலை வழியாக சென்றால் , சாலையின் இருபுறமும் அந்த ஊர் அமைந்திருங்கும். பிரதான சாலை ஆரம்பிக்கும் இடத்தில் வலது, இடதுபுறம் சில முக்கியமான கடைகள் உண்டு. பிறகு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு இருபுறமும் வயக்காடு தான் . வயக்காட்டின் முடிவில் சில வீடுகள் அப்புறம் ஊரின் பிரதான மார்க்கெட், பிறகு நிறைய வீடுகள் என,  இப்படி அந்த ஊர் ஒருவிதமாக காட்சியளிக்கிறது.

அந்த ஊருக்கு செல்லும் பிரதான சாலை ஆரம்பத்திலேயே இடதுபுறம் ஒரு ஒத்தையடிப் பாதை செல்லும். அந்த ஒத்தையடி பாதை முடிவில் இரண்டு மூன்று குடிசைகள் இருக்கும். அதில் ஒரு குடிசை வீடுதான் சரோஜாவின் வீடு.  அன்று வெள்ளிக்கிழமை என்பதால், சரோஜா சாமி கும்பிட்டுவிட்டு, தன் இறந்த கணவன் படத்திற்கு பூமாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, தன் மகன் மணியுடன் கண்மூடி கைகூப்பி ஒரு நிமிடம் மௌனமாக நின்றிருந்தாள். ஏனோ! அப்படி அவள் மௌனம் காட்டும் பொழுது, அவள் மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
சரோஜாவின் கணவன் ஒரு லாரி டிரைவர். சமீபத்தில் ஒரு விபத்தில் இறந்து விட்டான். அவன் இருந்தவரை ஓரளவுக்கு பொருளாதார பிரச்சினை இல்லாமல் சரோஜா தன் மகன் மணியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

தன் கணவன் இறந்த பிறகு, சரோஜாவின் பொருளாதார பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. சரோஜாவின் மகன் மணி பதினாறு வயது ஆனாலும் அவன் மனோநிலை ஐந்து வயது சிறுவன் போல்தான் நடந்து கொள்வான். தன் கணவன் உயிருடன் இருக்கும்போது சரோஜா பல டாக்டர்களிடம் அவள் வசதிக்கேற்ப மணியை காண்பித்தாள். எந்த பலனும் இல்லை. இப்போது, சரோஜாவுக்கு ஒரு பக்கம் கணவன் இறந்து விட்டான். மறுபக்கம் மனோநிலை குன்றிய மகன். என்ன செய்வாள். அவள் நிதி நெருக்கடிக்கு நான்கு வீடு சென்று பத்து பாத்திரம் தேய்த்து வயிற்றை தழுவும் நிலை வந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாக அவள் மணியை, தைரியமாக ஆண்டவன் மேல் பாரம் போட்டுவிட்டு, அவனை தன்னந்தனியே வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வருகிறாள். பிறகு என்ன செய்வாள், பாவம் வேலைக்கு சென்றால் தானே சாப்பாடு. மணி ஐந்து வயது குழந்தை போல் அவனுடைய அறிவு இருந்தாலும், அவனுடைய தோற்றம் பதினாறு வயது பையன் போல் இருந்தாலும், நடை உடை பாவனை அனைத்தும் பார்க்கும் அனைவருக்கும் அவன் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பது மிக தெளிவாக தெரியும். அவனால் தொடர் வார்த்தைகள் பேச இயலாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அம்மா, அப்பா, புவ்வா, சாமி இப்படி சில பழக்கப்பட்ட வார்த்தைகள் தான்.

அன்றும் அப்படித்தான் சரோஜா தன் மகன் மணியை தைரியமாக வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுவிட்டாள். மணி மதியம் வரை ஏதோ அவனுக்கு தெரிந்த விளையாட்டை தன்னந்தனியே வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தான். எப்போதும் மதியம் ஒரு மணிக்கெல்லாம் வந்து ஏதோ ஒரு சமையல் செய்து மணிக்கு சோறு ஊட்டிவிட்டு திரும்பவும் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பும் சரோஜா அன்று மதியம் இரண்டு மணி ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. மணிக்கு வயிற்றை பசித்தது. அடுப்பங்கரைக்கு  சென்று அங்கிருக்கும் பாத்திரங்களை துழாவினான். உண்பதற்கு ஏதும் இல்லை. என்ன செய்யலாம், அவனுக்கு ஒன்னும் புரியவில்லை, நேரே சாமி கும்பிடும்  இடத்திற்கு வந்தான். சரோஜா எப்போதாவது அங்கிருக்கும் உண்டியலில் காசு எடுப்பதை அவன் கவனித்திருக்கிறான். அவனும் அதேபோல் அந்த உண்டியலை குலுக்க, சில நோட்டுக்கள் கீழே விழுந்ததை எடுத்து  தன் சட்டை ஜோபிக்குள் வைத்துக்கொண்டு, கடமைக்கு வீட்டை மூடிவிட்டு,அந்த ஊரின் பிரதான சாலைக்கு வந்தான். பசி அவன் வயிற்றை கிள்ளியது. வலதுபுறம் இருக்கும் டீக்கடைக்கு அவன் செல்ல வேண்டுமென்றால் அந்த பிரதான சாலையை கடக்க வேண்டும்.

பசியின் தாக்கம் அதிகமாக இருந்தமையால் மிக வேகமாக அந்த சாலையை கடந்தவன் டீக்கடை முன்நின்று, மூச்சு வாங்கி, டீக்கடைக்காரரிடம்  தன் சட்டைப் பையிலிருந்து அவன் கொண்டு வந்த பணத்தை எடுத்து நீட்டினான்.  அப்படி செய்தவன், அந்த டீக்கடை முன் கண்ணாடி பாட்டில்களில் வைத்திருந்த பன், பட்டர் பிஸ்கட், இவற்றை தனக்கு கொடுக்குமாறு அவனுக்கு தெரிந்த பாஷையிலும், சைகையிலும் கூறினான்.
ஒரு தட்டில் பன், பட்டர் பிஸ்கட், ஜாம் இவற்றை டீக்கடைக்காரர் அவனிடம் கொடுத்தார். அதை ஆவலாக வாங்கியவன், ஜாமை பன் மீது தடவி கடகடவென்று சாப்பிட ஆரம்பித்தான் .  திடீரென விக்கல் எடுக்கவே , ஜாடையில் தண்ணீர் கேட்டான். தண்ணீரை வாங்கி குடித்தான்.
விக்கல் நின்றது. பட்டர் பிஸ்கட்டை சாப்பிட ஆரம்பித்தான். தண்ணீர் நிறைய குடித்ததால் பட்டர் பிஸ்கட்டை இப்போது மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். சாப்பிட்டு கொண்டே சாலையை வேடிக்கை பார்க்க நேர்ந்தது. காரணம் பிரதான சாலையின் இடதுபுறம் அமைந்துள்ள கடைகளின் உரிமையாளர்கள் அன்று அமாவாசை என்பதால் பூசணிக்காய் கையில் ஏந்தி அதன் நடுவில் கற்பூரம் ஏற்றி, தங்களின் கடையின் முகப்பில் ஒரு சுற்று சுற்றி திருஷ்டி கழிக்க,பின் அதே பூசணிக்காய் பிரதான சாலையில் போட்டு உடைத்தார்கள். இப்படி பூசணி உடைப்பதை ஆச்சிரியமாக மணி இப்பொழுது தான் பார்க்கிறான். 

மாலை ஏறக்குறைய மூன்று மணியை தொடும் சமயம், பள்ளி சிறுவன் ஒருவன் மிக வேகமாக தன் சைக்கிளை ஓட்டி வந்தவன் பூசணிக்காய்  உடைத்ததை கவனிக்காமல் சைக்களின் வேகத்தில் கவனம் செலுத்தியதால், சைக்கிள் டயர்  உடைந்த பூசணிக்காய் சிதறல்கள்  மேலேறி, சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்த சிறுவன் முற்றிலுமாக நிலைதடுமாறி, சைக்கிள் ஒரு பக்கமும், சிறுவன் இன்னொரு பக்கமும், மிக வேகமாக சாலையில் தூக்கி எறியப்பட , சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சாலையில் வழிந்தோடியது. சிறுவன் மயக்கம் உற்றான்.  இதைப் பார்த்த மணி உடனே அந்த அடிப்பட்ட பள்ளி மாணவனிடம் ஓடினான்.  அவனைப் பார்த்து அவனை அறியாமல் 'ஓ' என்று கதறி அழுதான். அந்த பள்ளி மாணவனை மணி அவன் கரங்கள் கொண்டு தூக்கி அந்த சாலை வழியே அந்த ஆட்டோவை தன் கைகளை வேகமாக அசைத்து நிறுத்தினான். ஆட்டோ டிரைவர் நிலைமையை புரிந்துகொண்டு மனிதநேயம் மிக்கவர்கரவாக உடனே அடிபட்ட சிறுவனை ஆட்டோவில் ஏற்றுக்கொண்டார் . ஆட்டோவில் மணியும் ஏறிக்கொண்டான். ஆட்டோ விரிவாக மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனயை அடைந்தது. ஆட்டோ டிரைவரை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் மணி அடிப்பட்ட சிறுவனை தன் கையில் ஏந்திய வண்ணம் ஹாஸ்பிடல் உள்ளே மிக வேகமாக நுழைந்து,  அந்த மருத்துவமனையின் டாக்டரை சிறுவனுக்கு வைத்தியம் பார்க்கும்படி கெஞ்சினான், கதறினாள்.
மணிக்கு பின்னாடியே ஓட்டமும், நடையுமாய் வந்த ஆட்டோ டிரைவர் தெளிவாக நடந்ததை டாக்டரிடம் சொன்னான்.

சிறுவனுக்கு கிட்டத்தட்ட தலையில் பத்து தையல் போடப்பட்டது.
அரை மணி நேரத்திற்குப் பின் சிறுவன் மயக்கத்திலிருந்து தெளிந்தான். யார் மூலமாகவோ செய்தி அறிந்த அடிப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் கண்ணீரும், கம்பலையுமாக மருத்துவமனை அடைந்தனர். டாக்டர் அவர்கள் மகனுக்கு பயப்படும்படி ஏதும் இல்லை, எல்லாம் சரியாகிவிடும், நன்றி கூற வேண்டும் என்றால் எனக்கு கூற வேண்டாம், அதோ மேஜையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த மனோநிலை குன்றிய பையனுக்கும், சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துவந்த ஆட்டோ டிரைவருக்கும் நன்றி கூறுங்கள் என்று டாக்டர் சிறுவனின் பெற்றோர்களிடம் கூறினார். அதே ஆட்டோவில் அடிபட்ட சிறுவன், அவனுடைய பெற்றோர்கள், மற்றும் மணி வீடு திரும்பினார்கள்.
ஆட்டோவில் பயணிக்கும்போது தன் மகனை காப்பாற்றிய மணிக்கு என்ன வேண்டும் என்று அந்த தம்பதியினர் மணியைப் பார்த்து கேட்டனர். பாவம் உலகம் அறியாத அவன் பதில் ஏதும் கூறவில்லை. ஒரு இடத்தில் ஆட்டோவை மணி நிறுத்த சொன்னான் ஆட்டோ நின்றது. அங்கே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. கோயிலின் வாசலில் நிறைய பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.
மணி அந்த தம்பதியினரை பார்த்து இந்த பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு வாங்கித் தாருங்கள் என்று அவன் சைகையில் கூறினான்.  அப்படியே செய்கிறோம் என்று மணிக்கு வாக்கு கொடுத்தனர். மணியின் மனிதநேயத்தை பார்த்து வியந்தனர்.

மணி பிரதான சாலை முடியும் இடத்தில் இறங்கிக் கொண்டான். ஒத்தையடிப் பாதையாக நடந்து வீட்டை அடைந்தான்.
வீட்டின் கதவை திறந்தான். உள்ளே சென்றான். அவனுடைய அம்மா சரோஜா இன்னும் வரவில்லை என்பதை அறிந்தவன் என்ன செய்வது என்று புரியாமல் வீட்டினுள் அங்கும், இங்கும் நடந்தான். மணி ஆறு ஆகியும் சரோஜா இன்னும் வீடு திரும்பவில்லை. வெறுமையாக, தனியாக, மணி உட்கார்ந்திருந்தான்.
வாசலுக்கு ஓடிவந்து பார்த்தான்.  ஆனால் சரோஜா இன்னும் வரவில்லை. இருட்ட ஆரம்பித்தது. மணிக்கு விளக்கேற்ற தெரியுமா என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை  உண்டியலில் இருந்து சில நோட்டுகளை எடுத்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டின் கதவை ஏதோ சாத்திவிட்டு, மீண்டும் ஒரு முறை பிரதான சாலையை வந்த அடைந்தான்.

காற்று சற்று பலமாக வீச தொடங்கியது. மின்னல் அவ்வப்போது வெட்டியது. மழை வரும் அறிகுறி நன்றாகவே தெரிந்தது.
பிரதான சாலையில் டீக்கடை முன்பு மட்டும் தெரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மற்றபடி அனைத்து தெரு விளக்குகளும் ஏனோ எரியவில்லை. சாலையை கடந்த மணி மதியம் செய்தது போலவே மீண்டும் ஒரு முறை பணத்தை டீ கடைக்காரரிடம் கொடுத்து பன் மற்றும் பட்டர் பிஸ்கட் கேட்டான். தட்டில் வழங்கப்பட்ட பன்னையும், பட்டர் பிஸ்கட்யும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மணி பிரதான சாலையில் கண்ட காட்சியை பார்த்து அதிர்ந்தான். மதியம் வலதுபுறம் கடை வைத்திருந்த சில கடை உரிமையாளர்கள் பூசணி உடைத்தார்கள். அதனால் தான் அந்த சிறுவனுக்கு அடிபட்டது என்பதை ஆழமாக உள்வாங்கிய மணி இப்போது மெடிக்கல் ஸ்டோர் காரர் பூசணிக்காயை நடுரோட்டில் போட்டு உடைப்பதை பார்த்து
மிகவும் கோபமுற்றான். பன்னையும், பட்டர் பிஸ்கட்யும், ஒரே வாயில்  தன் வாய்க்குள் போட்டு தண்ணீர் குடித்து விழுங்கியவன், சற்றும் தாமதிக்காமல் நேரே மெடிக்கல் ஸ்டோர் காரன் எதிரே போய் நின்றவன், அவன் நடுரோட்டில் போட்டுடைத்த பூசணிக்காயை அப்புறப்படுத்தும்மாறு கேட்டான்.
மெடிக்கல் ஸ்டோர் காரன் மிக அலட்சியமாக போடா உன் வேலையை பார்த்துக்கொண்டு என்று மணியைப் பார்த்து கூறினான். மணி மெடிக்கல் ஸ்டோர் காரணை விடுவதாக இல்லை.
மீண்டும் ஒரு முறை பிடிவாதம் பிடித்தவன் போல் மெடிக்கல் ஸ்டோர் காரனை பார்த்து அவன் உடைத்த பூசணிக்காயை அப்புறப்படுத்தும்மாறு வலியுறுத்தினான்.
மெடிக்கல் ஸ்டோர் காரன்," நீ யார்ரா இதையெல்லாம் என்கிட்ட சொல்றதுக்கு, நீயே ஒரு பைத்தியக்காரன், ஒழுங்கா இங்கிருந்து போயிடு, இல்ல என் கிட்ட உதை வாங்குவ, மரியாதையா இடத்த காலி பண்ணு, அவ்வளவுதான் உன்கிட்ட சொல்லிட்டேன்". மணி ஆத்திரம் கொண்டான். பூசணிக்காயை அப்புறப்படுத்து, பூசணிக்காயை அப்புறப்படுத்து என்று பலமுறை அவன்  பாஷையின் வாயிலாக தன் சைகையின் மூலம் மெடிக்கல் ஸ்டோர் காரணை பலவந்த படுத்தினான். அதற்கு மெடிக்கல் ஸ்டோர் காரன்," சொன்னா கேக்க மாட்டியா, நாயே, என்று கூறியவன் மணியை அவன் கைகளால் வேகமாக தள்ளி விட்டான். அச்செயலை சற்றும் எதிர்பாராத மணி  நிலைதடுமாறி தரையில் விழுந்தான் .

மழை தூறலாக ஆரம்பித்து, கற்றுடன் வெகமாக பெய்ய ஆரம்பித்தது. மணி மழையில் முழுவதும் நனைந்தான்.மழையை பொருட்படுத்தாமல்,
சுதாரித்து எழுந்த மணி குனிந்து எதையோ தேடினான். இப்போது அவன் கைகளுக்கு கிடைத்தது ஒரு செங்கல். கைக்கடக்கமான அந்த செங்கல்லை எடுத்தவன், மெடிக்கல் ஸ்டோர் காரனை பார்த்து குறி வைத்தான்.   "டேய்.. டேய்.. டேய்.. டேய் ....அதால என்ன அடிச்சுறாத...
என்று பயந்து நெடுங்கிய மெடிக்கல் ஸ்டோர் காரணை பார்த்து பலமாக சிரித்தான் மணி. "வேணா... அந்த மாதிரி ஏதும் செய்யாத," மீண்டும் மெடிக்கல் ஸ்டோர் காரன் மணியைப் பார்த்து கெஞ்சினான். மணி செங்கல்லை ஒரு கையில் பிடித்த வண்ணம் சிரித்துக்கொண்டே கல்லை மிக வேகமாக எறிந்தான். அவன் வீசிய செங்கல் கடையில் உள்ள கண்ணாடி அலமாரியை பதம் பார்த்தது.  கல்லை வீசிய மணியின் சிரிப்பு அடங்கவில்லை.
மணிக்கும், மருந்துகடைக்காரனுக்கும் நடந்த இந்த நிகழ்வு, நல்ல மழையின் சத்தத்தால் பக்கத்து கடைகாரர்களுக்கு கேட்க வாய்பில்லாமல் போனது உண்மையே. தான் செய்த செயல் மெடிக்கல் ஸ்டோர் காரனுக்கு தகுந்த தண்டனை வழங்கி விட்டதாக எண்ணிய மணி அங்கிருந்து மழையில் நனைந்தபடியே அங்கிருந்து  நகர்ந்தான். பத்தடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான், அவனுக்கு அவசரமாக சிறுநீர் வந்தது.

இடதுபுறம் சாலை ஓரமாக இன்னும் கடைகள் அடைக்க படாததால், சாலையைக் கடந்து வலதுபுறம் டீ கடையை தாண்டி இருள் சூழ்ந்த ஒரு மரத்திற்கு கீழே சிறுநீர் கழித்தான். பின் மண்டையில் யாரோ ஓங்கி அடித்ததை உணர்ந்த மணி வலி தாங்க முடியாமல் அப்படியே திரும்பி பின் மண்டையை பிடித்துக்கொண்டு அதே இடத்தில், மயக்கம் வந்தவனாக உட்கார்ந்துவிட்டான். மழை ஓய்ந்தபாடில்லை. ஒரு ஐந்து நிமிடம் பொருத்து சுதாரித்து  எழுந்து நிற்க முயற்சித்தான். அந்த முயற்சியில் வெற்றி பெற்றவன் ஒரு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான் அவன் கண்களில் தென்பட்ட அந்த இருட்டில் ஜொலி, ஜொலிக்கும் பிரேஸ்லெட். இப்பொழுது புரிந்து கொண்டான் தன் பின் மண்டையில் யார் அடித்தது என்று. பிரேஸ்லெட் கையில் அணிந்திருந்த மெடிக்கல் ஸ்டோர் காரனின் கொடூர செயல்தான் அது என்பதை அறிந்து கொண்டான். ஆதரவற்று கிடந்த பிரேஸ்லெட்  எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வலதுபுற சாலைக்கு மெதுவாக நடக்க ஆரம்பித்தான். சாலை முழுவதும் கும்மிருட்டு. பின் மண்டை வலியுடன் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்த மணி பூசணி சிதறல்கள் மேல் கால் வைத்ததால் வழிக்கு அதே இடத்தில் விழுந்தான். விழுந்தவன் மிகவும் சோர்வுற்றான். காரணம் நிறைய ரத்தம் அவன் பின் மண்டையில் இருந்து வழிந்திருந்தது.

வெளிப்புறம் இருட்டு ஒரு பக்கம் இருந்தாலும் அவன் கண்களும் இருட்டியது. மயக்கம் மீண்டும் அவனை சூழ்ந்தது கொண்டது.  மழை விட்டபாடில்லை. நடு ரோட்டில்  உடைக்க பட்ட பூசணி குவியலின் மத்தியில் அப்படியே படுத்துவிட்டான். சரோஜா மிக தாமதமாக வீட்டுக்கு வந்தவள் மணியை காணவில்லை என்பதை அறிந்து பதறி அடித்து அக்கம், பக்கம் இருக்கும் இரண்டு வீட்டில் கேட்டாள். அவர்கள் தாங்கள் மணியை பார்க்கவில்லை என்று கூறிவிட்டார்கள். பதறிய சரோஜா" மணி.. மணி... நீ எங்கு சென்றாய்... நான் தவறு செய்துவிட்டேன்.. உன்னை தனியே வீட்டில் விட்டுச் சென்றது என்னுடைய தவறுதான்.... எங்குதான் சென்றாயோ... என் மணி... என் மணி... என்று அழுதுகொண்டே, புலம்பிக்கொண்டே அவளும் பிரதான சாலையை அடைந்தாள். மணியின் பின்மண்டையில் ஓங்கி அடித்துவிட்டு தன் மெடிக்கல் ஸ்டோரை அவசரஅவசரமாக பூட்டிவிட்டு பறந்து விட்டான் மெடிக்கல் ஸ்டோர் அயோக்கியன்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து  சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த அந்த சரக்கு லாரி மிக வேகமாக இந்த ஊரின் பிரதான சாலைக்குள் நுழைந்தது. வண்டி ஓட்டிக் கொண்டு வந்த டிரைவர் நல்ல போதையில் இருந்திருப்பான் போலும். மழை பியித்து உதறியது. வைப்பர் லாரியின் கண்ணாடியில் வழியும் தண்ணீரை துடைத்தாலும், குடியினால் போதையில் இருந்த லாரி டிரைவர் கண்கள் குத்துமதிப்பாக தானே தெரியும். இருந்தாலும் அவன் ஹாரன் அடிக்க தவறவில்லை. ஹாரன் சத்தம் மணியின் காதுகளுக்கு இப்போது கேட்டாலும் அவன் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. டிரைவர் கண்களுக்கு அந்த நேரத்தில் தெரிந்தது பூசணி குவியில்களே தவிர, மணி என்ற மனிதன் அவன் கண்களுக்கு  தெரிய வாய்ப்பு இல்லை. லாரி மிகவும் வேகமெடுத்தது.
சீறிப்பாய்ந்த சரக்கு லாரி மணியை.......
அம்மா............................ என்ற ஓங்கி ஒலித்த மணியின் குரல் அந்த ஊருக்கே கேட்டிருக்க வேண்டும். சரோஜாவுக்கு கேட்டு இருக்காதா??????
போலீஸ் வரும். துப்புத் துலக்கும்? மெடிக்கல் ஸ்டோர் காரணை அரெஸ்ட் பண்ணும்.  லாரி டிரைவரையும் அரெஸ்ட் செய்யும்.. தக்க தண்டனை கொடுக்கும். எல்லாம் சரி. இந்த மனம் குன்றிய சிறுவன் என்ன பாவம் செய்தான். அவன் செய்கையில் என்ன தவறு. அவன் செய்தது நூற்றுக்கு நூறு சரிதானே.

இக்கதையை எழுதிய எனக்கு மூன்று கேள்விகள்.
ஒன்று, ஏன் நல்லவர்களை ஆண்டவன் இந்த உலகத்தில் விட்டுவைப்பதில்லை.

இரண்டு, இம்மாதிரி பூசணி உடைப்பதால் பல உயிர்கள் பல இடங்களில் தினமும் பலிகடா ஆகின்றன. அதை ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறது.

மூன்று,  மணி என்ன பாவம் செய்தான் ஒரு பாவமும் செய்யாத அந்த மனவளர்ச்சி இல்லாத ஒரு குழந்தையை ஏன் ஆண்டவன் எடுத்துக் கொண்டான்.

- பாலு.

..

எழுதியவர் : பாலு (23-Jul-21, 5:31 am)
சேர்த்தது : balu
பார்வை : 169

மேலே