வல்ல அறிஞர் வறிஞராய் வாடுதல் வினைவிளைத்து நிற்கும் வினையமே - விதி, தருமதீபிகை 897

நேரிசை வெண்பா

வல்ல அறிஞர் வறிஞராய் வாடுதலும்
புல்லர் பொருளால் பொலிதலும் - தொல்லை
வினைவிளைத்து நிற்கும் வினையமே அல்லால்
நினைவதற்(கு) உண்டோ நிலை. 897

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த அறிவாளிகள் வறியராய் வாடுகின்றனர்; இழிந்த மடையர்கள் பொருள் வளம் உடையராய்ப் பொலிந்து வாழுகின்றனர்; இவை வினையின் விளைவே அன்றி வேறு நினைய இடமில்லை; ஆகவே அதன் நிலையை உணர்ந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

விதியின் விளைவுகளைத் தெளிவாக அறிய மதிமானையும் மதி கேடனையும் ஒருங்கே இணைத்து இது இங்கே விளக்கியுள்ளது.

அறிவு அதிசய ஆற்றலுடையது; அதனை உடையவர் எல்லாம் உடையராய் யாண்டும் உயர்வுறுகின்றனர். பொருளை ஈட்டவும், காக்கவும், நல்ல வழிகளில் செலவு செய்யவும், சுக போகங்களை நயமாய் அனுபவிக்கவும் அறிவு வல்லது; அத்தகைய அறிவை உரிமையாக உடையவர் பொருளின்றி வறியராய் மறுகுகின்றனர். இன்மையும் உடைமையும் புன்மையுறுகின்றன.

நல்ல அறிவு சிறிதும் இலராய்ப் பொல்லாத புலைகளில் இழிந்துள்ள பலர் செல்வ வளம் எய்திச் செழித்துக் கொழுத்துத் திரிகின்றார். மாறுபாடான இந்த விபரீத நிலைகளை உலகத்தில் கண்டு வருகிறோம்; இதற்குக் காரணம் என்ன? கருதி உணர்ந் தால் உறுதியான உண்மைகள் தெரிய நேருகின்றன.

பொருளுக்கு எவ்வழியும் தனியுரிமையாளர் வறியராய் ஏங்கவும், அந்த உரிமை யாதுமில்லாத புல்லர் செல்வராய் ஓங்கவும் நேர்ந்துள்ள பாங்குகளை நூலோரும் மேலோரும் யாங்கணும் ஆய்ந்து ஓய்ந்து முடிவில் விதியே என்று நேர்ந்துள்ளனர். வினையின் அளவே மனித வாழ்வு மருவி வருகிறது.

குசேலர் தெளிந்த அறிவாளி; சிறந்த குணசாலி; அருள்நலம் கனிந்து நல்லவராயிருந்த அவர் பொருள் இல்லாமையால் அல்லல் பல அடைந்தார். வறுமையால் வாடி மனைவி மறுகிய போதெல்லாம் அவள் உள்ளம் தேற உறுதிகள் பல கூறினார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அலரவன் தீட்டி வைத்த
..ஆயுளின் அளவை காறும்
விலகிலா வினைக்குத் தக்க
..விருப்புணா வெறுப்பு ணாவும்
இலகவுண்(டு); இன்றேல் இன்றாம்
..இன்னுயிர் உடம்பின் வாழ்தல்;
மலர்தலை உலகத்(து) என்று
..வகுப்பர்நூல் உணர்ந்த வல்லோர்.

வினையின் அளவே பொருளும் போகமும் உளவாம்; இல்லாமையை நினைந்து நீ வருந்தலாகாது என்று மனைவிக்கு இவ்வாறு அவர் புத்தி போதித்திருக்கிறார். நல்ல சீலமுடைய அவர் பொல்லாத வறுமையால் அல்லலுழந்திருந்தது பழவினை வலியை விழி தெரிய விளக்கி விதியின் அதிசய நிலையைத் துலக்கி நின்றது.

நேரிசை வெண்பா

இம்மை மறுமை இருமையும் நன்கறிந்த
செம்மை யுளமுடைய சீலர்கள் - வெம்மைதரு
பொல்லா வறுமையுறப் புல்லர் வளமுறுதல்
எல்லாம் விதியின் இயல்

- கவிராஜ பண்டிதர்

விதியின் விசித்திரச் செயலை இது இனிது விளக்கியுள்ளது.

புன்மையான நிலையிலுள்ள சிறியரைப் புல்லர் என்றது. காட்டிலுள்ள மரம் கொடி செடிகளுள் புல் மிகவும் சிறியது; அதுபோல் நாட்டிலுள்ள சிறியர் புல்லரென நேர்ந்தார். அற்பர் கீழோர் கயவர் என இழிவாய் எள்ளப்படுபவர் உள்ளப் பண்பு இல்லாத புல்லரே. மனநிலை இழிந்த அளவு மனிதன் தாழ்கிறான்.

பொல்லாத புல்லர் நல்ல செல்வங்களை அடைவதும், நல்லோர் அவற்றை இல்லாமல் இருப்பதும் இயற்கைக்கு விரோதம்; இந்த மாறுபாட்டுக்கு மூலகாரணம் பழவினையின் விளைவேயாம். பொருள் வருதற்கு உரிய தொழிலை முன்னம் செய்து முடித்தவர் அப்பிறவியில் அதனை எளிதே அடைந்து கொள்கின்றார்; அங்ஙனம் செய்யாதவர் அதனை எய்தாமல் நிற்கின்றார்.

நேரிசை வெண்பா

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில். 265

- நன்றியில் செல்வம், நாலடியார்

கல்வியை நன்கு கற்று நல்ல குணசாலிகளாயுள்ளவர் செல்வம் இல்லாமல் வருந்துகின்றார்; கல்லாத மூடர்கள் அதனை எளிதே பெற்றுக் களி மிகுந்திருக்கின்றார்; இது என்னே பாரிழவு? என்று தன் மனைவி மறுகிக் கேட்டபோது ஒரு கவிஞர் அவளை நோக்கி இவ்வாறு கூறியிருக்கிறார். வினைப்பயன் என்று நினைப்பு ஊட்டியது இப்பொழுதாவது நல்ல வினைகளைச் செய்து கொள்ள வேண்டும் என உய்தி நிலையை எண்ணியேயாம்.

உலக வாழ்வு பலவகை விசித்திரங்களையுடையது; அறிஞர் வறிஞராய் நிற்கின்றார், அறிவிலிகள் செல்வராய்த் திகழ்கின்றார்; மாறுபாடான இந்நிலைகளைக் கண்டதும் வேறே ஒரு விதி தனியே உளது என்று மதி தெளிகின்றது. அந்தத் தெளிவில் அரிய பல உண்மைகள் ஆராய்வோடு வெளிவருகின்றன.

அறிவு உயிரின் ஒளி; தெய்வத்திரு; அதனையுடையவர் இயல்பாகவே உயர்ந்து கொள்ளுகின்றனர்; பொருளை அவர் அதிகமாய் மதிப்பதில்லை; ஆகவே அதனை மிகுதியும் அடையாமல் அவர் விலக நேர்ந்தனர். அந்த விலக்கு வியனான இலக்குடையது.

உள்ளே உணர்விலிருந்து ஊறுகின்ற கல்வியின்பத்தை நுகர்ந்து வருபவர் வெளியே செல்வத்தை நாடியலைய முடியாதாதலால் வறுமை அவரை உரிமையாக அடைந்து கொள்கிறது;

என்றும் அழியாத விழுமிய கல்விச் செல்வத்தையுடைய புலவர்கள் பொன்றி அழிகின்ற புல்லிய செல்வத்தை நாட நேர்ந்த போதுதான் அரசர்களை, வள்ளல்களை உவந்து பாட நேர்கின்றனர். அந்தப் பாடல்களால் அவர்களுக்குப் புகழ் உளவாகின்றன; பிறர்க்குக் கலைகள் வளர்கின்றன; உலக சரித்திரங்களும் வெளியே தெளிவாய்த் தெரிய வருகின்றன.

ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5 சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி

நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
10 தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய

பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே. 164 புறநானூறு

தமது வறுமை நிலையைக் குறித்துக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் குமணனிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். நெடுநாள் உலை ஏற்றாமையால் அடுப்பில் காளான் பூத்திருந்தது; தாய்ப்பால் இல்லாமல் குழந்தை தளர்ந்து அழுதது; மனைவி மறுகி என் முகம் நோக்கி நின்றாள்; நான் உன் முகம் நோக்கி வந்தேன் என்று அவர் உரையாடியுள்ள அழகு ஊன்றி உணரவுரியது. உயர்ந்த அறிஞர் இழிந்த மிடியால் வருந்துகிறார்.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை 130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர், முதுசுவர்க் கணச்சிதல் அரித்த,
பூழி பூத்த புழல்கா ளாம்பி:
ஒல்கு பசிஉழந்த ஒடுங்குநுண் மருங்குல், 135
வளைக்கை, கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணி, கடைஅடைத்(து),
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் வீட; - சிறுபாண் ஆற்றுப்படை

வீடு சுவர் சரிந்தது; கூரை பிரிந்தது; அடுப்பில் ஆம்பி பூத்தது; அடுக்களையில் நாய் குட்டி போட்டுள்ளது; உப்பு இல்லாமல் வெந்த கீரையைத் தின்று நைந்து வந்துள்ளேன் என ஒருபுலவர் நல்லியக் கோடனிடம் போய் இவ்வாறு பாடியுள்ளார். நல்ல அறிவும் பொல்லா வறுமையும் புலையாடியுள.

நலம்பா(டு) அறியா இலம்பா(டு) அலைப்ப
நீர்வாய்ச் சிதலையும் நூல்வாய்ச் சிலம்பியும்
சிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்
மசகமும் உலங்கும் வாய்ப்படைக் குடவனும்
பசையில் யாக்கைத் தசைகறித்(து) உண்ண

அரும்பசிக்(கு) உணங்கியும் பெரும்பிணிக்(கு) உடைந்தும்
சாம்பல்கண்(டு) அறியா(து) ஆம்பி பூத்த
எலிதுயில் அடுப்பில் தலைமடுத்(து) ஒதுங்கிச்
சிறுசிறார் அலறப் பெருமனைக் கிழத்தி
குடங்கையில் தாங்கிய கொடிற்றினள் குடங்கைக்(கு)

அடங்கா உண்கண் ஆறலைத்(து) ஒழுக
அழுகுரல் செவிசுட விழுமநோய் மிக்குக்
களைகண் காணாது அலமரும் ஏல்வையில்
கடவுள் நல்லூழ் பிடர்பிடித்(து) உந்தக்
கன்னிமதில் உடுத்த காசிமா நகரம்

பெருவளம் சுரக்க அரசுவீற் றிருக்கும்
மழுவலன் உயர்த்த அழல்நிறக் கடவுள்
பொன்னடி வணங்கி இன்னிசை பாடலும்
அந்நிலைக் கண்ணே அகல்விசும்(பு) ஒரீஇச்
சுரபியும் தருவும் பெருவளம் சுரப்ப

இருமையும் பெற்றனன் யானே நீயுமத்
திருநகர் வளமை பாடி இருநிலத்(து)
இருநிதிக் கிழவன் ஏக்கறுப்பத்
திருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே. 58 காசிக்கலம்பகம்

கொடிய வறுமையில் நெடிய துயராய் மறுகியிருந்த நான் முடிவில் காசி விசுவநாதரைக் கண்டு பாடினேன்; தெய்வத்திரு எய்தி இருமையும் இன்புற்றேன்; நீயும் போய்ப் பாடி, குபேர சம்பத்தைப் பெறுக என ஒரு புலவர் மற்றொருவருக்கு வழி காட்டியிருப்பதை இது தெளிவாய்க் காட்டியுள்ளது.

கட்டளைக் கலித்துறை

காவென்றும் சிந்தா மணியென்றும் நீஎன்றன் கையிலள்ளித்
தாவென் றுரைக்கத் தரித்திரம் பின்சென்று தள்ளியெனைப்
போவென் றுரைக்கவும் நாணமங் கேஎன்ன போவதிங்கு
வாவென்(று) இழுக்கவும் வந்தேன் விராலி மலைக்கந்தனே. - மங்கைபாகர்

பிறரைப் புகழ்ந்து பாடிப் பொருள் பெறும்படி வறுமை தள்ள, மானம் தடுக்க மறுகி நின்ற புலவர் முருகன் சந்நிதியில் வந்து இவ்வாறு உருகி முறையிட்டிருக்கின்றார். நல்ல கல்வி யறிவுடையவர் பொருளில்லாமல் வருந்துவதை இவற்றால் அறிந்து கொள்கிறோம். புலவர் வறுமை என்பது பழமொழியாய் வந்துள்ளது.

Poverty is the muses' patrimony. [Burton]

வறுமை கவிஞரின் பரம்பரை உரிமை என இது குறித்துளது.

கல்விச் செல்வம் உடையவர் உலகப் பொருளைப் பெரும்பாலும் அடையாமல் இருப்பது எந்நாட்டிலும் இயல்பாயுள்ளது. கிரேக்க தேசத்தில் பிறந்த ஹோமர் (Homer) என்பவர் சிறந்த கவிஞர். அவர் இயற்றியுள்ள காவியத்தை உலகமொழிகள் பலவும் உவந்து போற்றுகின்றன. அத்தகைய பெரும் கவிஞர் வறிஞராய் வாழ்ந்துள்ளார். உண்ண உணவு இல்லாமல் பட்டினியும் கிடந்திருக்கிறார். அவர் இறந்து போனபின் யாவரும் உரிமை கொண்டாடிப் புகழ்ந்து துதிக்கின்றனர். தாமஸ் சீவர்ட் என்பவர் அந்த நிலையைக் குறித்து வருந்தி வரைந்துள்ளார்.

Seven wealthy towns contend for Homer dead,
Through which the living Homer begged his bread. (Seward)

ஹோமர் உயிரோடிருக்கும் போது சோற்றுக்குத் திண்டாடினார்; இறந்து போனபின் சிறந்த ஏழு நகரங்கள் அவர் தமக்குரியவர் என்று தம்முள் மாறாடிப் போராடுகின்றன என்னும் இது ஈங்கு உணர்ந்து கொள்ள வுரியது.

இதுவரை கூறியவாற்றால் மதிநலனும் விதி நிலையும் தெரிய வந்தன. விதிகாட்டி ஊட்டிய வழியே மதிகண்டு உண்டு வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-21, 9:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே