பேரும் புகழும் மருவும் கலையை மதி - வரம், தருமதீபிகை 887
நேரிசை வெண்பா
உள்ள மதியை ஒளிசெய்(து) உலகமெலாம்
வள்ளல் எனவுவந்து வாழ்த்திவர - வெள்ளம்
பெருகி வருதல்போல் பேரும் புகழும்
மருவும் கலையை மதி. 887
- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கலை ஞானத்தால் அறிவு நலமாய் வளரும்; இயல்பாயிருந்த அறிவை உயர்வாய் ஒளி செய்து உலக மாந்தர் உவந்து புகழ்ந்து வரும்படி சிறந்த சீர்த்திகளை விரைந்து தருதலால் கலையை விழைந்து கொள்க; அதுவே தலைமையான மகிமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கல்வி முதலிய நல்ல நிலைகளோடு தோந்து வரும்பொழுது தான் அறிவு தலைமையாய் வாய்ந்து வருகிறது; இனிய கலை தோயாத அறிவு கலை இழந்த மதியாய் நிலை குலைந்து போகிறது.
கல்வி நலங்களைக் கூர்ந்து கற்று ஓர்ந்து தெளிந்து ஒளி சிறந்துள்ள நிலையே கலை என வந்தது. காவியம், ஓவியம், சிற்பம், இசை முதலியன இனிய கலைகளாய் இசை பெற்றுள்ளன.
பொறிகளுக்கும் அறிவுக்கும் கலைகள் சுவைகளை ஊட்டுகின்றன. ஓவியம் கண்களுக்கு உவகை புரிகிறது; இசை செவிகளுக்கு இன்பம் தருகிறது; காவியம் அறிவுக்கு ஆனந்தம் அருளுகிறது. உணர்வின் காட்சிகள் ஒளி மிகுந்து வருகின்றன.
இன்னிசை வெண்பா
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் - முனியாதார்
முன்னிய செய்யுந் திரு 39
- நான்மணிக்கடிகை
சிற்பியர், கலைஞர், சான்றோர், சாந்த சீலர் ஆகிய இந் நால்வருடைய நிலைகளை முறையே இது நன்கு காட்டியுள்ளது.
கலைஞர் அதிசய மதிமான்கள் ஆதலால் உலகம் துதிசெய்து வர உணர்வு நலங்களை விதி முறையே உதவியருளுகின்றார்.
வானத்தில் தோன்றுகின்ற சந்திரனை மாந்தர் யாவரும் வழக்கமாய்ப் பார்த்து வருகின்றனர்; அந்தப் பார்வையில் வியனான பயன் ஒன்றும் அவர் காணவில்லை. கம்பர் ஒருநாள் கண்டார்; அந்தக் காட்சியை உம்பரும் இம்பரும் உவந்து காண இன்ப ஓவியமாய் வரைந்து காட்டினார். அயலே வருவது காண்க.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
விளம் விருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
மருமத்துத் தன்னை ஊன்றும் மறக்கொடும் பாவம் தீர்க்கும்
உருமொத்த சிலையி னோரை ஒருப்படுத்(து) உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண் திங்கள். 49
- தைலம் ஆட்டு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
இலக்குவனும் சீதையும் தொடர்ந்துவர இராமன் கானகம் போனான். இரவு நேரம், நல்ல நிலா வெளிச்சம்; வில்லோடு இராச கம்பீரமாய்ச் செல்லுகின்றான். கீழே நடந்து போகிற இராமச்சந்திரனையும், மேலே துலங்கி நிற்கிற இராச்சந்திரனையும் கவிஞர் ஒருங்கே உவந்து நோக்கினார். ஒளி மிகுந்து திகழ்கின்ற அந்தச் சந்திர மண்டலம் தருமதேவதையின் முகமண்டலம் போல் விளங்கியது என வியந்து கண்டார். நீண்ட காலமாகத் தன்னைத் தலையெடுக்க ஒட்டாதபடி நிலைகுலைத்து வருகிற அரக்கர் அடியோடு அழிந்து ஒழிவர்; அவரை அழித்து ஒழிக்கவே இந்தக் கோதண்ட வீரனை விதி அழைத்து வருகிறது என்று தருமம் உள்ளம் களித்து உவந்து நோக்கியது; அகத்தில் நிறைந்த அந்த உவகை முகத்தில் பொலிந்து விளங்கியது; அந்த விளக்கத்தை இங்ஙனம் விளக்கியருளினார். ’தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண் திங்கள்’ என்னும் இதில் அரிய பல அறிவு நலங்கள் மருவியுள்ளன; இயற்கை நிலைகளைக் கவிஞன் சுவையாகச் சொல்லுகிறான்; அந்த உரைகளில் அழகு அதிசய ஒளிகளை வீசி நிற்கின்றன.
அற்புதமான அழகுக் காட்சிகளைச் சிற்பி கல்லில் காட்டுகிறான்; கவிஞன் சொல்லில் உணர்த்துகிறான்; கலைஞன் ஓவியத்தில் விளக்குகிறான்; விஞ்ஞானி அவற்றைப் பகுத்துப் பார்க்கிறான்; அஞ்ஞானி யாதொன்.றும் பாராமல் அவமே போகின்றான். காண்பவர் நிலைகள் காட்சிகளில் தெரிகின்றன.
நேரிசை வெண்பா
கண்ட மலரைக் கவிஞன் கவின்காண்பான்;
கொண்ட கலைஞன் குணம்காண்பான் - அண்டிய
சிற்பி திறம்காண்பான்: தின்று சிதைக்குமே
அற்பக் கழுதை அதை - கவிராஜ பண்டிதர்
இந்தக் கவியில் அடங்கியுள்ள பொருள்களையும் நிலைகளையும் கருதியுணர்பவர் கலைமதியின் சுவைகளை இனிது தெளிந்து கொள்வர். உணர்வு ஒளிபெற உயர்வுகள் வெளிவருகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.