18 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 18
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

ஆன்மீக வழியில் ஞானஅறிவின் மூலம் இழந்த நித்தியமான ஆனந்தத்தை நாம் பெறுவதற்கு முடியும். நமது அறியாமையால் இழந்த நித்தியானந்தத்தை ஞான அறிவின் மூலம் பெறுவதற்கு முடியும். நித்தியமான ஆனந்தம் என்றால் நிரந்தரமான மன அமைதி என்று பொருள் கொள்ள வேண்டும். மனஅமைதி என்றால் துன்பத்திலும் இன்பத்திலும் மனம் அலைபாயாமல், மனம் கலங்காமல் இருக்க வேண்டும். அதாவது இன்பத்தைக் கண்டவுடன் மனமும் உடலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமலும், துன்பத்தைக் கண்டவுடன் மனமும் உடலும் துவண்டு விடாமல் இருப்பதும் ஆகும். அதாவது நமது மனம் தெளிந்த நீரோடை போன்று இருக்க வேண்டும். ஆன்மிகம் நமது வாழ்வை மன அமைதியை நோக்கி வழி காட்டி அழைத்து செல்கிறது.

நாம் எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் பிரார்த்தனையுடன் தொடங்க வேண்டும். நமக்கு எந்த தெய்வம் இஷ்ட தெய்வமோ அந்த தெய்வத்தை வணங்கி பிரார்த்தனை செய்யவேண்டும். இஷ்ட தெய்வம் என்றால் என்ன? முன்னோர்கள் தெய்வங்களை வணங்குவதற்கு பல்வேறு வழிபாட்டு முறைகளை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக நாம் திருசெந்தூரில் பிறந்ததில் இருந்து குடியிருந்து வருகிறோம் என்றால், அங்குள்ள முருகப்பெருமானையே வணங்கி வந்திருப்போம்.

நாம் வெளியூர்களில் எந்த ஒரு கோவிலுக்குச் சென்றாலும் நமது ஊரில் கோவில் கொண்டிருக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமானை அப்போது நினைக்காமல் இருக்கமாட்டோம். நமக்கு இயல்பாக இஷ்டதெய்வம் நினைவுக்கு வந்து விடும். நமக்கு துன்பம் துயரம் நேரிடும்போதெல்லாம் திருச்செந்தூர் முருகப்பெருமான் தெய்வத்தையே வணங்குவோம். அவ்வாறு வேண்டும்போது நமக்கு நேரிட்ட துன்பங்கள் விலகி விடும்போது திருசெந்தூர் முருகனையே நம்பிக்கையுடன் தொடர்ந்து வணங்கி வருவோம். எனவே நமக்கு திருச்செந்தூர் முருகப்பெருமான் இஷ்ட தெய்வம் என்று மனதில் பதிந்து விடும்.

நாம் நித்தியமான மன அமைதி கொள்ள வேண்டுமெனில், தவம் செய்வதற்கு காடு மலைகளுக்குச் செல்லவேண்டியதில்லை. மனிதரில் பெரும்பாலும் ஞானம் தவம் பக்தி என்றால் துறவு நிலை என்று தவறாக எண்ணிக்கொண்டு பயந்து ஓடிவிடுகிறார்கள். நமது பந்தபாசம், சுயநலம் மற்றும் உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலைதான் காரணம். உலகில் காணும் பொருள்கள் மூலமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணுவதும் ஒரு காரணமாகும். இல்லறவாசியும் ஆன்மீக வழியில் சென்றால் நித்தியமான ஆனந்தத்தினை மகிழ்ச்சியை நாம் விரும்பும் தேடும் மன அமைதியைப் பெறலாம். அதாவது நாம் வீட்டிலிருந்தபடியே நாம் பக்தி தியானம் தவம் போன்றவற்றை கடைபிடிக்கலாம். நாம் நித்தியமான ஆனந்தத்தினை மகிழ்ச்சியை மனஅமைதியை பெறுவதற்கு வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் பக்திகதைகள், பக்திபாடல்கள் போன்றவை நமக்கு வழி காட்டுகின்றன.

மிதிலை மன்னன் ஜனகர் நாட்டை நல்லாட்சி புரிந்துகொண்டு இல்லறத்தில் இருந்துகொண்டு தாமரையிலைத் தண்ணீர்போல் இல்லறஞானியாகத் திகழ்ந்தார் என்பதை இராமாயணம் என்னும் இதிகாசம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. தத்துவம் என்றால் மெய்ப்பொருளை அறிந்து கொள்வது என்று அர்த்தம். அதாவது உண்மைபொருளாகிய பராமாத்மாவை அறிந்து கொள்வது ஆகும். ஒரு மனிதனிடம் மனிதத்தன்மை மிருகத்தன்மை என இரண்டு தன்மைகள் மனதில் உள்ளன. மனிதத்தன்மை ஒருவனிடம் இருந்தால்தான் இரக்கம், அன்பு கருணை போன்ற செயல்களை செய்வதற்கு மனம் இடம் கொடுக்கும் அல்லது அவனை அழைத்துச் செல்லும்.

மனிதனிடம் தீய எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்தால் அவன் மிருகத்தன்மை படைத்தவனாக மாறி விடுகிறான். அவனது வாக்கு மனம் செயல்கள் அனைத்திலும் தீமையே நிறைந்து காணப்படும். உயிர் இரக்கம், கருணை, அன்பு யாருடைய மனத்தில் நிறைந்து இருக்கிறதோ அவர்கள்தான் மனித தன்மையின் அடையாளங்கள் ஆகும். இதனைத்தான் வள்ளல்பெருமான் ‘ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்’ என்று உயிர் இரக்கத்தின் தன்மையை முக்கியமாக வலியுறுத்திக் கூறியுள்ளார். மனிதத்தன்மை இருப்பவர்களைத்தான் இந்த உலகம் விரும்புகிறது. உயர்வாக கருதுகிறது. மனிதத்தன்மை மனிதநேயம் அன்பு நிறைந்திருக்கும் உள்ளங்கள்தான் நித்திய ஆனந்தம் மகிழ்ச்சி சுகம் போன்றவற்றுடன் அமைதியாக வாழும்.

மோட்சம் என்றால் மனநிறைவு என்று பொருள் உண்டு. நாம் உலகில் காணும் ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். நாம் விரும்பிய பொருள்கள் அல்லது பதவியோ நமக்குக் கிடைத்தவுடன் ஆனந்தம் அடைகிறோம். அந்த மகிழ்ச்சி ஆனந்தம் கொஞ்ச நேரம் அல்லது சிறிது காலம்தான் நீடிக்கும். மீண்டும் ஒரு மகிழ்ச்சி இன்பம் தரக்கூடிய பொருளுக்கு அல்லது பதவிக்கு நாம் ஆசைபட்டு தாவுகிறோம். நாம் உலகில் காணும் முடிவில்லாத ஆசைகளில் தொடர்ந்து செல்கிறோம்.

உலகில் காணும் பொருள்களின் மீது விருப்பம்கொண்டு ஆசையின் வழியில் மனிதன் சென்றால் அவனுக்கு மன அமைதி என்பது கானல் நீர்தான். அதனால்தான் புத்தர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று மக்களுக்கு உணர்த்தினார். உலகில் காணும் பொருள்களின் மீது ஆசைகள் மனதில் இருக்கும்வரை மனிதனுக்கு மனநிறைவோ மன அமைதியோ கிடைக்காது. நமது பசியைப் போக்க உணவை உண்டு வயிற்றை எப்படி நிறைத்து நிறைத்து காலி செய்துகொண்டு இருக்கிறமோ? அதைப்போல்தான் மனிதன் உலகில் காணும் பொருள்களின் மீது ஆசைகளை மனதில் நினைத்து நினைத்து, நினைவுகளால் நிறைத்து நிறைத்து காலி செய்து கொண்டே இருக்கிறோம். நாம் இந்த இடத்தில் ஆசையுள்ள நமது மனதையும் வயிற்றையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும். நமது வயிற்றுப்பசிக்கு முடிவு இருக்கிறதா? அதேபோல் நமது மனதில் தோன்றும் ஆசைகளுக்கும் முடிவு இல்லை. ஆன்மீக வழியில் செல்லும்போது நமது ஆசைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

நித்தியமான மன நிறைவு அளிப்பது மோட்சம் என்று சித்தர்களும் ஞானிகளும் கூறியுள்ளனர். மனித வாழ்வில் பூர்ண திருப்தி மோட்சம் ஆகும். நம்மில் சிலரிடம் மோட்சத்திற்குப் போகிறாயா என்று கேட்டுப்பாருங்கள். மோட்சம் என்றால் பலர் இப்போது எனக்கு வேண்டாம் என்பதுபோல் மனதில் நினைப்பார்கள். மேலும் அவர்கள் இப்போது எனக்கு மோட்சம் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள். அவர்களிடம் ஏன் மோட்சம் வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் இந்த உலக இன்பமே எனக்குப் போதும் என்றும், இங்கு நாங்கள் வாழ்கிறவரையில் உலகத்தில் உள்ள இன்பங்களை அனுபவித்து விட்டுப் போகிறோம் என்றுதான் கூறுவார்கள். மேலும் அவர்கள் ‘வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் இறந்து போவோம்’ என்ற மனநிலையில்தான் விரக்தியாகக் கூறுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் உலகத்தின் இன்பங்களில் துன்பமும் கலந்து இருக்கும், இன்பமும் துன்பமும் நிரந்தரம் இல்லை என்று அவர்களுக்குத் தெரிந்து இருந்தாலும், உணர்ந்து இருந்தாலும் மன நிறைவு அளிக்கக்கூடிய மோட்சத்தைப் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

மோட்சம் என்றால் மன நிறைவு அல்லது பூர்ண திருப்தி. மனித வாழ்வில் வரும் இன்ப துன்பங்களினால் ஏற்படக்கூடியவைகளை அந்த இன்ப துன்பங்களை எல்லாம் உடலும் உள்ளமும் அனுபவிக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வராது என்பதை உலக இன்பத்தில் மிதப்பவர்கள் யாரும் உணர்வதில்லை. மனித மனங்கள் மேலோட்டமான அல்லது மேல்மனம், உள்மனம் மற்றும் ஆழ்மனம் என மூன்று நிலைகளில் மனம் இருக்கிறது. மோட்சம் அடைவதால் மன நிறைவு கிடைக்கும் என்று மனிதனுடைய மேலோட்ட மனம், அறிந்திருந்தாலும் அதனை அது விரும்புவதில்லை ஆனால் மனிதனிடமுள்ள ஆழ்மனம் மோட்சத்தை பற்றி நன்கு உணர்ந்து கொள்கிறது.

ஆழ்மனத்திற்கும் மேலோட்டமான மனதிற்கும் என்ன வேறுபாடு அதனை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை ஒரு உதாரணம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவர் தன்னோட மகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று அல்லும் பகலும் கவலைப்பட்டுக் கொண்டு முயற்சி செய்து, மகள் திருமணத்தை கடன் வாங்கி கஷ்டப்பட்டு முடித்து விடுகிறார். தன்னுடைய மகள் திருமணத்தை முடித்து விட்டோம் என்ற மனநிறைவு ஏற்பட்டு அவருடைய ஆழ்மனதில் பதிவு பெற்று மகிழ்ச்சியும் கொள்கிறார். ஆனால் அவரின் மேலோட்டமான அல்லது மேல்மனதில் மகள் வாழ்வைப் பற்றி ஒருவிதமான மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

அதாவது நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு மகளுக்குத் திருமணம் முடித்து வைத்திருக்கிறோம் இந்த மாப்பிள்ளை ‘தன்னோட மகளை மகிழ்ச்சியுடன் வைத்து காப்பாற்ற வேண்டுமே’ என்ற நினைவுகள் அல்லும் பகலும் அவர் மேலோட்டமான மனதின் ஓரத்தில் சிறிது கவலையுடன் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர் மன அமைதியை இழக்க நேரிடும். அவ்வாறு அவர் தன் மகள் வாழ்வைப் பற்றி எண்ணாமல் ,ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்க்கும்போது தனது மகளுடைய வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நேர்மறை எண்ணத்துடன் மனதில் நம்பிக்கை கொள்ளும்போது, அவருக்கு மகள் வாழ்வு பற்றிய மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெற்று மன அமைதி கொள்கிறார்.

தத்துவம் என்றால் ஆன்மீகத்தில் என்றும் மாறாத நிலையாகும். எந்தவித எதிர்பார்ப்புமின்றி தானதர்மங்கள் போன்ற புண்ணியச் செயல்களை செய்பவர்கள் இன்பம் அடைவதும், தங்கள் மகிழ்ச்சிக்காக பொய்கூறல், புறங்கூறுதல், கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்கள் செய்பவர்கள் அனைவரும் உலகில் துன்பங்கள் அடைவதும் இயல்பு. இந்த தத்துவ வார்த்தைகள் என்றும் நிலையானது. இந்த வருடம் தானதர்மங்கள் போன்ற புண்ணியச் செயல்கள் செய்பவர்களுக்கு மட்டும்தான் இன்பம் சுகம் மோட்சம் கிடைக்கும். அடுத்த வருடம் புண்ணியச் செயல்கள் செய்பவர்களுக்கு மோட்சம் சுகம் போன்றவை கிடைக்காது என்பது ஆன்மீக தத்துவ வார்த்தைகள் எதுவும் இல்லை.

அதேபோல் இந்த வருடம் மட்டும் பாவச்செயல்களை செய்பவர்களுக்கு துன்பம் துயரம் போன்றவை இல்லை என்றும் அடுத்த வருடம் பாவச் செயல்களை செய்பவர்களுக்குத்தான் துன்பங்கள் வரும் என்பதை ஒரு கற்பனையாக நினைத்துப் பாருங்கள். உலகில் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் மட்டும் பாவங்கள் பெருகி, உலகில் அதர்மங்கள் பெருகிவிடும். எனவே ஆன்மீக தத்துவங்கள் எக்காலத்திலும் எந்நிலையிலும் மாறுவதில்லை என்பதை இதன்மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். உலகில் மனிதர்கள் தனக்கு வரக்கூடிய பலன்களைப்பற்றி எதிர்பாராமல் தானதர்மங்கள் போன்ற புண்ணியச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் வாழ்வில் எக்காலத்திலும் இன்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அவர்கள் ஆன்மீக வழியில் மன அமைதியையும் பெறுவார்கள். அதேபோல் பாவச்செயல்கள் செய்பவர்கள் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்க வேண்டும் மன அமைதியை இழக்கவேண்டும் என்பது உலக நியதியாகும். எனவே புண்ணியச் செயல்கள் மேற்கொள்பவர்களிடம் மன அமைதி தேடி வரும் என்பதை புரிந்து கொண்டு, ஆன்மீக வழியில் தானதர்மங்களில் மனம் ஈடுபடும்படி மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். (அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (4-Oct-21, 10:13 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 93

மேலே