உலகக்கொள்ளை
ஒருவர் கொள்ளையடித்தால் பிடித்து சிறையில் அடைக்கலாம். தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மனிதர்களும் கொள்ளையர்களாக இருந்தால் என்ன செய்ய முடியும்?
டிஜிட்டல் பரிவர்த்தனை வந்த பிறகு எவ்வளவுக்கு எவ்வளவு பணம் பகிர்ந்துக்கொள்ள முடிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது. ஆன்லைன் வேலை தருவதாக சொல்லி 10 சதவீதம், 20 சதவீதம் கமிஷன் தருவதாக சொல்லி மிக எளிதாக ஆசை காட்டி உங்களிடம் உள்ள பணத்தை சுருட்டிக் கொண்டு உங்களையே வந்து பார் மல்லுக்கு என்றிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வங்கிகளை என்ன சொல்லுவது?
நீங்கள் ஒரு ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்டவராக இருந்து அது குறித்து சைபர் கிரைம்மில் புகார் அளிப்பீர்கள் என்றால் மோசடி செய்த நபர்களை விட நீங்களே குற்றவாளிகள் போல் நடத்தப்படுவீர்கள். அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் தொல்லையில் நீங்களே வழக்கை வாபஸ் பெறும் மனநிலைக்கு வந்து விடுவீர்கள்.
குற்றவாளிகளை கண்டு நாம் தான் பயப்பட வேண்டியுள்ளது. அவர்கள் லட்ஷக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு அடுத்த கொள்ளைக்கான வலையை விரிக்கத் தொடங்குகிறார்கள். வாட்ஸாப், பேஸ்புக், கூகிள் விளம்பரங்கள் போன்ற தளங்களே இணைய மோசடிகளுக்கு பாலம் அமைத்து தருகின்றன. கூகிள் வழியாக ஒரு விளம்பரம் செய்யப்படுகிறது என்றால் அந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மை குறித்து பரிசோதிப்பது இல்லை. இதனால் பயனர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் நிச்சயமற்ற நிலையிலேயே நீடிக்கிறது.
இங்கு நம்மை பயன்படுத்தி சம்பாதிக்கும் புத்திசாலிகள் அதிகமாகி கொண்டே போகிறார்கள் என்பதே உண்மை. ஒரு பதிப்பகத்தின் வழியாக உங்கள் புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக வெளியிடலாம் என்று சொன்னால், அதை நம்பி நாமும் வெளியிட்டால் நம் புத்தகத்தை எத்தனை பேர் வாங்கியுள்ளார்கள் என்கிற உண்மையான கணக்கை நமக்குக் காட்டுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை. உங்களிடம் யாராவது இலவசமாக சேவை செய்கிறோம் என்று சொல்வார்கள் என்றால் அங்கு உண்மையான விலை பொருட்கள் நீங்களும், நீங்கள் அளிக்கும் தகவல்களும் தான்.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் என்று எந்த சமூக வலைதளங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் உண்மையான விளைபொருள்கள் நாம் தான். யுட்யூப்’ளில் விடியோக்கள் பார்க்கிறோம். விளம்பரங்கள் வருகின்றன. அதில் எத்தனை விளம்பரங்கள் உண்மையானவை? எத்தனை யுட்யூபர்கள் நியாயமான சரியான விடயங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள்?
பேஸ்புக் வாட்ச் மூலம் பேஸ்புக்-இன் வருமானம் பலமடங்குகளாக பெருகியுள்ளது. உங்களின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் மொபைல் ரீசார்ஜ்-காக பயன்படுத்துகிறீர்கள். அவையெல்லாம் அந்த சமூக வலைத்தளங்களின் வருவாயாக மாறுகிறது. இதன் மூலம் நாம் அடையும் பயன் என்ன?
ஊரான் மனைவி, பெண் பிள்ளை ஆடுவதை மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துவிட்டு மொபைல் டேட்டா-வையும் இழந்து நம் பொன்னான நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். காரணம் நாம் சோம்பேறிகளாக மாறிவிட்டோம். புத்தகங்களை படிக்கமாட்டோம். ஆனால் வீடியோக்களை அதிகம் பார்ப்போம். இந்த மெண்டலிட்டி-யை புரிந்த பேஸ்புக், யுட்யூப், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் வளர்ந்து வருகிறார்கள். யுட்யூப்-பில் வீடியோ போடுவதற்காக சைக்கோத்தனத்தின் உச்சக்கட்டத்தை அடைவதைக் காண முடிகிறது.
ஆக கொள்ளையர்களால் கொள்ளையர்களே வீழ்ந்து கிடக்கும் அவலமான சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அவன் அப்படித்தான் வீடியோ போடுவான், நீ ஏன்டா பார்க்கிறாய் என்று நம்மை வறுத்தெடுக்கும் கூட்டம் இங்கே அதிகம். தன் தவறை உணர்ந்து திருந்த இயலாதவன் நீ மட்டும் யோக்கியமோ என்ற விமர்சனத்தை முன் வைத்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வழியமைக்கிறான். இதுவும் அரசியல் எனப்படும்.
பிடுங்கி தின்றே பழகியவர்களுக்கு உழைத்து உண்ண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமெல்லாம் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆதலால் நாமே விழிப்போடு ஜாக்கிரதையாக எதையும் செய்யும் முன் தீர ஆராய்ந்து செய்யவேண்டும். இல்லையெனில் வெட்டப்படும் ஆடுகளாக நாம் இருப்போம்