காந்தியடிகள்
முன்னுரை :
அன்பையும் மனிதநேயமும் அகிம்சையும் தியாகத்தையும் வாய்மையையும் பேசுதல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காந்தியடிகள். இவர் எல்லோராலும் "தேசத்தந்தை " என போற்றப்பட்டார்.
இந்தியா மட்டுமன்றி உலகமே வியந்து போற்றும் தலைவராக விளங்கியவர். இவர் வாழ்க்கை இளைய தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.
பிறப்பும் கல்வியும்:
இவர் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி தாய் புத்திலிபாய் அம்மையார் ஆவார்.
தாயிடமிருந்து இறைநம்பிக்கையையும் அன்பு செலுத்துவதையும் கற்றுக் கொண்டார்.காந்தியடிகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு சராசரி மாணவராக திகழ்ந்தார். பின்னர் இங்கிலாந்து நாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்தார்.
திருமணமும் பணியும் :
காந்தியடிகள் தனது பன்னிரண்டாம் வயதில் கஸ்தூரிபாய் அம்மையாரை மணந்தார். பத்தொன்பதாம் வயதில் மனைவியைப் பிரிந்து வழக்கறிஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார்.
பட்டம் பெற்ற காந்தியடிகள் இந்தியா திரும்பினார். மும்பையில் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். பின் தென்னாப்பிரிக்கா சென்று பணியாற்றினார். காந்தியடிகள் தன் இளமைகாலத்தைப் பெரும்பாலும் தென்னாப்பிரிக்காவிலேயே கழித்தார்.
பொதுச்சேவை :
1893 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டுவரை தென்னாப்பிரிக்கா வில் வழக்கறிஞர் பணி செய்து வந்தார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து தென்னாப்பிரிக்கா வில் இந்தியருக்கு எதிராக நிறவெறிக் கொள்கை நிலவி வந்தது. அதைக்கண்டு காந்தியடிகள் நெஞ்சம் கொதித்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் காந்தியடிகளை தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஆங்கிலேய அரசோ காந்தியடிகளை பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது.
இந்திய விடுதலைப் போராட்டம் :
1914ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தியடிகள் இந்திய சுதந்திரத்திற்காக போராடும் துணிவு கொண்டார். பால கங்காதர திலகரின் மறைவுக்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் திலகரைப் போன்று தீவிரவாத முறைகளை கையாளாமல் அகிம்சை வழியை பின்பற்றினார்.
மிதவாதப் போராட்டத்தை நடத்தி வந்த கோபால கிருஷ்ண கோகலேயை தன் குருவாக ஏற்றுக் கொண்டார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்த அதே வேலையில் இந்தியாவில் நிலவி வந்த மதவேறுபாடு தீண்டாமை பெண் அடிமைத்தனம் போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுத்தவர்.
சத்தியாகிரக இயக்கம் :
1930 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் உப்பின் மீதான வரியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார்.
முடிவுரை :
இந்திய நாட்டின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த அந்த மகாத்மா 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் தாயகத்திற்காக வாழ்நாளை கழித்த உத்தமர் காந்தியடிகள் இறந்த தினம் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
காந்தியடிகள் மறைந்தாலும் அவரின் புகழ் உலகம் முழுவதும் மணம் வீசி வருகிறது என்பதை மறுக்க முடியாது.