கரம்போலக் கள்ளநோய் காணும் அயலைந்தும் - சிறுபஞ்ச மூலம் 61

நேரிசை வெண்பா

அரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு
மரம்போன் மகன்மாறாய் நின்று - கரம்போலக்
கள்ளநோய் காணும் அயலைந்தும் ஆகுமேல்
உள்ளநோய் வேண்டா உயிர்க்கு 61

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

அரம்போல் தன்னைத் தேய்க்கின்ற உறவும். தனக்கடங்காத மனைவியும் அடங்காதன செய்யும் அடிமையும், மரம் போன்ற தன்புதல்வனும் மாறுபட்டு நின்று நஞ்சுபோல வஞ்சனையாகிய நோயைச் செய்கிற அயலிருப்பும் ஆகிய இவ்வைந்தும் உளவாயின் உயிர்களுக்கு மற்றொரு மனப்பிணி வேண்டப்படாது!

கருத்துரை:

அரம்போலுஞ் சுற்றம் முதலிய ஐந்துமே மக்கட்கு, உள்ளக் கவலையை விளைத்தற்குப் போதும்.

காணும் மயல் எனக்கொண்டு, ஏற்படத்தக்க அன்னிய மாதரின் மயக்கம், என்றலும் ஒன்று;
வியக்கத் தொண்டு என்பதற்குப் பாராட்ட அதன் பொருட்டுப் பணிபுரியும் அடிமையாளும் என்பதுமாம். கிளைத்தல் - யெருகல்; இஃது ஆகுபெயராய் நெருங்குதலையுடைய உறவினரை யுணர்த்தி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-25, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே