ஒற்றைத் துணியின்று உழலலும் உற்ற வினையின் பயனின் விளைவே - விதி, தருமதீபிகை 899

நேரிசை வெண்பா

கொற்றக் குடைகவித்துக் கோவாய் நிலவலும்
ஒற்றைத் துணியின்(று) உழலலும் - உற்ற
வினையின் பயனின் விளைவே; அயலே
நினையின் உறுவ தெவன் 899

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வெண்கொற்றக் குடைகவித்து அரியணையில் அமர்ந்து சிறந்த அரசனாய் ஒருவன் உலகை ஆளுதலும், உடுத்த ஒரு கிழிந்த துணியுமின்றி ஒருவன் இழிந்து உழலுதலும் வினையின் விளைவுகளே; இவற்றை ஈண்டு உணர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்வில் மனிதருடைய நிலைகள் பலவகைகளில் மாறுபாடாய் வேறுபட்டு விரிந்து நிற்கின்றன; உருவ பேதங்களைப் போலவே வாழ்விலும் பேதங்கள் பெருகியுள்ளன.

சிலர் இயல்பாகவே வளங்கள் பல வாய்ந்து சுகமாய் வாழுகின்றனர்.
சிலர் சிறிது முயன்று பெரிதும் உவகையராய் உலாவுகின்றனர்.

சிலர் வருந்தி உழைத்து அருந்திய அளவில் சீவிக்கின்றனர்,
பலர் படாதபாடுகள் பட்டும் பசியும் பட்டினியுமாய்ப் பதைக்கின்றனர்.

பலர் அவல நிலைகளில் கவலைகளாலிழிந்து மறுகி யுழலுகின்றனர்.
யாதும் இல்லாமல் பலர் அல்லலாய் அலமந்து திரிகின்றனர்.

ஒத்த பிறப்பினையுடைய மக்களிடம் இத்தகைய வேறுபாடுகள் ஏறி நிற்கின்றன; இந்நிலைகளுக்குக் காரணம் என்ன? வெளியே காணப்படுகிற காரியங்களுக்கெல்லாம் பூரணமான காரணங்கள் உள்ளே மருமமாய் மறைந்திருக்கின்றன.

தாம் செய்த வினைகளின் அளவே பலன்கள் விளைந்து வந்துள்ளன; அந்த வினைப் போகங்களை மாந்தர் முறையே நுகர்ந்து வருகின்றனர். அந்நுகர்வில் வேறுபாடுகள் தெரிய நின்றன. இனிய சுகமும் கொடிய துக்கமும் வினையின் விளைவுகள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தழைவிரி கற்ப நாடு சார்தலும், புவியில் யாரும்
விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழ் ஆமால்;
பிழைபட நிரயத்(து) ஆழ்ந்து பெருந்துயர் உறலும், மண்மேல்
குழைமிடி ஆதித் துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே.

- குசேலபாக்கியானம்

வினைகளின் பயன்களை இது நன்கு விளக்கியுள்ளது.

இம்மையில் நல்ல சுகபோகங்களை அனுபவித்தலும், மறுமையில் தேவ போகங்களை அடைதலும் நல்வினையால் அமைகின்றன; இங்கே வறுமை நோயால் வாடி உழலலும், பின்பு கொடிய நரக துன்பங்களில் அழுந்தி வருந்தலும் தீவினையால் நேர்கின்றன. சீவிய நிலைகள் சிந்தனைக்கு வந்தன.

தாம் செய்த கரும பலன்களையே யாவரும் அனுபவிக்க நேர்ந்துள்ளனர். விரும்பினும் விரும்பாவிடினும் தம்மைச் செய்தவரை இம்மியும் தவறாமல் செம்மையாய் வந்து அவை சேர்ந்து கொள்ளுகின்றன. அவ்வாறு சேர்ந்ததே அனுபவமாம்.

நேரிசை வெண்பா

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது. 62 பழமொழி நானூறு

ஒருமுறை சோழநாடு அரசனை இழந்திருந்தது; உரிய ஒருவனை அடைய விரும்பிக் கழுமலம் என்னும் ஊரிலிருந்த பட்டத்து யானையை அலங்கரித்து அமைச்சர் வெளியே விட்டனர்; அது பல இடங்களையும் கடந்து முடிவில் கருவூர்க்கு வந்தது; தெருவில் நின்ற ஒரு இளைஞனை எடுத்து முதுகில் வைத்துக் கொண்டு போயது: அக்குமரனை யாவரும் வணங்கி அரசன் ஆக்கினர்.

கரிகால் வளவன் என்னும் பெரிய புகழோடு அவன் அரசு புரிந்திருந்தான். முன்னம் அரிய புண்ணியத்தைச் செய்திருந்தமையால் பின்னர் யாதும் கருதாமலே மேலான அரச பதவியை அப்பாலன் எளிதே அடைந்து இன்பம் மீக்கொண்டான்.

நல்ல வினைகளைச் செய்துள்ளவன் எல்லா நலங்களையும் ஒருங்கே எய்திப் பெரும் போகங்களை அனுபவிக்கிறான். அங்ஙனம் செய்யாதவர் யாதும் இல்லாதவராய் அல்லலுறுகின்றனர்.

இன்னிசை வெண்பா

தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற. 105 பழவினை, நாலடியார்

அறிவு, கல்வி, ஆண்மை, சீலம் முதலியவற்றால் மேலான பெரியோரும் வறுமையால் வாடிப் பெருமை குன்றிச் சிறுமை உழந்துள்ளனர்; அதற்குக் காரணம் என்ன? பழவினைப் பயனையிது தெளிவாய் விளக்கியுள்ளது எனப் புலவர் ஒருவர் உள்ளம் உருகி இதனை இவ்வாறு உலகம் அறியப் பாடியிருக்கிறார்.

விதி வகுத்த வழியே மனித வாழ்வு நடந்து வருகின்றது. அது ஆட்டியபடியே யாவரும் ஆடி வருகின்றனர்.

Let us go wheresoever the fates propel us or drive us back. (Virgil)

வினையின் விதிகள் நம்மை உயர்த்தியும், தாழ்த்தியும் உந்தித் தள்ளுகின்றன; அவ்வாறே நாம் போக நேர்ந்துள்ளோம் என இது குறித்துள்ளது. மனித மரபு வினைகளை மருவி வருகிறது.

நினைவு சுகங்களை விரும்புகிறது; ஆயினும் வினையின் அளவு தான் அவை வருகின்றன; ஆகவே நல்ல வினையை ஒல்லையில் செய்து கொள்ளுக; அதனால் இன்பங்கள் உளவாகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-21, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே