மன்னுயிர் இன்னருளை ஈந்து வருதலால் வித்தகர் ஆண்மை வியப்பு - வரம், தருமதீபிகை 889

நேரிசை வெண்பா

மன்னுயிர் இன்பம் மருவி வரும்வகையே
தன்னுயிரைத் தாங்கித் தகவாற்றி – இன்னருளை
எத்திறத்தும் எவ்வழியும் ஈந்து வருதலால்
வித்தகர் ஆண்மை வியப்பு 889

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிற உயிர்கள் இன்புறும் வழிகளையே எவ்வழியும் நாடித் தன்னுயிரைத் தாங்கி நன்னயங்கள் புரிந்து அருள் நீர்மையோடு யாண்டும் நலம் செய்து வருதலால் உபகாரிகளுடைய வாழ்வு உயர்ந்த வியப்புடையதாய்ச் சிறந்த புகழோங்கியுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அயலே சூழ்ந்த சூழலின்படியே மனிதனுடைய வாழ்வு இயல்பாய் மருவி வருகிறது. மக்கள் பெரும்பாலும் மாக்களிலும் கீழாக இழிந்து உழலுகின்றனர். மடமை, கொடுமை, பொறாமை, குரோதம் முதலிய இழி தீமைகளே யாண்டும் நீண்டுள்ளன. பொல்லாத இந்தப் புல்லிய கூட்டத்தினிடையே நல்ல ஒரு நீர்மையாளன் சீர்மையாய் வாழ்ந்து வருவது மிகவும் அரிதாம். மையல் வாழ்வுகள் வெய்ய புலைகளில் விரிந்துள்ளன.

சிறப்பும், செல்வமும், மதிப்பும், சுகமும் தனக்கே வேண்டும் எனறு ஒவ்வொருவரும் எவ்வழியும் வெவ்விய பேராசையோடு பெருகித் திரிகிற நரர்கள் நடுவே பிறர்க்கு இதத்தை நாடுகிறவர் பெரிய ஒரு தெய்வப் பிறவியாய்ச் சிறந்து திகழ்கின்றார்.

கொடிய சுடு வெயிலைத் தன் மேல் தாங்கி இனிய குளிர் நிழலைப் பிறர்க்கு உதவுகிற தருக்கள் போலத் தரும சீலர்கள் தழைத்து நிற்கின்றனர். அத்தகைய உத்தமர்களே வித்தகர் என விளங்கி எத்தகைய நிலைகளிலும் துலங்கி வருகின்றார்,

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்(கு) அல்லால் அரிது. 235 புகழ்

ஆக்கமும் கேடும் வாழ்வும் சாவும் இதில் வந்திருக்கின்றன.

கேடால் ஆக்கமும், சாவால் வாழ்வும் விளைக்க வல்லவரே வித்தகர் என வள்ளுவர் இங்ஙனம் விளக்கி யிருக்கிறார். இந்த வித்தகம் இங்கே உய்த்துணர்ந்து சிந்திக்கத்தக்கது.

எண்ணற்(கு) ஏற்ற வித்தகர் உளரே? (இரணி, 182)

வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் 33 வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம்

வித்தகர் நிலையை இவை உணர்த்தியுள்ளன; வித்தக வில்லினான் என இராமனை இவ்வாறு சித்திரமாய்ச் சொல்லியுள்ளார்.

ஒருவனுடைய அறிவு ஆற்றல்களுக்கு உரிய உயர்ந்த பயன் பிற உயிர்களுக்கு இதம் புரிவதே, இந்த உண்மையை ஈண்டு நுண்மையாக அறிந்து கொள்கிறோம்.

மன்னுயிர்க்கு இதம் செய்வது தன் உயிர்க்கே நலமாய் விளைந்து வருகிறது. விளைபுலத்துக்கு உரம் போடுவது போல் எளியவர்க்கு உதவி புரிவது. உரம் செய்த நிலம் வளமாய் உயர்ந்து விளைகிறது; உதவி செய்தவன் நலமாய் உயர்ந்து யாண்டும் உன்னத பதவிகளை அடைந்து கொள்ளுகிறான்.

நேரிசை வெண்பா

உரம்செய்த நன்செய் உயர்ந்து விளைந்து
வரம்செய்(து) அருளும் வளங்கள் - தரம்செய்து
பேணும் மனிதன் பெருமையாய் எவ்வழியும்
காணும் மகிமை கனிந்து - கவிராஜ பண்டிதர்

ஒருவன் மேலான மகிமைகளை அடைய வேண்டுமானால் அவன் என்ன செய்ய வேண்டும்? என்பதை இது இனிது காட்டியுள்ளது. பிறர்க்கு இதம் புரிவது பெருந்திருவாய் வருகிறது. பயிர் நீரால் வளர்கிறது; உயிர் நீர்மையால் உயர்கிறது.

தனக்கே சுகமும் புகழும் வேண்டும் என்று சுயநலமாய் அவாவி அலைபவர் துக்கமும் இகழ்வும் அடைகின்றார்; பிறர்க்கு இரங்கி அருள்பவர் புகழும் புண்ணியமும் இயல்பாய் எய்தி எவ்வழியும் திவ்விய பேரின்ப நலன்களைப் பெறுகின்றார்.

இந்த விசித்திர நிலைகளை உய்த்துணர்ந்து உய்தி பெறுபவர் உத்தம விவேகிகள் ஆகின்றார். பொய்யான மாய மயக்கங்களில் மருண்டு தொலையாமல் மெய்யான ஆன்ம வுறுதியை மேவி மகிழுக என்றும், இனிய இதம் அரிய பெரிய பதவியை அருளுகிறது என்றும் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-21, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே