வாழ்க்கை பயணத்தை மேலும் மகிழ்ச்சியாக்குவோம்
அனேகமாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து வரும் இயல்பான சம்பவம் ஒன்று என்னவென்றல் நாம் பயணம் செய்கையில் கொள்ளும் சினேகங்கள். லோக்கல் பஸ்ஸில் ரயிலில் செய்யும் நித்திய பயணத்தை தவிர மற்ற தொலை தூர பயணங்களின் போது நாம் பலபேர்களை சந்திக்கிறோம். ஒரு இரண்டு மணி நேரம் முதல் அதிகமாக 28 - 30 மணிநேரம் வரை கூட அறியாத ஒரு சில பேர்களுடன் பயணம் செய்து வருகிறோம். நீங்க எங்கே போகணும், உங்க ஊர் எது என்று ஆரம்பித்து சில நேரங்களில் ஒருவர் பெயரை கூட இன்னொருவர் தெரிந்துகொள்ளமல் கூட மணிக்கணக்கில் அவர்களிடம் உரையாடுவோம். நம்மை போலவே அவரும் நம்மிடம் இதைபோல் பல விஷயங்களை பற்றி பேசுவார். அவரவர் ஸ்டேஷன் ஸ்டாப் வந்தவுடன் நமக்கு சொல்லிக்கொண்டோ இல்லை சொல்லாமலோ அவர் இறங்கி சென்று விடுவார். நாமும் அதை போலத்தான். சில நேரம் அரிதாக ஒருவர் இன்னொருவர் போன் நம்பரை வாங்கி கொள்வார்கள். அந்த ஸ்டேஜ் வரையிலும் பயண உறவு இட்டு செல்லும். ஆனால் பொதுவாக இப்படி வாங்கி கொண்ட போன் நம்பர்கள் டிக்கெட்க்கு பின்னாடியோ அல்லது ஒரு பிட் பேப்பரிலோ அல்லது செல் போனிலோ எழுதிக்கொள்ளப்படும். அவரவர் அவர்களின் இடத்தில இறங்கி சென்ற பின் அவர் யாரோ நாம் யாரோ அவ்வளவே. அவர் போன் நம்பர் குறிப்பிடப்பட்ட டிக்கெட் அல்லது காகிதம் ப்ளட்போர்ம் அல்லது குப்பை தொட்டிகளில் விழுந்து அவைகளின் கடைசி யாத்திரைக்கு சென்று விடும். செல் போன் இல் ஏற்றப்பட்ட நம்பர் கொஞ்ச நாட்களில், சில சமயம் கொஞ்ச மாதங்களுக்கு பிறகு மற்ற தேவை இல்லாத நம்பர்களுடன் டெலிட் செய்யப்படும். ஒரு வேளை ஒருவருடன் கூட பிரயாணம் செய்தவர் ஒரு பெண்மணியாக, குறிப்பாக சொல்லவேண்டுமெனில், இன்னொருவர் கண்ணுக்கு கொஞ்சம் அழகான பிடித்த மாதிரி இருப்பின், அந்த பெண் ஒருவேளை அவளது போன் நம்பரை தந்திருந்தால், இன்னொருவர் அவளுடன் மீண்டும் போனில் பேச கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அந்த பெண் அவரை அந்த அளவுக்கு கண்டுகொள்ளவில்லை என்றால் முடிந்தது. இப்படி பட்ட சிநேகங்கள் மிக மிக குறைவே.
நல்லது. நான் இந்த பயணங்களை பற்றி சொல்லவருவதின் காரணத்தை இப்போது அலசுகிறேன்.சில மணித்துளிகள் நாம் நமக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வளவு விஷயங்களை கதையளந்து கொண்டு செல்கிறோம். ஆனால் இருவரும் கண்கூடாக பார்த்தால் இரு வழிப்போக்கர்கள். அவ்வளவே. அவரவர் இடம் வந்த பின் அவர் யாரோ, நாம் யாரோ. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிடுகிறோம். ஆனாலும் அந்த குறுகிய கால கட்டத்தில் இருவரும் மிக உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவர் எண்ணங்களை இன்னொருவரிடம் பரிமாறி கொள்கிறோம். இந்த விஷயங்கள் 99 % வரை மேம்போக்கான உரையாடல்களாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் ஒருவர் இன்னொருவருடன் மிகவும் பரஸ்பரமாகவும், தோழமையாகவும் கோபப்படாமல் இருப்பது. ஏதோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம், சாமான்களை ரயில் பெட்டியின் உள்ளே வைப்பதில் அல்லது ஜன்னல் பக்க இருக்கை அவரது எனும்போது நாம் அங்கே அமர்கையில் இப்படி சில சின்ன சின்ன விஷயத்தில் ஏதேனும் வாய் வார்த்தை ஏற்பட்டால் அந்த பயணத்தில் அந்த நபருடன் சுமுகமாக இருப்பது அவ்வளவு சாத்தியமாக இருக்காது. இந்த விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்க்கையில் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் சாத்தியமே.
இதிலிருந்து ஒருவர் ஒரு நீதியையோ நெறியையோ சொல்ல முன்வரலாம். என்ன அது? சில மணி நேரங்கள் சேர்ந்து பயணிக்கும் சில பேருடன் அவ்வளவு லகுவாக சரளமாக உற்சாகமாக இருக்கையில், நம்முடனேயே இருக்கும் நமது வாழ்க்கை துணை, நம் பிள்ளைகள், நம் சகோதர சகோதரிகள் , அலுவலகத்தில் நம்முடன் சேர்ந்து பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டில் பலவருடங்களாக இருக்கும் மனிதர்கள் இவர்களுடன் நாம் எப்பேர்ப்பட்ட அருமையான உறவை கொள்ள வேண்டும்? ஆனாலும் இந்த உறவுகள் பயண உறவுகள் மாதிரி முழு நேரமும் மனதிற்கு பிடித்தது போல் அமைவதில்லை. வீட்டில் வாழ்க்கை துணையிலிருந்து ஆரம்பித்தால் நாம் அன்றாடம் பழகும் பலரிடமும் நாம் நடந்து கொள்ளும் தோரணை , பேசுகின்ற விதம், காட்டும் மதிப்பு மற்றும் மரியாதை இவை அனைத்தும் நம்முடைய இயல்பு நிலைகளை, அதாவது நம் அப்போதைய உணர்வுகளையும் பாவங்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக அமைகிறது. இன்னும் கொஞ்சம் விலாவாரியாக கூற வேண்டும் என்றால் நாம் இவர்களிடம் அன்பு கொண்டிருந்தாலும் அவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதம் அதை எப்போதும் பறை சாற்றுவதில்லை. வாழ்க்கை துணையிடம் தினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக கடிந்து கொள்கிறோம். இதனை நமது கோபமான சொற்களாலோ அல்லது செயலினாலோ அல்லது அவர்களை மதிக்காமலிருக்கும் ஒரு வெளிப்பாட்டிலோ பட்டவர்த்தனமாக தெரியப்படுத்துகிறோம். நமது சுபாவத்தால் அல்லது அன்று அலுவலகத்தில் நடந்த கசப்பான அனுபவத்தின் விளைவினாலோ இது போன்ற வேறு சிந்தனைகளினாலோ நம் பிள்ளைகளையும் கடித்து கொள்கிறோம். சில நேரங்களில் நாம் செய்தது தவறு என்று நமக்கு நன்றாகவே புலப்படும். ஆனாலும் நாம் நம்முடைய பொறுப்புள்ள நிலை தரும் உரிமையில் நாம் எவரிடமும் பொதுவாக மன்னிப்பு கேட்பதில்லை. ஒரு வேளை மனைவியை அல்லது பிள்ளைகளை கைநீட்டி அடித்துவிட்டால் ஒரு சின்ன மன்னிப்பு அவர்களிடம் கேட்போமா என்னவோ. இந்நாட்களில் வீடுகளில் ஒருவரை அடித்து கோபத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் வெகுவாக குறைந்துவிட்டது என்று சொல்லலாம். இது காலத்தின் மாற்றமாகவோ அல்லது சமூகத்தில் ஏற்பட்டு வரும் முன்னோக்கு சிந்தனைகளின் விளைவாலும் இருக்க கூடும். ஏறக்குறைய 20 வருடங்கள் பிள்ளைகள் நம்முடன் வாழ்கின்றனர். வாழ்க்கை துணையோ நம்முடன் இறுதி வரை வரும் துணை. அது 30 ,40 50 வருடங்கள் வரைகூட இருக்கலாம். அது போல அலுவலகத்தில் நாம் பழகும் சக ஊழியர்களுடன் நாம் 20 , 30 ஏன் 40 ஆண்டுகள் வரை சேர்ந்து பணி புரியவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்க நாம் இவர்களுடன் எவ்வளவு அருமையான அன்பான அற்புதமான உறவை வளர்க்க வேண்டும்! அதற்கு பதிலாக ஆங்கில பழமொழி " contempt breeds familiarity " என்பது போல் இவர்கள் எல்லாம் நான் தினமும் பார்ப்பவர்கள் பழகுபவர்கள் தானே, இவர்களுக்கு என்ன பெரிய தனி மரியாதை, மதிப்பு எல்லாம் என்ற நினைப்பு நமக்கு தெரிந்தோ தெரியாமலேயோ நம்முள் ஊடுருவிவிடும்.
புதிதாக தெரியாத மனிதரிடம் நாம் காட்டும் அன்பை, மரியாதை,கௌரவத்தை விட தினமும் பழகும் நம் உறவுகள் மற்றும் தோழமைகளுக்கு அதிக அளவில் காட்டுவதுதானே முறை. அதுதானே மனித நேயம். அதற்காக, உரிமையோடு கடிந்து கொள்வதை விட்டு விடுங்கள், இத்தகைய உறவுகளின் இயற்கை தன்மைகளை விட்டு கொடுத்து விடுங்கள் என்றும் நான் சொல்லவில்லை. இயற்கையான அணுகுமுறை என்றுமே நல்லது தான் , நம்முடன் வாழ்பவர்களும் அதைத்தானே விரும்புவார்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள். கட்டிய துணையிலிருந்து ஒட்டாத மனிதர்கள் வரை " மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு" என்ற அணுகுமுறையை கை ஆளுங்கள். எனது இந்த பதிவின் நோக்கம் அதுவே!
நான் பல வருடங்களாக கையாண்டு வரும் ஒரு நல்ல செயலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால் என் மனைவி குழந்தைகளின் பிறந்த தினம் என்றால் அவர்களுக்கு புத்தாடை வாங்கி தருவது. பிறந்த தினம் அன்று அவர்களுக்கு பிடித்த பலகாரத்தை வீட்டில் செய்வது அல்லது வெளியிலிருந்து தருவித்து இதை தவறாமல் செய்து வருகிறேன். வேறு குடும்ப உறவுகள் தோழர்கள் இவர்களின் கல்யாண நாள் மற்றும் பிறந்த நாட்களில் இவர்களை தொலைபேசியிலோ வாட்சப்பிலோ வாழ்த்துவது. குறிப்பாக நான் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு கவிதை அல்லது அவர்களை பற்றிய நல்ல விஷயங்களை ஒரு சின்ன தொகுப்பாகவோ செய்து அனுப்பி வருகிறேன். இந்தமாதிரி வாழ்த்து மடல்கள் இதுவரை 1000 கும் மேலாக செய்து அனுப்பி இருக்கிறேன். இன்னும் இந்த சிறப்பு படைப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை பார்ப்பவர்கள் எப்போதும் மிக்க மகிழ்ச்சியுடன் இதற்கு பதில் அளித்து வருகிறார்கள். என்னை பாரட்டுகிறார்கள் என்பதையும் நான் குறிப்பிட தேவையில்லை . நீங்களும் இந்த நுட்பத்தை முயற்சித்து பார்க்கலாமே? இதனால் உங்களது கற்பனை சக்திக்கு நல்ல உணவு கிடைக்கும் தவிர உங்களுக்கும் இவைகளை செய்கையில் மனமாற்றமும் ஒரு தன்னிறைவு இருக்கும். உங்களின் மகிழ்ச்சியும் மேலும் கூடும் என்பதில் சிறு துளி கூட சந்தேகம் இல்லை.
அருமை வாசகர்களே நீங்களும் நானும் கூட இந்த மனித நேயத்தின் தோழமைகள் தானே? எனவே நாம் ஒவ்வொருவரும் ரயில், பஸ் தற்காலிக வழிபோக்குனர்களிடம் காட்டும் அன்பை பண்பை நம் அனைத்து உறவுகளிடமும் காட்டுவோம், அதை விட இன்னும் அதிகமாகவே காட்டுவோம். யாருக்கு, எங்கே, எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத இந்த இயந்திர உலகில் உள்ள காலம் வரை நம்மோடு உள்ளவர்களிடம் அவர்கள் உள்ளவரை நம்மை அன்பு மற்றும் நன்றி அறிதலோடு நினைவில் கொள்ளுமாறு நடந்து கொள்வோம். நாம் இதை உணர்வுபூர்வமாக, விழிப்புணர்ச்சியுடன் செய்து வந்தால் நிச்சயம் இது நடைமுறையாகும். இப்போது உள்ள மகிழ்ச்சி அமைதி இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.
சரிதானே இனிய வாசகர்களே! நானும் மேலே கூறியபடி தினசரி வாழ்க்கையில் என்னுடைய கண்ணோட்டத்தை சற்றே மாற்றியமைக்கிறேன். ஏற்கெனவே நான் இதை ஓரளவு கடைபிடித்து அதனால் நல்ல பயன்களும் காண்கிறேன். வாங்க தம்பி, அண்ணாச்சி, தண்ணி அடிப்போம், புகை பிடிப்போம், சீட்டாடுவோம் என்று நான் உங்களை அழைக்கவில்லை. அப்படி என்றால் தயக்கம் ஏன் , மயக்கம் ஏன்? வெறும் ஆளாக இருக்கும் நீங்கள் நல்ல மனிதராக அல்லது மனிதனாக உள்ள நீங்கள் அருமையான மனிதராக மாறுங்கள். உங்களது வாழ்வின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கூட்டுங்கள். மகிழ்ச்சியாக எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம் வாழ்க்கை வெற்றிதான்.ஏற்றுங்கள் வெற்றி கொடி!
ஆனந்த ராம்