வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதலரிது – நாலடியார் 109

இன்னிசை வெண்பா

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது 109

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில் யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்ப மாட்டார்கள்.

எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே;

மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

கருத்து:

இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல் வேண்டும்.

விளக்கம்:

அரிதென்றது, "மனக்கவலை மாற்றலரிது"1 என்புழிப்போல இன்மைப் பொருட்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Oct-21, 2:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே