நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் செய்ந்நன்றி கொன்றாரின் குற்ற முடைத்து – நாலடியார் 111
நேரிசை வெண்பா
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று; வையத் தியற்கை! - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து 111
- மெய்ம்மை, நாலடியார்
பொருளுரை:
கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல் யார்க்கும் பழியாகாது, அஃது உலகத்தின் இயற்கையேயாகும்;
ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றி, காலம் நீடிப் பின் பொய்த்துவிடுதல் ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே! ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை யொப்பத் தீதுடைத்தாகும்.
கருத்து:
இயன்றதை உடனே உதவிடுதல் உண்மை அறம்.
விளக்கம்:
ஓடி - காலந்தாழ்த்தென்னும் பொருட்டு, தன் வினைக்கண் வந்தது, அஃது அவன் செயலாதலின்;
நெடுங்காலம் நம்பி அதுகாறும் வள்ளல் நிலையில் வைத்துப் பெருமைப்படுத்தினமையின் இரப்போர் நன்றி செய்தவராகின்றனராதலின், அவரைப் பொய்த்தல் செய்ந்நன்றி கொல்லுங் குற்றத்தோடு ஒப்பதாயிற்று; அக்குற்றமாவது, கழுவாய் இல்லாத குற்றம்.