செல்வ முடைக்கும் படை மூன்று – திரிகடுகம் 38

நேரிசை வெண்பா

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை 38

- திரிகடுகம்

பொருளுரை:

ஒருவன் தன்னைத் தானே பெருமைப்பட்டு கர்வப்படுவது, பணிவின்றி வீணாக சினத்தைப் பெருகச் செய்வது, விரும்பிய பலவகைப் பொருள்களையும் விரும்புகின்ற சிறுமைத் தன்மை ஆகிய இந்த மூன்றும் ஒருவன் செல்வத்தை அழிக்கும் கருவியாகும்.

கருத்துரை:

தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படையாகும்.

முன்னிய - முற்பட்ட என்பதுமாம்.

தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பதாகும். இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன.

தருக்கல்: being self-conceited etc, போற்று, மெச்சு, ரசி, வியந்து: admire :

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Nov-21, 6:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே