ஆமிடத்தே யாகும் சிறுகாலைப் பட்ட பொறியும் - நாலடியார் 110

இன்னிசை வெண்பா

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு 110

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகளும் குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப் பொருந்தமாட்டா,

உற்ற காலத்தில் உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய காலத்தில் உதவியாகும்;

ஆதலால், ஊழ் வினையால் கெடுங்காலத்தில் வருந்துவது ஏன்?

கருத்து:

ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.

விளக்கம்:

‘ஊன்றாகா' என்பது ஊற்றாகா என நின்றது. ஊன்று - ஈண்டு ஊன்றுகோல்: ஊன்றுகோல் போல் உதவியாகா என்பது கருத்து.

எவ்வளவு துன்புற்றாலும் வினை உருத்து வருத்துமேயல்லது அவ்வுற்ற நேரத்தில் உதவி செய்யாது என்றற்கு அங்ஙனம் கூறப்பட்டது.

உதவி செய்தற்குரிய நல்வினையாயின் உதவும் என்றற்கு ‘ஆமிடத்தே ஆகும்' எனப்பட்டது;

சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கத்தை; ஈண்டுக் கருவியின் நிலையை உணர்த்திற்று.

பொறியும் என்னும் உம்மை எதிரது தழீஇயதாய்ப் பின்னர்ச் செய்யும் ‘வினைகளும் அத்தகையனவே என்பதைப் புலப்படுத்தி நின்றது, என்னை' யெனப்பட்டது.

பயனில்லை யென்றற்கு, பரிவு என்றார்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Nov-21, 6:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே