தன்னுயிர்க்குச் சேமம் தனியாகச் செய்திலனேல் என்ன பயனும் இலன் - இருப்பு, தருமதீபிகை 917
நேரிசை வெண்பா
மண்ணுலகம் எல்லாம் வரைந்து தனிஅரசாய்
விண்ணும் புகழ விளங்கினும் - உண்மையுடன்
தன்னுயிர்க்குச் சேமம் தனியாகச் செய்திலனேல்
என்ன பயனும் இலன். 917
- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை: ஒரு பெரிய அரசனாய் இவ்வுலகம் முழுதும் ஆண்டாலும் தனது உயிர்க்கு இனிய உறுதிநலங்களை மருவிக் கொள்ளவில்லையானால் அப்பிறவியால் அவனுக்கு யாதொரு பயனுமில்லை என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனித மரபுள் மன்னன் பெரியவன்; கருவிலேயே திருவுடையவனாய் உருவடைந்து வந்துள்ளவன்; உலகத்தை ஆளும் உரிமையை இயல்பாக மருவித் தலைமையான நிலையில் தழைத்து நிற்பவன்; அத்தகைய வேந்தனும் தன்பிறப்பின் பயனை உய்த்துணர்ந்து உய்தி பெறானாயின் அப்பிறவி ஊனம் உடையதாய் ஈனம் அடைகிறது. ஆன்மபலன் உறுவதே மேன்மைபெறுகிறது.
ஒருவன் பெற்ற உயர்ந்த பிறப்புக்குச் சிறந்த பயன் பின்பு எந்த உடலிலும் பிறவாமல் செய்து கொள்ளுவதேயாம். எவ்வழியும் வெவ்விய துன்பங்களே நிறைந்துள்ளமையால் பிறவி நீக்கமே பேரின்பமாய் நின்றது. முத்தி என்னும் சொல் பிறவித் துயரிலிருந்து உயிர் விடுதலை பெறுவது என்னும் பொருளை யுடையது. அப்பேறே பேரானந்தமாம்.
முன்னம் செய்த புண்ணியத்தால் அரசனாய்ப் பிறக்கின்றான்; அந்தப் பிறவியில் நெறி வழுவாமல் நீதிமுறை புரிந்தால் மேலும் உயர்ந்த வேந்தனாய்ச் சிறந்து தோன்றுகின்றான்.
சீவர்கள் புரிகிற நல்வினைகள் அவரை முறையே உயர்த்தித் தேவர்கள் ஆக்குமேயன்றிப் பிறவியை நீக்கா; புண்ணிய போகங்களை நுகர்ந்து முடிந்த பின் விண்ணவரும் வேறு பிறவிகளை நண்ணுகின்றனர். பிறத்தலும் இறத்தலும் பிழைத்தலும் உழைத்தலும் விழித்தலும் உறங்கலும் போல் தொடர்ந்து நடந்து வருகின்றன. பிறவித் தொடர்புகள் பேராது படர்கின்றன.
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவது அன்றே தொன்றியல் வாழ்க்கை. - சிலப்பதிகாரம், 80
செய்த வினைகளின்படியே உயிரினங்கள் பிறவிகளை அடைந்து சுழன்று வருவதை இது வரைந்து காட்டியுள்ளது. பொற்படி - பொன் உலகம்; மண்ணுலகில் மருவியுள்ள மாந்தர் எல்லாருக்கும் ஒருவன் வேந்தனாயினும் சாந்துணையும் மேன்மையோடு வாழ்ந்து பின்பு வீய்ந்து போகிறான். அந்த இறப்பு மீண்டும் ஒரு பிறப்பாய் ஈண்டு நீண்டு வருதலால் நிலை தெரிய நின்றது.
ஒருவன் உயர்ந்த புண்ணியத்தைச் செய்தாலும் அது அவனுக்குச் சிறந்த தெய்வப் பிறப்பைக் கொடுக்குமே அன்றிப் பிறவியை நீக்கிப் பேரின்பம் அருளாது. ஆகவே என்றும் அழியாத விழுமிய ஆனந்த நிலையை நாடுகின்றவன் நல்வினைகளையும் அயலே ஒருவி மேலான ஞான நிலையைக் கூடி உயர்கிறான்.
உண்மையான மெய்யுணர்வே ஆன்மாவுக்கு மேன்மையான உய்தி தருகிறது. அந்தத் தத்துவ ஞானத்தைப் பெற்றவனே உத்தமமான முத்தன் ஆகிறான். மண்ணுலக போகமும் விண்ணுலக இன்பமும் வெறும் மாயத் தோற்றங்களாய் அவன் எதிரே தோன்.றுகின்றன. பிறவி தோன்றாதபடிபேணுகின்றான்,
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
புறப்பேறு களைவேண்டி இயற்றுகின்ற புண்ணியத்தைப்
..புவியில் உள்ளோர்
சிறப்பான நல்லறிவு மிகவேண்டும் என்றுமுதல்
..செய்யின் பேறாம்;
இறப்பான ஆபத்து விளைநிலமாய் இருந்துதுயர்
..வேலை ஆகிப்
பிறப்பான நச்சுமர வித்தாகும் பேதைமையைப்
..பிளக்கல் வேண்டும். - ஞானவாசிட்டம்
பிறவித் துயரங்களுக்கெல்லாம் பேதைமையே மூல காரணமாயுள்ளது. மெய்யறிவால் ஆய்ந்து வைய மையல் நீங்கி உய்தி பெறுக எனச் சனக மன்னன் இன்னவாறு குறித்திருக்கின்றார்.
உணர வேண்டியதை உரிமையோடு உணர்ந்து உண்மையாக அடைய வேண்டியதை நன்கு அடைந்து கொள்ளுவதே நல்லறிவுக்கு உரிய பயனாகும். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பதே அறிவு என மனிதனுடைய உயர்ந்த அறிவுக்குச் சிறந்த பலனை வள்ளுவர் இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிறார்.
சரியான பயனை அடையாமல் சாக நேர்ந்தால் மீண்டும் பிறவித் துயரங்களே அடைய நேருமாதலால் பெற்ற பிறப்பு பெரும் பிழையாய் முடிகிறது. தன் உயிர்க்குச் சேமத்தைச் செய்து கொண்டவனது பிறப்பும் இருப்பும் பெரிய மகிமைகளை யுடையனவாய் அரிய கீர்த்திகளைப் பெறுகின்றன.
கட்டளைக் கலித்துறை
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. 3 - 028 திருவிடைமருதுார் மும்மணிக்கோவை, பதினொன்றாம் திருமுறை
பட்டினத்தார் இருந்துள்ள நிலையை இங்ஙனம் குறித்திருக்கிறார். சிவபெருமான் ஆகிய செந்தேனை வாரி உண்டு யாதொரு ஆசையுமின்றி யிருந்தமையால் பிறவி நீங்கிப் பேரின்ப நிலையை அடைந்துள்ளார். ஆன்ம அனுபவமான அவ்வுண்மை உரைகளில் உணர வந்தது. அரிய பிறவி பெற்ற பயன் தெரிய நின்றது.