தீதான வாசனை தீயவனாய்ச் செய்தலால் தீவினையே செய்து உழல்வன் - பிறப்பு, தருமதீபிகை 907

நேரிசை வெண்பா

தீதான வாசனை தீயவனாய்ச் செய்தலால்
ஓதா தனவெல்லாம் ஓதினும் - ஏதும்
திருந்தாமல் அன்னவன் தீவினையே செய்து
வருந்தா(து) உழல்வன் வளர்ந்து. 907

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தீய வாசனைகளையுடையவன் எவ்வளவு வாசித்தாலும் யாதும் திருந்தாமல் தீமைகளையே செய்து செருக்கி வளர்ந்து இழிந்து அழிந்து போகின்றான்; அந்த அழிவுநிலையைத் தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உரிய மனமும், உறவான இனமும், உற்ற சூழலும், பற்றிய பழக்கமும் மனிதனை உருவாக்கி வருகின்றன. சார்ந்த சார்புகள் நல்லனவாயின் அவன் நல்லவனாய் உயர்கிறான்; அல்லனவானால் அவலமாய்த் தாழ்கிறான். உயர்வு தாழ்வுகள் இயல்பாகின்றன.

முன்னைய பிறவிகளில் பழகிய பழக்கம் மூல வாசனையாய் மூண்டு வருகிறது. அது மிகவும் பலமுடையதாதலால் அதன் நிலைமைகளுக்குத் தக்கபடியே மனிதன் நேர்ந்து நிற்கிறான்.

கெட்ட பழக்கம் சிறிது தொட்டாலும் அது உயிரை ஒட்டி எவ்வழியும் துயரையே கூட்டும். பிழையான வழியில் ஒருமுறை நழுவினால் பின்பு தெளிவாய் அவன் வெளியேறி வருதல் மிகவும் அரிது. பழகியது பழமையாய் வளமை வாய்ந்து வருகிறது.

எண்ண அலைகள் ஆகாயம் எங்கணும் நிறைந்திருக்கின்றன. தூய ஞானசீலர்களும் துறவிகளும் யோகிகளும் தவமுனிவர்களும் கருதிய மேலான கருத்துக்கள் மேலே அமுத வெள்ளமாய்ப் பரவி யாண்டும் புனித வாசனைகளை வீசியுள்ளன.

தீயவர்களும், புலையான நிலைகளில் பழகிய புல்லர்களும், பொல்லாத கொலைபாதகர்களும் எண்ணிய எண்ணங்கள் கொடிய நச்சுவிடங்களாய் விரிந்து நெடிது ஓங்கி நிற்கின்றன.

இந்த இருவகை நினைவணுக்களும் முறையே தமக்கு உரியவர்களிடம் வந்து சேர்ந்து பிரியமாய் மருவிக் கொள்ளுகின்றன.

இதமான இனிய உள்ளங்களில் புனித எண்ணங்கள் பொருந்துதலால் அவர் விழுமியராய் உயர்ந்து போகின்றார்: கொடிய நெஞ்சங்களில் தீய நினைவுகள் மாயமாய் வந்து சேர்தலால் அவர் ஈனராயிழிந்து தாழ்ந்து ஊனமாய் உழலுகின்றார்.

இழிவான வழிகளில் சிறிது பழகினும் அந்த அளவில் மனிதன் இழிவுறுகின்றான். பழகியபடியே படிவமாய் முடிவடைகின்றான். புகையிலைத் தூளை முதலில் உல்லாசமாய் மூக்கில் முகர்கின்றான்; மறுநாள் கொஞ்சம் உறுஞ்சுகிறான்; பின்பு அப்பழக்கம் வழக்கமாய் வலிவடைந்து அவனை நன்கு வளைத்துக் கொள்ள நாளும் அதனை நயந்து விழைந்து நுகர்ந்து மகிழ்கிறான். பெரிய மனிதனாயிருந்தவனும் பொடிக்கு அடிமையாய்ப் பொடியன் ஆகிவிடுகிறான். பெரிய பண்டிதரும் அரிய துறவிகளும் அதற்கு அடியராய் அலமந்து உழலுகின்றனர். எல்லாவற்றையும் வெறுத்து விட்டு உலகத்தைத் துறந்து போன சந்தியாசிகளும் பொடியை விடமுடியாமல் மடி தழுவி மருவி வருதலால் கெட்ட பழக்கத்தின் வலிமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம். தொட்டது தொடர்ந்து கொள்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

பொன்னைவிட்டேன் பொருளைவிட்டேன் பூமிமுதல் யாவையுமே
..போக விட்டேன்;
மின்னைவிட்ட மனைவியையும் மேலான மக்களையும்
..வெறுத்து விட்டேன்
தன்னைவிட்டேன் எனறிருக்கும் துறவியரும் பொடியைமடி
..தழுவித் தாங்கி
உன்னைவிட்டால் உயிர்விடுவேன் என்றிருப்பர் பொடியே!உன்
..ஒளிதான் என்னே? - இந்தியத்தாய் நிலை

பொடிப் பழக்கம் மனிதனை எவ்வளவு அடிமையாக்கிக் கொள்கிறது என்பதை இது நன்கு வடித்துக் காட்டியுள்ளது.

நல்ல பழக்கங்களைப் பழகி வருபவன் மேலானவனாய் உயர்ந்து திகழ்கிறான்; கெட்ட பழக்கங்களைப் பழகி வருபவன் கீழானவனாயிழிந்து கழிகிறான். சார்ந்த இனங்களின் சார்பாகவே மனிதன் பெரும்பாலும் உருவாகி வருதலால் சேரும் சார்புகளை நல்லனவாக நன்கு அவன் நாடிக் கொள்ளவேண்டும்.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

சீலமுற்(று) உயர்ந்தவர்ச் சேரின் வீடுறும்
மாலையுற்(று) அறிவிலார் மருங்க டைந்திடின்
வேலையுற்(று) அலைதுரும்(பு) என்ன வெம்பவக்
கோலமுற்(று) இறந்திறந்(து) உழலல் கூடுமால். - பாகவதம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் மாங்காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சிறிய ராயினார் சார்பினை விழையன்மின்
..திறல்கெழு பெரியோராம்,
அறிஞ ராயினார் சார்பினை விழைமினோ
..அலரிதழ் விரிகொன்றை,
வெறிந றுந்தொடை எம்பிரான் சார்பினை
..விழைதலால் உரகங்கள்,
மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின
..வாழ்ந்தனை யோவென்ன. 5 பணாதரேசப் படலம், காஞ்சிப் புராணம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அழுக்குடைச் சாதி யோரும்
..அடைந்துமெய்ஞ் ஞானி தன்னை
விழுப்புடைத் தலைவர் ஆவர்;
..வேதகக் குளிகை சேர்ந்த
இழுக்குடை இரும்பும் செம்பும்
..இலங்குசெம் பொன்னாம்; ஆங்கே
ஒழுக்கமோ(டு) அவன்தாள் சேர்மின்;
..ஓங்குவீ(டு) எய்தல் உற்றார். - சிவப்பிரகாசம்

சீலமுடைய மேலோரோடு சேர வேண்டும்; இழிவான தீயவரோடு எவ்வழியும் யாதும் சேரலாகாது என இவை உணர்த்தியுள. இனிய சார்பு அரிய மேன்மைகளை அருளுகிறது.

நல்லவர்களோடு பழகுவதால் நல்ல பழக்கங்கள் உளவாகவே எல்லா நலங்களையும் அவன் எளிதே அடைந்து கொள்ளுகிறான். இனிய நீர்மைகளில் பழகி வருபவன் புனித மனிதனாயுயர்ந்து அரிய மகிமைகளை மருவி மிளிர்கிறான். தன் உள்ளத்தே தழுவிய நல்ல பழக்கமே வெளியே ஒருவனை விழுமியனாய் விளக்கி வருகிறது. ஒழுகி வருவது ஒழுக்கம் என வந்தது.

Character is simply habit long continued. [Plutarch]

தொடர்ந்து பழகிவருகிற பழக்கமே ஒழுக்கமாகிறது என இது உணர்த்தியுளது. இளமையில் பழகியது வளமையாகிறது.

நல்ல எண்ணங்களோடு பழகி வருபவன் இனிய குண சீலனாயுயர்ந்து இன்பம் மிகப் பெறுகிறான். உள்ளம் நல்ல வழியில் பழகவில்லையானால் அவன் எவ்வழியும் திருந்தாமல் இழிந்தே ஒழிகிறான். தீயவாசனை பிறவிகள்தோறும் தொடர்ந்து பெருந்துயரங்களையே விளைக்கும். தூயவழியில் பழகிச் சுகம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-21, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே