ஜெய் பீம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி இயக்குனர் ஞானவேல் தயாரிப்பு ஜோதிகா ,சூர்யா

ஜெய் பீம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் ஞானவேல்.!

தயாரிப்பு ஜோதிகா ,சூர்யா !

ஜெய் பீம் ! திரைப்படம் இன்றுதான் பார்த்தேன் .உடன் விமர்சனம் எழுதி விட்டேன் .சில நாட்களாக திரைப்பட விமர்சனம் எழுதுவதை நிறுத்தி விட்ட எனக்கு இந்தப்படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று மனசாட்சி சொல்லியதால் எழுதி உள்ளேன்

1995 ஆம் ஆண்டு நடந்த உண்மையில் நடத்த நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மை நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வு வந்தது .படம் பார்த்து விட்டு அழாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .படம் பார்க்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்து விடும் .அந்த அளவிற்கு சோகம்.காவல்துறையினர் பார்த்தாலும் அவர்களுக்கும் கண்ணீர் வரும் .

நீதியரசர் சந்துரு தீர்ப்புகள் பற்றி பலரும் அறிந்து இருக்கிறோம் .ஆனால் வழக்கறிஞராக அவர் புரிந்த தொண்டு வெளி உலகிற்கு இந்தப்படத்தின் மூலமே அறிய முடிந்தது .பணம் எதுவும் பெறாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் புரிந்த சேவை மகத்தானது .குரலற்றவர்களின் குரலாகவே வாழ்ந்துள்ளார் வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்து காட்டி உள்ளார் நடிகர் சூர்யா.

.நடிகர் சூர்யா படம் தொடங்கி அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் வருகிறார் .கௌரவ தோற்றம் தான் .ஆனால் மனதில் நிற்கும் தோற்றம்.தான் தயாரிக்கும் படத்தில் கௌரவ தோற்றம்.பிரபல நடிகர்கள் யாரும் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் .பிம்பம் கருதி மறுத்து விடுவார்கள் .இப்படி ஒரு கதையில் நடித்து ,தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுக்கள் .விழிப்புணர்வு விதித்துள்ள நல்ல படம் .படத்தில் வந்த தொகையில் ஒரு கோடியை தமிழக முதல்வரை சந்தித்து இருளர் பழங்குடி மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள் என்று வழங்கிய பெரிய உள்ளம் .மற்ற பிரபல நடிகர்களுக்கு இந்த கொடை உள்ளம் இருப்பதில்லை

இருளர் பழங்குடி மக்கள் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு,கண்ணியமின்றி சித்தரவதை செய்யும் செயலை தோலுரித்துக் காட்டி உள்ளது .காவல்துறையில் நல்லவர்கள் சிலரும் மனிதாபிமானமற்ற கெட்டவர்கள் பலரும் உள்ளதையே படம் உணர்த்துகின்றது .இனியாவது காவல்துறையில் அனைவருமே மனிதாபிமானத்துடன் நல்லவர்களாக மாற வேண்டும் என்பதே படம் சொல்லும் செய்தியாகும் .காவல் நிலைய மரணங்கள் 1995 ஆம் ஆண்டில் மட்டுமல்ல சமீபத்தில் நடந்ததை செய்திகளில் பார்த்தோம் .இனி ஒரு காவல் நிலைய மரணம் ஏற்படாமல் பணியாற்றுவது காவல்துறைக்கு சிறப்பாகும் .

முதல் காட்சியே உணர்த்துகின்றது ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் ஒடுக்கும் மன நிலை உள்ளது என்பதை .சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருபவர்களை எந்தை சாதி என்று கேட்டு ஒடுக்கப்பட்ட சாதியினரை மட்டும் தனியாக நிற்க வைத்து பொய் வழக்கு போடுவதற்கு காவலர்கள் பங்கு பிரித்து அழைத்துச் செல்லும் காட்சி .நடந்த காட்சி.

.விசாரணை அதிகாரியாக வரும் காவல் அதிகாரி பிரகாஷ் ராஜ் அவர்களை பழங்குடி மக்களிடம் வழக்கறிஞர் சந்துரு அழைத்து சென்று குறைகளைச் சொல்லும் காட்சி நெகிழ்ச்சி .அவரால் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு கொடுமைகள் .

கதாநாயனான இருளர் இனத்தவர் அப்பாவி அவர் மீது திருட்டு குற்றம் சுமத்தி காவல் நிலையத்தில் அடித்தே கொன்று விட்டு, பிணத்தை பாண்டிசேரி எல்லையில் போட்டு விட்டு, .குற்றவாளிகள் தப்பித்து ஓடி விட்டார்கள் என்று முடித்த வழக்கை ஆள் கொணர்வு மனு மூலம் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி ஆதாரங்களை அளித்து உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட அப்பாவியின் மனைவிக்கு நட்ட ஈடும் குடியிருக்க பட்டாவும் வாங்கித் தருகிறார் .வழக்கறிஞர் சந்துரு .

சில காட்சிகள் வசனங்கள் மறக்கவே முடியாது .
காவல்துறை உயர் அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து உன் கணவன் இறந்தது இருந்ததுதான் .இனி என்ன வரவா போகிறான் .காவலர் களிடம் பணம் வாங்கித் தருகிறேன் வழக்கை வாபஸ் வாங்கு என்று சொன்னபோது சராசரிப் பெண்ணாக இருந்தால் சரி என்று சொல்லியிருப்பாள் .ஆனால் அவள் கர்ப்பமாக இருப்பாள் அப்பாவை கண்ணில் காட்ட முடியாத நான் .உன் அப்பாவை அடித்தே கொன்றவர்கள் தந்த பணத்தில் சாப்பிடுகிறோம் என்று சொல்ல முடியுமா ? என்று சொல்லி விட்டு வெளியேறும் காட்சி சிறப்பு .

இப்படத்தின் கதாநாயகன் கதாநாயகி வருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கிடைக்க வேண்டும் ..நடிக்கவில்லை பாத்திரமாகவே வாழ்ந்து காட்டி உள்ளனர் .பாராட்டுக்கள் .

காவல்துறையில் வாரவிடுப்பு இல்லாமல் இருந்தது .இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் இருந்தது .தற்போது வார விடுமுறை அறிவித்து விட்டார்கள் .இனியாவது மன உளைச்சல் இன்றி நிம்மதியாக மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் .எந்த ஒரு நிரபராதி மீதும் பொய் வழக்குப் போட கைகள் கூச வேண்டும் .

மனசாட்சியற்றவர்களை மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பாடம்தான் படம் .ஒடுக்கப்பட்ட மனிதர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் என்று சொல்லும் படம் .நல்லபடம் திரையரங்கில் வந்து இருந்தால் இன்னும் பலரை சென்று அடைந்து இருக்கும் .சில நாட்களில் தொலைக்காட்சியில் போடுவார்கள் அப்போது ஒடுக்கப்பட்ட மக்களையும் போய் சேரும் .


--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Nov-21, 6:29 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 95

மேலே