குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில் - பழமொழி நானூறு 23

நேரிசை வெண்பா

அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கரும முடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றா ரில். 23

- பழமொழி நானூறு

பொருளுரை:

எருமையின் மீது நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே! குளத்தினைத் தோண்டி அதனிடத்தில் உறைவதற்குத் தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வார் இலர். அதுபோல, பெறுதற்கு அருமையை உடைய பொருளினை உடையார் தம்மிடம் காரியம் உடையவர்களை தேடுதலிலர்.

கருத்து:

பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர்.

விளக்கம்:

குளத்தினைத் தோண்டியவுடன் தேரைகள் தாமே வந்து சேருதல்போல, செல்வமுண்டான அளவிலே கருமம் உடையார் தாமே வந்து சேருவர்.

'குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றா ரில்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-21, 9:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே