‘ஆரவாரம்’
‘ஆரவாரம்’
மனிதர்களின் மனம் விசித்திரமானதுதான். ஒரு சில நேரங்களில் அவன் தனிமையை நாடுகிறான், ஒரு சில நேரங்களில் கூட்டத்தாரோடு இருப்பதற்கு விரும்புகிறான்.
பாலூட்டி வகையை சார்ந்தவன் மனிதன் என்பதில் சந்தேகமில்லை, என்றாலும் விலங்குகளில் இருந்து மாறுபட்டு இருப்பதன் காரணம் அவனது சிந்தனை அறிவுதான். இந்த அறிவு அவனுக்கு சில உணர்வுகளை ஏற்படுத்தி பொது வெளியில் எப்படி வாழ வேண்டும் என்னும் செய்கையினை கற்று தருகிறது.
இத்தகைய உணர்வுகளல் ஆண், பெண் இருபாலருக்கும் முக்கிய தேவையாக, தங்களுடைய உடம்பை மறைக்க உடைகளை அணிய ஆரம்பிக்கிறார்கள். இதிய தொடர்ந்து அவர்களது சிந்தனை வாழ்க்கையை இப்படியாகத்தான் வாழவேண்டும் என்று படிப்படியாக மாற்றி அமைத்து கொள்கிறது.
இந்த மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு ஒரு சில ‘தேவைகள்’ தேவைப்படுகிறது, அது ‘பொருளாகவோ’ ‘செல்வங்களாகவோ’ இருக்கலாம். அதனை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள்.
அவர்கள் அப்படி சம்பாதிக்கும் பொருள், செல்வம் இவற்றை கொண்டு வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு வாழ முற்படுகிறார்கள்.அதனால் தான் அவர்கள் ஈட்டி இருக்கும் செல்வம் பொருள், இவைகளை கொண்டு தான் அந்தந்த மனிதர்களின் வாழ்க்கை முறைகள் அமைந்து கொள்கின்றன. இதனால்தான் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கை முறைகள் ஏற்றத்தாழ்வாகவும், வித்தியாசமாகவும் அமைந்து விடுகிறது. உடைகளின் காணப்படும் வித்தியாசங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.
இதனை ஒட்டித்தான் அவர்கள் வசிக்கும் வீடு, பயணம், இப்படி எல்லாமே அந்த செல்வத்தை அடிப்படையாக கொண்டே அமைகிறது. இதனை உள்ளடக்கியே மனிதர்களின் ‘ஆரவாரம்’ என்பது எதனை குறிப்பிடுகிறது.
‘ஆரவாரம்’ என்பது தைரியத்தையும் சத்தத்தையும் உள்ளடக்கியது என்று ஒரு பொருள் இருக்கிறது.
ஆரவாரம்-பேரொலி- Loud noise,souting,roaring
ஆடம்பரம்- Show,pomposity
துக்கம்- distress, griefy
என்றும் பொருள் கொள்ளலாம் என்று “தமிழ் அகராதி” சொல்கிறது
இயற்கையிலேயே மனிதன் ‘ஆரவாரத்தை’ விரும்புகிறவனா?
நாம் ‘ஆரவாரம்’ என்பதை உற்சாகம், கூக்குரல், பேரோசை என்று எடுத்து கொண்டால் மனிதர்களின் மனம் இந்த செயல்களை அதிகபட்சமாக ஈடுபடுத்தி கொள்கிறது என்று எடுத்து கொள்ளலாம்.
கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது வித்தியாசப்படுகிறதல்லவா? தனி மனிதனாக இருக்கும்போது அவர்கள் மனம் அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது, அதே நேரத்தில் அவர்களை ‘ஒத்த ஒரு கூட்டம்’ அது ஆண்களாகவோ, பெண்களாகவோ இருந்து விட்டால் அதே மனிதர்களின் மனம் வித்தியாசப்பட ஆரம்பிக்கிறது. கூட்டத்தோடு கூக்குரலிடுதல், அர்த்தமற்ற சத்தம் எழுப்புதல், மகிழ்ச்சி கூக்குரல், இத்தனையும் கொண்ட மனிதர்களாக மாறி விடுகிறார்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்தவர்களாகவோ, ஒத்தவர்களாகவோ இருந்து விட்டால் அவ்வளவுதான், அவர்கள் போடும் ‘கோசம்’, ‘ஆட்டம்’ எல்லாம் சொல்லி மாளமுடியாது.
இதை நேரடி அனுபவமாக நம்மால் காணமுடியும். திரைப்படங்களோ, அல்லது மேடை கச்சேரி போன்றவைகளுக்கு செல்லும்போது உங்களுக்கு அறிந்த அல்லது மிகவும் பிடித்த ஒருவர் அல்லது ஒருவள், அங்குள்ள கூட்டத்தோடு கலந்து விட்டால் அவ்வளவுதான் அதுவரை அவர்களிடம் இருந்த கட்டுப்பாடுகள் காணாமல் போய் விடுகிறது. கூச்சலும், கூக்குரலும், ஆட்டமும் பாட்டமும் தானாக வந்து விடுகிறது.இது மனிதர்களுக்குள் உள்ள உள்ளங்கிடங்கை மட்டும் குறிப்பிடுகிறது. அதற்கு பின் அவர்கள் செல்லும் திரைப்படமோ மற்றைய நிகழ்ச்சிகளோ அவர்களுக்கு பிடித்தமானவைகளாக இருந்து விட்டால் இன்னும் இவர்களின் செயல்பாடுகள் அதிகமாகும்.
இதே செயல்பாடுகள் தான் ‘வன்முறை’ செயல்களிலும் ஈடுபட செய்து விடுகிறது. இது மனித ‘உளவியலின்’ தடுமாற்றம் எனலாமா? இந்த மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளும் சிலர் அத்தகைய உணர்வுகளை மனிதர்களின் சிந்தனையில் எழ விட்டு, தூண்டியும் விட்டு அவர்களை திசை திருப்பி விடுகின்றனர்.
இத்தகைய வன்முறை போக்கு மனிதனின் ஆழ்மனதில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது தகுந்த சமயத்தில் இப்படி கூட்டமாய் மனிதர்கள் சேரும் இடங்களில் வெளிப்பட்டு விடுகிறது.
இத்தகைய போக்கு விலங்குகளிடம் இருப்பதாக தெரியவில்லை, என்றாலும் நாம் அன்றாடம் சந்திக்கும் தெரு நாய்களோ அல்லது வீட்டு நாய்களோ கூட்டமாக சேரும் நேரங்களில் அந்த பகுதியில் நடமாடுபவர்களை கடித்து குதறி விடுவதையும் அதனால் மக்கள் துன்பபடுவதையும் காணத்தான் செய்கிறோம்.
அதே நேரத்தில் வலிமையான சில விலங்குகள் கூட்டமாய் இருக்கும் போது அமைதியையும் கடை பிடிக்கின்றன. யானை கூட்டங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் அங்கும் சிக்கல் இருக்கிறது அவைகள் மிரண்டு விட்டாலோ, நுட்பமான காரணங்களால் பாதிக்கபட்டாலோ அவ்வளவுதான் தங்களது இயற்கையான வன்முறை குணங்களை காட்ட ஆரம்பித்து விடுகின்றன.
மனிதனின் குணங்களுக்கும், இதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
அப்படி கூட்டமாக சேரும்போதும், பிறரின் தூண்டுதல்கள் ஏற்படுத்தப்படும் போதும், தடுமாற்றமில்லாமல் நிதானத்தை கடைபிடிப்பவர்களாக இருப்பவர்கள், தங்களது தனிப்பட்ட பயிற்சியினாலும், வழிமுறை,வளர்ப்பு தோன்றல்களினாலும், அறிவு சார் விசயங்களில் தெளிவுடைபவர்களாக இருப்பதாலும், இவர்களால் நிதானத்தை கடை பிடிக்க முடிகிறது.
பொதுவாக ‘உள்ளம்’ கொந்தளிக்கும் போதும், கொந்தளிக்க வைக்கப்படும்போதும், அல்லது ‘பசியின்’ உச்சத்தில் இருக்கும்போதும், ‘காம வெறியில்’ இருக்கும்போது மனிதர்களின் செயல்பாடுகள் மிருகங்களின் செயல்பாடுகளோடு ஒத்ததாக மாறிவிடுகின்றன.
அடுத்து ‘ஆரவாரம்’ என்னும் சொல்லுக்கு ‘படோபடம்’ என்றும் சொல்லலாம், இவைகள் மனிதனின் பொருளாதார இருப்பை கொண்டும் அவன் அதை கொண்டு அதீத செலவுகளை தீர்மானிப்பதை கொண்டும் அளவிடலாம்.
தகுதிக்கு மீறி செலவுகள், வசதிகளை ஏற்படுத்தி கொள்பவனை ‘ஆரவாரமாய்’ இருப்பவன் என்று குறிப்பிடலாம்.வசதிகளின் மேம்பாடு, தன்னை சுற்றி பெரும் கூட்டத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு செலவிடுதல், இப்படிப்பட்ட செயல்பாடுகளை “ஆரவாரம்” என்று சொல்லலாம். ‘பகட்டு’ என்றும் குறிப்பிடலாம்.
அடுத்ததாக இதற்கு ‘துயரம்’ என்னும் பொருளும் படுவதாக தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
‘துயரம்’ என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அதனை வெளிப்படுத்த பல்வேறு வகைகளில் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். முதற்கட்டமாக அவர்களது உணர்வுகள் அவர்களின் கட்டுப்பாடுகளை மீறி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இது ‘துயரத்தின் உச்சபட்சம்’ என்று குறிப்பிடலாம். ‘வாய் விட்டு’ கதறுவதும் துயரத்தின் உச்சபட்சங்கள்தான்.
இந்த ‘துக்கம்’ ‘துயரம்’ மனதுக்குள் அடக்கி வைத்து கொள்ளும் மணிதர்களும் உண்டு என்றாலும் நம் மனிதர்களுக்குள் இருக்கும் ‘நுண்ணிய உணர்வு இழைகள்’ அந்த துயரத்தை ‘முகத்தில்’ வெளிக்காட்டும்படி செய்து விடுகிறது. இதனால் அவர்கள் ஏதோ ஒரு துயரத்தில் இருக்கிறார்கள் என்று மற்றவர்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
எந்த வித துயரங்கள் வந்தாலும் அதனை வெளிகாட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்து புன்னகை முகத்துடனும் இருப்பவர்கள் உண்டு. அவர்கள் மேற்சொன்ன ‘கட்டுப்பாடான மனநிலை’ அல்லது ‘பற்றற்ற மனநிலை’ அதாவது எல்லாம் ‘மாயை’ என்னும் எண்ணம் கொண்டவர்கள்.
முடிவாக மனித வாழ்க்கை என்பது மற்ற மிருகங்களின் வாழ்க்கையை விட மேம்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அது போல மற்ற எல்லா விலங்குகளுக்கும் மனிதனை போலவே இன்பம்,துன்பம்,வலி, எல்லாமே உண்டு, என்றாலும் மனிதனை போல அதற்கு வடிகாலாக ஒன்றை தேடி அதை நிவர்த்தி செய்து கொள்ளும் அறிவு அதனிடம் இல்லாததால் மனிதனை விட ஒரு படி குறைந்திருக்கிறது அவ்வளவுதான்.
மனிதன் எப்பொழுதும் அதை உணர்ந்திருந்தாலும் அதை சரி வர கட்டுப்பாடாய் வைக்காமல் அவனது இயல்பான குணமான இந்த “ஆரவாரம்” வெளிப்படும் போது அது சமூகத்தில் பல இன்னலகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிகமான வன்முறை, அதிகமான படோபடம் அல்லது பகட்டு, அதிகமாக துயரம் இவை எல்லாமே மனிதனின் வாழ்க்கைக்கு வேகத்தடைகள் தானே..!
ஆனாலும் இவைகள் இல்லாமல் மனித வாழ்க்கை என்பது இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.