ஆசை தோசை

ஆசை
ஒருவரது தேவை என்றாலும், விருப்பம் என்றாலும், பாரம்பரியம், கலாச்சாரம் என்று பல சொற்களைக்கொண்டு வர்ணித்தாலும், விவரித்தாலும், விளக்கம் கொடுத்தாலும், இவை அனைத்துமே ஆசை எனும் வட்டத்திற்குள்தான் அடங்குகின்றன. இவற்றிலிருந்து சற்றே மாறுபட்டதுதான் அத்தியாவசியத் தேவை.
பிற உயிரினங்களைப்போலவே, நமக்கு உணவு என்பது, அத்தியாவசியமானது. உணவில்லாமல் சிலநாட்கள் வரைதான் உயிரோடு இருக்கமுடியும். உணவு உண்டால்தான், உழைக்கவும், இதர பணிகளைச் செய்வதற்கும், உடலில் போதிய சக்தி கிடைக்கிறது. இதர உயிரினங்களைப்போலவே, நீரும் காற்றும் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். மனிதன் ஒரு சமுதாய விலங்கு மற்றும் ஆறறிவு கொண்டவன் என்பதால், அவன் மானத்தைக் காத்துக்கொள்ள மற்றும் தட்பவெப்ப நிலைக்கேற்ப உடலை சீராக வைத்துக்கொள்ள உடைகள் அணிகிறான். மனிதன் அவன் உடமைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்கும், அதிக மழை, வெப்பம், குளிர் இவற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கவும், இயற்கை சீற்றங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும், அவனுக்கு ஒரு புகலிடம் தேவை. இத்தகைய வசதிகளைத் தரும் இடத்தை நாம், பொதுவாக வீடு என்று சொல்கிறோம். பருவ வயதில் தொடங்கி வயதான காலம் வரை நீடித்திருக்கும், பாலுணர்வு கூட, ஓரளவுக்கு அத்தியாவசிய தேவையின் கீழ்தான் அடங்கும். இந்தத் தேவைகளை நாம் ஆசை எனும் வட்டத்திற்கு அப்பால் வைத்துவிடுவோம்.
இங்கே குறிப்பிடுகின்ற ஆசை, ஒரு மனிதனின் இன்றியமையாத தேவைகளுக்கு அப்பாற்பட்ட, புலனுகர்ச்சிகள் சார்ந்த பொருட்களின் மீதுள்ள ஆசையைத்தான்.
ஆசை இல்லாத பிற உயிரினங்கள் இருக்கலாம். பொதுவாக, எந்த மிருகத்திற்கும் தேவை என்பது மட்டும் உள்ளதே தவிர ஆசை இல்லை, அது உணவாகட்டும், புலனுகர்ச்சி சார்ந்ததாகட்டும். ஆசை என்பது மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உள்ள ஒரு குணம் அல்லது பழக்கம். ஒரு சிறுவன் பள்ளிக்குச்சென்று படிக்கவேண்டும் என்பது அந்தச் சிறுவனின் ஆசையாகவும் இருக்கலாம் அல்லது அவனது பெற்றோர்களின் ஆசையாகவும் இருக்கலாம். அவன் படிக்கத்தேவையான புத்தகங்கள், மற்றும் இதர பொருட்களும் கூட, படிக்கவேண்டும் என்ற ஆசையால் விளையும் இதர ஆசைகள்தான். அவன் உடுத்தும் உடைகள், அவன் கல்வி கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வம், கூடுதல் பாடத்திட்டங்களில் கொள்ளும் ஆவல், பலவிதமான விளையாட்டுகளில் பங்கு கொள்ள அவனுக்கிருக்கின்ற விருப்பம், இவை எல்லாமே ஆசையால் விளைவதுதான்.
பள்ளியில் சிறிய அளவில் தொடங்குகின்ற ஆசைகள், வயதாக ஆக, படிப்படியாக மென்மேலும் அதிகரிக்கின்றன. படிப்பில், விளையாட்டில், இதர போட்டிகளில் தான் முதலாவதாக திகழவேண்டும் என்னும் ஆர்வம், ஆசையால் தூண்டப்பட்டது. இதற்குக் மூலகாரணம் அந்த மாணவனாகவும் இருக்கலாம் அல்லது அவனது பெற்றோர்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். சில முறைகள் ஒரு மாணவன் அவனது படிப்பிலோ அல்லது வேறு பிரிவிலோ முதலாக வந்துவிட்டான் என்றால், அந்த மாணவன் எப்போதுமே இந்தத் துறைகளில் முதலாவதாக இருக்க விரும்புகிறான். இது ஆசையைக் கடந்து, பேராசை எனும் வகையைச் சார்ந்தது. மற்ற மாணவர்கள் தானிருக்கும் முதலிடத்தில் வரக்கூடாது என்பது பேராசைதானே?
இப்படி ஆசை அளவு கூடி பேராசையாகும்போதுதான், போட்டி, பொறாமை மனப்பான்மை ஆரம்பமாகிறது. அந்த மாணவன், பிறரும் அவனைப்போல நன்கு படித்து, முதலிடம் பெறுவதை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் அந்த மாணவனை ஊக்குவிக்கிறேன் என்ற போர்வையில், அவனை அதிகாரம் செய்து ஆக்கிரமிக்கிறார்கள். பாவம், மாணவன் என்ன செய்வான். பெற்றோர்களின் அறிவுரை கேட்டு, அவனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாடுபட்டுக்கொண்டே இருக்கிறான். இந்த நிலைத் தொடர்ந்து நீடித்துவரும்போது, தன்னை அறியாமலேயே அந்த மாணவன், மற்றவர்களுடன் போட்டி போடும் மனநிலையையும், பொறாமை கொள்ளும் சுபாவத்தையும், ஏன், அவனுக்கு குறுக்காக இருப்பவர்கள் என்று கருதும் மாணவர்களிடம் வெறுப்பும் கூட காட்டும் அளவுக்கு தயாராகிவிடுகிறான். அத்தகைய மாணவர்களிடம் அவனுக்கு கோபம் வருகிறது.
இப்படியாகப் பள்ளியில் தொடங்கிய ஆசையின் மூலம் தொடங்கிய பேராசை, கல்லூரி மட்டும் நின்றுவிடாமல், அவனது தொழில் மற்றும் இதர பணிகளிலும் ஒரு முக்கிய அங்கமாகத் தங்கிவிடுகிறது. தற்போது மத்திய அரசு ஆலோசித்துவரும் புதிய கல்வி திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, தேர்வுகள் நடத்தி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்கு தேர்வு செய்யும் முறை இருக்காது என்பது மிகவும் வரவேற்கவேண்டிய முயற்சி என்றே கொள்ளவேண்டும். அந்த வகையில், மாணவர்களிடையே, யார் மற்ற மாணவர்களைவிட நன்கு படிப்பவர்கள், மதிப்பெண்கள் பெருகிறவர்கள் போன்ற போட்டி, பொறாமை மனப்பான்மை கணிசமான அளவில் குறைந்துவிடும்.
இவையெல்லாம் செய்திடினும், எவ்வளவு நெறிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் வகுத்திடினும், மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. உணவு என்று எடுத்துக்கொண்டால், வெறும் கஞ்சிக்கூழ் ஆரம்பித்து உயர்ந்த வகை உணவுகள், சிற்றுண்டிகள், பர்கர், பாஸ்தா, பிஸ்சா வரை, அளவே இல்லை. ஒரு உணவகத்தில் இரண்டு இட்லிகள் மற்றும் சட்னி, சாம்பார் முப்பது ரூபாய் என்றால், இன்னொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு இட்லிகள் மற்றும் ஐந்தாறு வகை சட்னி, சாம்பார் போன்றவை ஐநூறு ரூபாய் வரை கூட ஆகிறது.
ஒவ்வொரு உணவும் சிற்றுண்டியும், அதை உண்ணும் இடத்தைப்பொறுத்து அமைகிறது. முப்பது ரூபாய் கொடுத்து இட்லி சாப்பிடுபவன், அவனது தேவையை பூர்த்திசெய்துகொள்கிறான். ஐநூறு ரூபாய் கொடுத்து இட்லி சாப்பிடுபவனும் அவனது தேவையைத்தான் பூர்த்தி செய்துகொள்கிறான். ஆயினும், அதிகம் பணம் உள்ளவன், அவனுக்கிருக்கும் அதிக ஆசை காரணமாக, பிற உணவகங்களைத் தவிர்த்து ஐந்துநட்சத்திர ஹோட்டலில் சென்று உண்ணுகிறான். உணவு மட்டும் அல்லது, எந்தவித புலனுகர் பொருட்களை எடுத்துக்கொண்டாலும், இத்தகைய உயர்வு தாழ்வு வேறுபாடுகள் நிறைந்துதான் இந்த சமுதாயம் இருக்கிறது. இங்கு கவனித்தால், ஒரு விஷயம் நன்கு புலனாகிறது. ஒருவனிடம் உள்ள பணத்தின் மதிப்பு அவனது ஆசைகளை நிர்ணயிக்கிறது.
பணம் சார்ந்த வாழ்க்கை துய்க்கும் இந்த சமுதாயத்தில், ஒரு சாதாரண நடுத்தரவர்க்க மனிதன் படும் பாடு, விவரிக்க முடியாதது. இப்படிப்பட்ட மனிதன் ஏழையும் இல்லை, பணக்காரனும் இல்லை. இந்த இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு இந்த நடுத்தர வர்க்க மனிதன், வாழ்க்கையில் பலவித இன்னல்களுடனும், பிரச்சினைகளுடனும் உழல்கின்றான், சுழல்கின்றான், வாழ்கின்றான். இத்தகைய மனிதர்களுக்குத்தான் ஆசைகளை சீரமைக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு பிச்சைக்காரன் அல்லது பரம ஏழை, எது கிடைத்தாலும் அதைக்கொண்டு, ஒரு வேளையோ இரு வேளையோ அவன் வயிற்றுப் பசியை, முடிந்தவரை போக்கிக்கொள்வான். ஒரு பணக்காரன், எவ்வளவு விலை என்றாலும், அவனுக்கு விரும்பியதை வாங்கி உண்பான். நடுத்தரவர்க்க மனிதன் அவ்வாறு செய்ய இயலாது. எனவே, அவனுக்கு கிடைக்கும் சம்பளத்தில், மாதாந்திர பட்ஜெட் போட்டு, அதன்படி செலவுகள் செய்யவேண்டும்.
ஆனால், சமுதாயத்தில் எல்லோருமே இப்படி ஒரு முறையாக வாழ்வதில்லை. விரலுக்குத்தகுந்த வீக்கம் என்றில்லாமல், பலவித ஆசைகள், கொஞ்சம் பேராசைகள் காரணமாக, அகலக்கால்களை விட்டு, வரவுக்கு மீறிய செலவுகள் செய்து, அவர்களது பொருளாதாரத் தரத்தை சீரழித்து, அதன்மூலம் ஏற்படும் கடும் விளைவுகளில் மாட்டிக்கொண்டு, நித்திய கண்டம் பூரண ஆயுசுடன் வாழும் மனிதர்கள், அடாடா, கொஞ்ச நஞ்சமல்ல.
தேவைக்கு அதிகமாக விரும்புவது ஆசை. அந்த ஆசை வரைமுறைகளைக் கடந்தால் அது பேராசை. உயிர்வாழ உணவு உண்பது தேவை. வகை வகையான உணவு உண்பது ஆசை. எந்நேரமும் வகை வகையான உணவு உண்ணவேண்டும் என்பது பேராசை. உடம்பை பாதுகாக்கவேண்டும், நலமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்னும் அளவில் உண்பது தேவை. உடல் நலத்தின் மீது அந்த அளவுக்கு அக்கறை காட்டாமல், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்களை அளவுடன் தினசரி உண்பது ஆசை. இந்த பதார்த்தங்களை அளவின்றி மட்டுமின்றி, ஒருவரிடம் பணம் அதிகம் இருப்பதினாலோ அல்லது இலவசமாக கிடைக்கிறது எனும் காரணத்தினால், நேரம் காலம் என்று பார்க்காமல், கிடைத்தபோது வயிறு புடைக்கத்தின்பது பேராசை.
உணவில் குறிப்பிட்ட இந்த உதாரணம் ஏனைய அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். அது தங்கமாக இருக்கட்டும், வீடு மனையாக இருக்கட்டும், அன்றாடம் உபயோகிக்கும் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனமாக இருக்கட்டும். அலைபேசி, முகப்பூச்சு, தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், புகை பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் என்பது போன்ற எந்த புலனுகர்ச்சி தருகின்ற செயலாகவும் இருக்கட்டும், இவை அனைத்துமே அதிக ஆசை மற்றும் பேராசையின் பரிமளிப்புத்தான். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், பணம் எனும் மூன்றெழுத்துதான் ஒரு மனிதனை நலமுடன் வாழ வைக்கிறது, அதே நேரத்தில் நலம் கெட்டுத் தாழவைக்கிறது. பணம் தான் ஒருவனுக்கு சிறப்பைத்தருகிறது, அதே பணம்தான் ஒருவனை தீயவழியில் வழிநடத்தி, அவனுக்கு விரைவிலேயே இறப்பை தருகிறது.
எனவே, நாம் நமது இயற்கையான தேவைகள், செயற்கையான தேவைகள், அளவான தீர்க்கக்கூடிய ஆசைகள், தீர்க்கமுடியாத ஆசைகள், பலராகமான பேராசைகள் இவைகளை கவனமுடன் ஆராய்ந்து, நாம் வாழும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு, நம் நலம் மற்றும் குடும்பத்தினரின் நலம், இவற்றைவிடவும் மேலாக மற்றவர்களின் நலம் இவற்றை மனதில் கொண்டு, அதற்கேற்ப அந்தந்த தேவைகளையும், ஆசைகளை மட்டும் பூர்த்திசெய்துகொள்ள செயல்படவேண்டும். பேராசையை எந்த அளவுக்குத் தவிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நன்மை.
இயற்கையான, அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய, கண்டிப்பாகப் பணம் தேவை; பணம் சம்பாதி.
ஓரளவுக்கு ஆசைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் பணம் தேவை; இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதி.
பேராசைகளைப் பூர்த்தி செய்ய, பேரளவு பணம் தேவை; ஓடு, உழை, தலையைப் பிய்த்துக்கொள், பொருள் குவி; ஆனால் உன் நலம், மகிழ்ச்சி, அமைதி இவையெல்லாம் குறையும், குறைந்தது பாதி.

தோசை

ஆசை தோசை அப்பளம் வடை என்று சொல்வதுண்டு. அதிக ஆசைப்படுவதைத்தான் இப்படி ஒரு சொற்றொடராக கூறுகின்றனர். தோசை என்பது எப்படி செய்யப்படுகிறது? முதலில் தோசைக்கல்லில், அது நன்கு வெப்பமானவுடன், வட்டமாக தோசை மாவை ஊற்றுகிறோம் (நீங்கள் சதுரமாகவோ செவ்வகமாகவோ தோசை ஊற்றினால், அது உங்கள் தோசை, உங்கள் பாடு). அதைச்சுற்றி எண்ணெயோ நெய்யோ (???) விடுகிறோம். அதே நிலையில், ஓரிரு நிமிடங்கள் தோசை சூடாகி முழுவதும் வேக விடுகிறோம். அதன் பிறகு, ஒரு திருப்பியால் தோசையை, தோசைக்கல்லிருந்து மெல்ல எடுத்து, அதைத்திருப்பி மீண்டும் ஒருமுறை தோசைக்கல்லில் போடுகிறோம். (இரண்டாம் முறை எண்ணெய் ஊற்றுவது, உங்களுடைய எண்ணெய் கொள்ளிருப்பு மற்றும் உங்களின் கொழுப்பைப் பொறுத்து இருக்கிறது) ஏற்கெனவே தோசை ஓரளவுக்கு நன்கு வெந்துவிட்டதால், இரண்டாவது முறை நாம் தோசையை அதிகநேரம் தோசைக்கல்லில் போட்டுவைப்பதில்லை. பத்து அல்லது பதினைந்து நொடிகளில் தோசையை எடுத்துவிடுகிறோம். இப்படி சுட்டு எடுக்கப்பட்ட தோசை, சூடாகவும் சுவையாகவும் (தோசை மாவு பதத்தைப்பொறுத்து, விடும் எண்ணெயின் தரம், மணம், அளவு பொறுத்து) இருக்கிறது. இந்த தோசைக்கு சாம்பாரும் சட்னியும் வைத்துக்கொண்டு சுவைத்து உண்ணுங்கள், நான் கீழே கூறுவதை சிந்தித்த வண்ணம்:
முதன் முறை தோசையை அதிக நேரம் தோசைக்கல்லில் வைப்பது என்பது நமது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும் நாம மனதில் அதிக நேரம் நீடித்திருக்கச்செய்யவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
நமக்கு நன்றாகவே தெரியும், மேற்குறிப்பிட்ட மகிழ்ச்சி போன்ற நேர்மறை எண்ணங்கள் நம் மனதில் நிலைத்து இருக்காது. இதற்கு இயற்கையான காரணம் என்னவெனில், நம் மனம் ஒரே நினைப்பில் எப்போதும் இருப்பதில்லை. குரங்கு போலத்தான் அங்கும் இங்கும் தாவிய வண்ணம் இருக்கிறது. எனவே, எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு, முன்னர் நடந்த நாம் செய்த தப்பு அல்லது பாபம் போன்ற ஏதோ ஒரு எதிர்மறை சம்பவம், துயரம், பாதிப்பு, குற்ற உணர்வு போன்ற எண்ண அலைகள், நம்மைத் தாக்குகிறது. இதனால், அந்நேரம் வரை மகிழ்ச்சியாக உற்சாகமாக ஊக்கத்துடன் இருந்த நாம், துன்பம் கொண்டு, கவலை அடைந்து, உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு நம் மகிழ்ச்சியை இழக்கிறோம்.
இதுபோன்ற நம் மனநிலையை மாற்றியமைக்க நான் ஒரு உபாயம் சொல்கிறேன். எப்பொழுதெல்லாம் உங்களின் மனநிலை கவலையும் துன்பமும் துயரமும் கொண்டதாக இருக்கிறதோ, அப்போது, தோசையை இரண்டாம் முறை தோசைக்கல்லில் திருப்பிபோடுவது போல கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நாம் மேலே பார்த்தது போல, இரண்டாம் முறை தோசைக்கல்லில் திருப்பிபோடப்படும் தோசையை அதிக நேரம் கல்லில் இருக்கவிடுவதில்லை. அப்படி இருக்காவிட்டால், தோசை கருகி விடும், அதன் சுவையும் போய்விடும். இதுபோலவே, நமது கவலைகளை மற்றும் எதிர்மறை எண்ணங்களை நாம் அதிகநேரம் மனதில் இருக்கவிடாமல், இரண்டாம் முறை திருப்பி இடைப்பட்ட தோசையைப்போல விரைவிலேயே எடுத்துவிடவேண்டும். அதாவது, எதிர்மறை எண்ணம்
நம்மைத் தாக்கும்போதெல்லாம், நாம் மனதில் இதுபோல பாவனை செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு செய்கையில், மனரீதியாக நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள்.
நல்ல நேர்மறையான மகிழ்ச்சி தரும் எண்ணங்கள் உண்டாகும்போது, முதலில் ஊற்றும் தோசை மாவு போல அதிகநேரம் மனதில் இருக்கவிடுங்கள். எதிர்மறை எண்ணங்கள், பாதிக்கும் நினைவுகள் ஏற்படும்போது, தோசையை இரண்டாம் முறை தோசைக்கல்லில் திருப்பிபோடுவதுபோல நினைத்துக்கொள்ளவேண்டும். மீண்டும் அடுத்த தோசையை ஊற்றவேண்டும் என்பதால், இரண்டாம் முறை திருப்பிபோடப்பட்ட தோசையை கல்லிலிருந்து எடுத்தே ஆகவேண்டும். அதைப்போல, மனதில் ஓடும் எதிர்மறை எண்ணம் மற்றும் கவலை மனப்பான்மை இவைகளை சீக்கிரத்திலேயே எடுத்துவிடவேண்டும்.

இப்படிச் செய்கையில் நீங்கள் உங்கள் மனதில், மகிழ்ச்சி போன்ற நேர்மறை எண்ணங்களை நீடிக்கச்செய்கிறீர்கள். கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் உங்களைப்பாதிக்கும் நேரத்தை குறைக்கிறீர்கள். என்ன வாசகரே, ஞான் பரயுன்னது மனசிலாயோ?

தினமும் காலை எழுந்தவுடன், மீண்டும் இரவு தூங்குமுன் இப்படி நினைத்துக் கொள்ளுங்கள்:

‘என்னிடம் இப்போது இருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. என் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக்கொள்ள நான் முடிந்தவரைப் பாடுபடுவேன். பணம் அதிகம் கிடைக்கிறதோ இல்லையோ, நான் என்னிடம் இருப்பதைக்கொண்டு, மனநிறைவும் திருப்தியும் அடைகிறேன்.அதனால் மகிழ்ச்சியும் அடைகிறேன். வருங்காலத்திலும் இந்த என் மனநிலைத் தொடரும்’

நான் ஒன்றுமே புதியதாகக் கூறவில்லை. கொஞ்சம் புதுமையாகக் கூறினேன். அந்தே காதா!

என்னடா இந்த மனிதர், ஆசை தோசை அப்பளம் வடை என்று சொன்னார். ஆனால், விவரித்தது ஆசையையும் தோசையையும் மட்டுமே. அப்பளம், வடை எங்கே என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு என் பதில், ஆஆஆ வாயேன், ஆசை தோசை அப்பள வடை! பஸ் இத்னாஹி ஹை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Nov-24, 4:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே