பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃதூரும் ஆறு – நாலடியார் 398

நேரிசை வெண்பா

கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ!
பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு 398

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை: ஒளி மிக்க வளையலணிந்த தோழி! வன்மையுடையாருங் கடந்து செல்லுதற்கு அருமையான காட்டில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமை யுடையையோ என்று கூறுகின்றனை; பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றானொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாகிறான் அல்லவா? அதுபோலத்தான் இது!

கருத்து:

ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.

விளக்கம்:

வல்லையோ என்றது, தலைவியின் மென்மை கருதி. உவமையால், கருத்துடையான் ஒருவன் ஒரு நிலையை எய்தினால் அதற்கான ஆற்றல்கள் அவனிடம் உடனே சென்றடையும் என்பது பெறப்படும்; தலைவி தனது மெய்யன்பினை இவ்வாறு புலப்படுத்தினாள்; இஃது, உடன்போக்கிற்கு இசைந்த தலைவி தோழிக்குக் கூறியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-24, 12:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே