தன்னைத் துணித்தானும் தூங்காது அறஞ்செய்க – அறநெறிச்சாரம் 21
நேரிசை வெண்பா
மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை - தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. 21
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மின்னல் போன்ற பளபளப்பான இளமைப் பருவம் நிலைத்திருக்கும் என்று மகிழ்ந்து, அறத்தினைப் பற்றி முதுமையில் அறிந்து செயல்படுவேன் என்று எண்ணுவது அறியாமையே ஆகும்.
ஏனென்றால், எமன் இளமையிலேயே ஆயுளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு.
ஆதலால், தனது உடலை வருத்தியேனும் காலதாமதம் செய்யாமல் அறத்தினை ஒவ்வொருவனும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பு:
தவறான புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், தவறான, முறையற்ற பாலியல் ஈடுபாடு இருந்தால் விரைவில் எமன் வருவான் என்பதில் சந்தேகமில்லை.