ஜெய் பீம்

ஜெய் பீம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இது படம் அல்ல!
நமக்கு பாடம்...
ஜெய் பீம் நிகழ்வு 1993ல் நடந்தது. அச்சம்பவம் இருளர் மக்களுக்கு மட்டுமாவது அல்ல. நீதியரசர் சந்துரு அவர்கள் வக்கீலாக வழக்காடி நீதி கிடைக்க வழிவகுத்தார்.
இப்படத்தின் வெற்றி இதில் இருந்து நாம் கற்கும் பாடமே!
இது வெறும் ஒரு நிகழ்வு அல்ல....
இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் அடக்குமுறை நிற்கவில்லை.
சாதி, மதம், அதிகாரம் மற்றும் பணம் என்ற ஆயுதங்கள் இருப்பவர்கள், இதெல்லாம் இல்லாதவர்கள் மீது நடத்தும் வன்மம் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வு நமக்கு நடக்காது என்று நம்பிக்கொண்டு இருக்கும் சாமான்ய மக்களுக்கு ஜெய்பீம் சொல்லும் பாடம் ....
இன்றைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலையை உணர்ந்தால் ஜெய் பீம் சொல்லும் பாடம் புரியும்.
செங்கேணி மற்றும் ராசாகண்ணு இருந்த நிலையில்தான் பலர் இருக்கிறார்கள். இன்றும் கொத்தடிமைகளாக பலர் வாழ்கின்றனர். இதுபோல் நவீன கொத்தடிமைகளாக மக்களும் வாழ்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று மதம், ஜாதி, நாட்டுப்பற்று, முன்னேற்றம் என்ற புதிய கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளைக்கொண்டு கட்டப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் அதை உணர்வதில்லை. ஆகையால் தான் நம் வாழ்வாதாரம் விலைவாசி ஏற்றதால், பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் சீரழிவை உணரமுடியா மரத்த நிலையில் இந்த மதம், ஜாதி, நாட்டுப்பற்று வைத்திருக்கிறது.
இல்லை என்று மறுக்க முடியுமா?
இனிவரும் கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலே நமக்கு பாடம் .....
படத்தில் வந்த அறிவொளி இயக்க ஆசிரியை போல் இன்று நம்மிடையே தன்னலம் பாராது உடன் வர யாரேனும் உண்டோ?
இன்rறு ஆழமாக ஊன்றிய ஜாதி மற்றும் மத அரசியலால் உள்ளூர் தலைவர்கள் , நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுப்பார்களா?
மனிதஉரிமைக்கு குரல்கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நன்கறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் நடத்தப்படும் நிலையை மௌனமாக கடக்கும் சமூகமாக மாறிவிட்டோம். இல்லை என்று சொல்ல முடியுமா?
ஸ்டெயின் சுவாமி, சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே போன்றவர்களும் கௌரி லங்கேஷ் போன்றவர்களும் நாட்டிற்கோ அல்லது நாட்டுமக்களுக்கோ தீங்கு செய்தவர்களா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு; குரல் அற்றவர்களுக்கு குரல் கொடுத்த இவர்களைப்போன்றவர்களின் குரல்வளையை நசுக்கப்படும் போது மெளனமாக பார்த்து இருப்பதற்கு ..நம்மை நாளை மிகவும் வருந்த வேண்டிய நிலைக்கு இட்டுசெல்லும் என்ற சிந்திக்கும் உணர்வு உண்டோ? உலகளவில் நன்கறிந்த இவர்களின் நிலையே இப்படியெனில்... இதை எல்லாம் ஒன்றும் நடவாதது போல் கடந்து செல்லும் நம் நிலை என்னவாகும்?
செங்கேணி நிகழ்விற்கு முன்னும் பின்னும்.. வெளிச்சத்திற்கு வந்த பெனிக்ஸ் மன்றும் ஜெயராஜ் நிகழ்வு சொல்வது இன்றளவும் காவல்துறை அராஜகம் தொடர்வதே. நல்லவர்களும் காவல்துறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை, ஆனால், காவல்துறையில் அராஜகம் செய்பவர்களை தண்டிக்காமல் காப்பாற்றுவது எது?
காலமாற்றத்திற்கேற்ப சமூகத்தில் வெவ்வேறு சித்தாந்தங்கள் வருவதை மறுப்பதற்கில்லை. ஆகையால் தான் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சித்தாந்தங்கள் எழுந்தது. தனிநபர்கள் இதுபோன்ற ஒன்றோ அல்லது அதற்குமேலோ ஈர்க்கப்படுவதும் இயல்பே. இச்சித்தாந்தகளை ஏன் பெரும்பான்மையானவர்கள் விரும்புவது இல்லை என்று சிந்திக்கவும்?
எந்த சித்தாந்தமாக இருந்தாலும் சரியே. ஆனால், ஏதேனும் ஒன்று மனிதத்தன்மையற்ற, அடுக்குமுறைக்கு உட்பட்ட, சாதிய, பாலின, ஏற்றத்தாழ்வுகளை ஆதரிக்கிறதோ அதன் தாக்கம் இப்பொழுது நடக்கும் பல சம்பவங்களை போன்று இனியும் ஆண்டாண்டுகாலமாக தொடரும் என்று உணரும் நுண்ணறிவு திறனை இழந்தோமா?
தமிழ் நாட்டிலேயே இப்படி நடந்த சம்பவங்கள் மற்றும் நடக்கும் ஏராளம் எனில்.. மற்ற மாநிலத்தின் நிலையை.. முக்கியமாக பின்தங்கிய வடமாநிலங்களின் நினைக்கவே முடியவில்லை...
இக்கதையில் வரும் சமூகத்தை இணைக்கும் சங்கிலியின் கண்ணிகளை உடைத்தெறிய வேண்டிய எல்லாவற்றையும் செய்யத் தொடங்கிய அரசாங்கத்தை, கண்டும் காணாமல் இருக்கும் ஜனநாயகத்தின் தூண்களை என்ன செய்ய? இப்படியான அவல நிலையில் எப்படி நீதியரசர் சந்துரு நீதிக்கிடைக்க செயல்பட்டாரோ ...அவரை போல் வரும் காலங்களில் நம்மிடையே பலர் இருப்பர் என்று எப்படி நம்புவது?
செங்கேணியை, தோழர் சந்துரு வக்கீலிடம் அழைத்து வந்த இணைப்புகள் இன்று மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றும் இன்றைய நிலையில் மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர் என்ற வார்த்தைகள் தீண்டத்தகாத வார்த்தைகள் போன்ற நிலையில் மக்களை நினைக்கவைக்கும் செயலை அரசே செய்வதை என்ன சொல்ல?
இக்கேள்விக்கு விடை தேடாமல் இருந்தால் இப்பொழுது இருப்பதும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இன்று மதம், ஜாதி, நாட்டுப்பற்று, முன்னேற்றம் என்ற வார்த்தை ஜால போதையில் மக்களை வைத்து...அடித்தட்டு மற்றும் மத்திய வர்க்கம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும், நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் அதிகார, சாதி மற்றும் பணம் பலம் கொண்டவர்களை அடையாளம் கண்டு விழித்தெழுவோம்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை கீழ்நிலையில் உள்ளது. உதாரணமாக பட்டினி, வறுமை, சமூக ஆர்வலர்கள், பெண்கள்மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மதம் மற்றும் சாதிய கொடுமைகள் இந்த ஆறேழு வருடங்களில் அதிகரித்துள்ளது. இதைப்பற்றி ஊடகங்கள் பேச மறுத்தும் வெளிச்சத்திற்கு வந்தது சொற்பமே.
கோவிட் என்ற பெருந்தொற்றை மிக கேவலமாகக் கையாண்ட நிலையை சுட்டிக்காட்ட மறுத்த ஊடகங்கள் ... அதை சுட்டிக்காட்டிய சாமான்ய மக்களின்மீது நடந்த அடக்குமுறையை மௌனமாக கடந்த சமூகம் .... இப்படியே தொடர்ந்தால் நாளை மிகவும் வருந்த வேண்டிய நிலைக்கு இட்டுசெல்லும்..... அதை உணர்ந்தோமா?
கல்வி, விவசாயம், தொழில், வாழ்வாதாரம் போன்ற எதையும் விட்டுவைக்காமல் சிதைத்த ஒன்றிய அரசின் செயலை கண்டும் காணாமல் இருந்த ..இருக்கும் நிலை .. நாளை எல்லாமே குழியில் இட்டு மூடிய நிலையை ஒத்ததாகும்... என்று உணர்ந்தோமா?
அரசின் மனித தன்மையற்ற, அதிகார போதையில் மக்களை பற்றி கிஞ்சித்தும் உணராத ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், கேள்வி கேட்காத ஜனநாயக தூண்களை..... மதம், ஜாதி, நாட்டுப்பற்று, முன்னேற்றம் என்ற போதையில் உழலும் மக்களுக்கு நடுவில் ஜெய் பீம் போன்ற கருக்களை கொண்ட படங்கள் மூலம் விழிக்க வைக்கும் முயற்சியே ஜெய் பீம் (நம்பிக்கை).
இன்றும் தோழர் சந்துரு போல் மனித உரிமை சார்த்த வழக்குகளுக்காக வாதாடுவோரும், மக்களுக்காக சிந்திக்கும் சாமான்ய மனிதர்களுமே நாளைய ஜெய் பீம்.
ஜெய் பீம்... என்பது எதோ தலித்துகளுக்கு ஆனது அல்ல... அம்பேத்கரும் தலித்துகளுக்கு மட்டுமேயான தலைவர் அல்ல. அவர் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக; சாதி மதத்திக்கு அப்பாற்பட்ட தலைவர். ஆகையாய் அவரை தலித் என்ற சிறிய வட்டத்தில் சுருக்கிய நிலைக்கு இன்று வருந்த வேண்டிய நிலை.
சமூகம் நிலையானது அல்ல.... மாற்றம் வரும்... ஜெய் பீம்.
இனியேனும் விழிப்போம்..... மதம், ஜாதி, நாட்டுப்பற்று, முன்னேற்றம் என்ற வார்த்தை ஜால போதையில் இருந்து.
விழிப்போம் .... ஜெய் பீம் என்றால் நம்பிக்கை...
ஜெய்பீம் என்றால் ஒளி..அன்பு.. வெளிச்சத்தை நோக்கிய பயணம்.... பலகோடி மக்களின் கண்ணீர்த்துளி (நன்றி: ஜெய்பீம் திரைப்படம்)
நாள்: 03/11/2021

எழுதியவர் : விஜயலக்ஷ்மி சுஷில்குமார் (8-Nov-21, 1:53 pm)
பார்வை : 311

சிறந்த கட்டுரைகள்

மேலே