தேன்குரலின் கசப்பு

"நான் பாடிய முதல் பாட்டு . இவள் பேசிய தமிழ் கேட்டு. நான் கவிஞன் ஆனதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து" என்ற பழைய திரைப்பட பாடல் வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்தபோது " ராஜி, இதே பாடலை 'தேன்குரல்' என்ற ஒரு ஆன்லைன் தளயத்தில் ஒருவர் பாடியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன். அடடா, அவ்வளவு அருமையாக பாடியுள்ளார். மிகவும் இனிமையான தனிப்பட்ட குரல். நீயும் ஒரு முறை கேள்" என்று சொன்னவள் ராஜியின் சகோதரி ஜானகி.
ராஜி " ஜானு உனக்கு தெரியும் இல்லை நான் இப்போது பாடுவதை எல்லாம் விட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. தவிர , பாடல்கள் கேட்பதை கூட விட்டுவிட்டேன். நீ 'தேன்குரல்' தளயத்தில் ஆறு மாதங்களாக பாடி வருகிறாய். உனக்கு பிடித்த மாதிரி நீ பாடிக்கொள். மற்றவர்கள் பாடல்களையும் கேட்டு ரசித்து ஆனந்தித்து மகிழ்ந்திரு. என்னை விட்டுடும்மா என் இனிய சகோதரி."
ஜானு "ராஜி, உன் தற்போதைய வாழ்க்கை மற்றும் மனநிலை எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் எனக்கு இந்த பாடலை நீ ஒருமுறை கேட்கவேண்டும் என்று மிகவும் விருப்பமாக உள்ளது. எனக்காக ஒருமுறை நீ இந்த நான்கு நிமிட பாடலை உனக்கு எப்போது கேட்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது கேள். ஆனால் ஒரு முறை நிச்சயம் கேட்க வேண்டும்."

அந்த வார கடைசியில் சனிக்கிழமை மாலை ராஜி அலுவலகத்திலிருந்து வந்தவுடன் காபி டிபன் எடுத்துவிட்டு " ஜானு, அந்த பாடல் சொன்னாயே அதை இப்போது கேட்கிறேன்" என்று சொன்னபோது ஜானுவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. " இதோ இப்போதே என் போனில் கேள் என்று அவளது போனில் ஹெட்ப்போனை இணைத்து 'தேன்குரல்' தளயத்தில் ரகு என்பவர் கரோக்கி ட்ராக்கில் பாடிய " நான் பாடிய முதல் பாட்டு" என்ற பழைய தமிழ் திரைபடபடலை இசைக்கவிட்டாள் ஜானு என்கிற ஜானகி. ஐந்து நிமிடம் கழித்து ஜானு " ராஜி என்ன பாடலை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டபோது ராஜி சைகையில் இரு இரு கேட்டு கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்பாடலை மூன்றாவது முறையாக தொடர்ந்து கேட்டாள். ஜானுவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை நான் பாடிய கரோக்கி பாடல்களை கேட்க தொடங்கிவிட்டாளோ என்னமோ என்று நினைத்தாள். அப்போது ராஜி ஆச்சரியத்துடன் " அற்புதமாக பாடியுள்ளார். என்ன ஒரு தனிப்பட்ட குரல்.உண்மையிலே தேன்குரல் தளயத்தில் ரகுவின் குரல் தேன்குரல்தான் என்று வெகுவாக பாராட்டினாள். அன்று இரவு மீண்டும் ஜானுவிடமிருந்து செல்போனை வாங்கி மீண்டும் அதே பாடலை இரண்டு முறை கேட்டாள் . பின்னர் ரகு பாடிய வேறு சில பாடல்களையும் கேட்டாள்.

ஞாயிறு காலை காபி குடித்து விட்டு " ஜானு , நானும் இந்த தேன்குரல் ஆன்லைன் ஆப்பை என் செல்போனில் டவுன்லோட் செய்துகொள்ள போகிறேன். கொஞ்சம் உதவி செய்வாயா"என்று ராஜி கேட்டபோது ஜானகிக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது . " இதோ இப்போதே செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு உடனடியாக ராஜியின் செல்போனில் 'தேன்குரல்' ஆப்பை டவுன்லோட் செய்து ராஜீயையும் அதில் ஒரு உறுப்பினராக சேர்த்துவிட்டாள். அடுத்த இருதினங்களில் ராஜி என்கிற ராஜலக்ஷ்மி 'தேன்குரல்' ஆப்பில் பாடவும் ஆரபித்துவிட்டாள். ஜானுவுக்கு நம்பவே முடியவில்லை.பாடுவதை பாடல்கள் கேட்பதையும் நிறுத்திவிட்டு ராஜீயா இதை செய்வது என்று அவளுக்கு ஒரே திகைப்பாக இருந்தது.

ராஜி 'தேன்குரலில்' முதலில் செய்த காரியம் ரகுவுக்கு அவர் பாடிய " நான் பாடிய முதல் பாட்டு" பாடலுக்கு பாராட்டு செய்தி அனுப்பியது தான். அவள் அனுப்பிய செய்தி " ஆஹா, இனிமையோ இனிமை கொள்ளை இனிமை. ஒரிஜினல் பாடலை TMS அவ்வளவு இனிமையாக பாடினார் என்றால் நீங்கள் உங்கள் தேன்குரலில் அவ்வளவு அற்புதமாக பாடியுள்ளீர்கள்." இதற்கு ரகுவும் நன்றி சொல்லி செய்தி அனுப்பினார் . அதன் பிறகு ராஜி, ரகு தன்னுடன் இணைந்து பாட அழைப்பு விடுத்த சில பாடல்களில் இணைந்து பாடினாள். அந்த பாடல்கள் அனைத்திற்கும் ரகுவிடமிருந்து அவளின் குரலையும் பாடல்களையும் பாராட்டி வாழ்த்துக்கள் வந்ததில் ராஜிக்கு மிகவும் சந்தோஷமாக குதூகலமாக இருந்தது.

அடுத்த மூன்று மாதங்களில் ராஜீ ரகுவிடம் அடிக்கடி மெசேஜ் வைத்தாள். சொல்லி வைத்தது போல் அவருடன் அநேக பாடல்களில் இணைந்தும் பாடினாள். ரகுவும் அவளது பாடல்கள் மற்றும் அவளது விமரிசனங்களை வெகுவாக ரசிக்க தொடங்கினான். ராஜீ தன் பாடல்கள்களை மிகவும் விரும்புகிறாள் என்று நினைத்தவனுக்கு அவளது சில மெசேஜ் அவனை அவள் மிகவும் விரும்புவதாக தெரியப்படுத்தியது. உதாரணமாக அவள் அனுப்பிய இரண்டு செய்திகள் " உங்களுடன் எங்கிருந்தோ பாடுவதே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதே, நேரில் இணைந்து பாடினால் எப்படி இருக்குமோ" " குறைந்தது 30 , 40 பெண்கள் உங்களுடன் இணைந்து பாடுகிறார்கள்.ஆனால் என்னுடைய ஒவ்வொரு பாட்டையும் அவ்வளவு ரசித்து எனக்கு நீங்கள் வாழ்த்து தெரிவிப்பதை என் வாழ்வின் பொன்னான நேரங்களாக நினைக்கிறன். உங்களை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லவும் ஆவலாய் இருக்கிறேன்."
இந்த விரைவான விறுவிறுப்பான முன்னேற்றங்கள் ரகுவின் மனதிலும் கொஞ்சம் கூடுதலான இன்பத்தை கொடுத்தது. ரகு நல்ல உயரம் , கொஞ்சம் கருப்பு சாயல் உடம்பு , ஓரளவுக்கு பார்க்கக்கூடிய முகமே. அவன் புகைப்படம் 'தேனிலவு' தளத்தில் அவனது குறிப்புக்கள் பக்கத்தில் இருந்தது. எனவே ராஜி அவனது புகைப்படத்தை நிச்சயம் பார்த்திருப்பாள். ஆனால் ராஜி தன்னுடைய குறிப்புக்கள் பக்கத்தில் அவளது புகைப்படம் வைக்காமல் ஒரு பூவையே வைத்திருந்ததால், ரகுவுக்கு ராஜி பார்க்க எப்படி இருப்பாள் என்று தெரியாது. இப்படியாக இன்னும் இரண்டு மாதங்கள் சென்றது. கிட்டத்தட்ட 100 பாடல்களை ராஜி, ரகுவுடன் இணைந்து பாடிவிட்டாள். இதற்கிடையில் இவர்கள் வாட்ஸாப்ப் தொடர்பும் தொடங்கியது. ராஜி சென்னையில் வசித்து கொண்டிருக்கிறாள் மற்றும் ரகுவை விரைவில் காண மிக ஆவலுடன் இருப்பதை ரகு வெகு எளிதாக கண்டுகொள்ள முடிந்தது. ரகு பூனாவில் ஒரு நிர்வாகத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை செய்து வந்தான். கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. அவன் மனைவி பட்டம் பெற்றவளாக இருப்பினும் வெளியில் சென்று பணி புரிவதை விரும்பவில்லை. வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொண்டு குடும்பத்தையும் சீராக நிர்வாகம் செய்துகொண்டிருந்தாள். ரகுவுக்கும் அவன் மனைவி சுமதி மீது மிகுங்க பிரியமும் பாசமும் இருந்தது.

ஒருமுறை ரகு அலுவல் வேலையாக சென்னை செல்லவேண்டி இருந்தது. இதை அவன் ராஜியுடன் வாட்சப்பில் பரிமாறிக்கொண்டான். ராஜி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ரகுவுக்கு எப்போது முடியுமோ அப்போது தானே நேரில் வந்து ரகுவை சந்திப்பதாக ரகுவுக்கு மெசேஜ் வைத்தாள். அவனுக்கும் ராஜி எப்படி இருப்பாள் என்ற லேசான கிளுகிளுப்பு இருந்தது. சென்னை வந்தடைந்த ரகு அவனுடைய சகோதரன் வீட்டிற்கு சென்று தங்கினான். இரண்டு நாட்கள் நிறைய அலுவல்கள் இருந்த வண்ணம் இருந்தது. இரண்டு நாளும் ராஜியுடன் போனில் உரையாடினான். ராஜியின் குரலில் அவள் அவனை பார்க்கப்போகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தெரிந்தது. மூன்றாவது நாள் ரகுவின் வேலைகள் காலையிலேயே முடிந்துவிட்டது. மதியம் உணவை சேர்ந்து சாப்பிடலாமா என்று வாட்சப்பில் மெசேஜ் வைத்தான். மதியம் வருவது கடினம் என்றும் மாலை நான்கு மணி அளவில் சந்திக்கமுடியும் என்றும் ராஜி தெரிவித்தாள். திநகர் பனகல் பார்க்கில் மலை நான்கு மணிக்கு சந்திக்க இருவரும் ஆவலுடன் இருந்தனர். ரகு, தான் நீல ஜீன்ஸ் மற்றும் ஆகாய நீல சட்டையும் அணிந்துள்ளதாக போனில் மெசேஜ் வைத்தான். ராஜி, தானும் ஆகாய நிற சேலை மேட்சிங் ப்ளோசும் அணிந்து வருவதாக பதில் வைத்தாள். பின்னர் பின்பகல் மூன்று மணிக்கு ரகுவுக்கு போன் செய்து தான் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக தெரிவித்தாள் .

ரகுவும் நாலு மணிக்கு முன்பே பனகல் பார்க்கில் இருப்பதாக சொன்னான். ராஜிக்கு ரகுவை காணப்போகிறோம் என்ற நினைப்பு நெஞ்சில் படபடப்பை தந்தது. ரகுவுக்கு இவள் எப்படி இருப்பாளோ, குரலை வைத்து பார்க்கையில் மிகவும் இளமையாக தெரிகிறது என்ற நினைப்பெல்லாம் வந்து அலை மோதியது. இருவரும் பார்க்குக்கு அருகில் வந்து கொஞ்சம் அங்கும் இங்கும் முழித்து பார்த்து விட்டு கொஞ்சம் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்துவிட்டு ஐந்து நிமிடத்திற்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ராஜி மிகவும் அழகுடன் நீல நிற புடவையில் ரகுவை பார்த்து புன்முறுவல் செய்தாள். ரகுவுக்கு நம்பவே முடியவில்லை. அவன் எதிர்பார்த்ததை விட ராஜி கோதுமை நிறத்தில் மிக அழகாக இருந்தாள். இருவரும் பார்க்கில் உள்ள ஒரு சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தனர். ராஜி கையில் ஒரு சின்ன பையுடன் வந்திருந்தாள். ரகு வேடிக்கையாக " எங்கே இங்கிருந்து எங்காவது வெளியூர் போகவேண்டுமா?' என்று கேட்டான். அதில் உங்களுக்கு ஒரு விஷயம் கொண்டு வந்திருக்கிறேன் என்றாள் ராஜி. ரகுவுக்கு ஆவல் அதிகமானது. ஒரு புறத்தில் அவளுடைய அழகான குடும்பப்பாங்கான முகத்தை கண்டு வியப்புடன் இருக்கையில் அவள் அவனுக்காக ஏதோ கொண்டு வந்திருப்பது அவன் வியப்பை இன்னும் அதிகரித்தது. ராஜி பையிலிருந்து ஒரு பிளாஸ்கை எடுத்தாள். " என்ன, இந்த பிளாஸ்கில் என்னை அடைத்து எடுத்துசெல்வீர்களா" என்று புன்னகை செய்தவாறு வேடிக்கையாக கேட்டான். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது இதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிய ராஜி பிளாஸ்க்கிலிருந்து சூடான பால் பாயசத்தை ஒரு டம்பளரில் ஊற்றி ரகுவுக்கு கொடுத்தாள். " ஆஹா, இன்றைக்கு எனக்கு என்ன யோகம் அடித்திருக்கிறது" என்று சொல்லி ரகு அதை வாங்கி மெல்ல பருக ஆரம்பித்தான். பாயசத்தை இனிப்பும் ருசியும் அவனை அப்படியே மயக்கிவிட்டது. " இது பாயாசமா அல்லது தேவர்கள் அருந்தும் அமுத பானமா என்று கூறியபடி பாயசத்தை மிகவும் ரசித்து பருகலானான். " நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்ல அவள் இன்னொரு சின்ன டம்பளரில் பாயசத்தை ஊற்றி அவனுடன் சேர்ந்து பருக தொடங்கினாள். " இன்னும் ஒரு கிளாஸ் பாயசம் பிளாஸ்கில் இருக்கிறது. அதையும் நீங்கள் அருந்த வேண்டும்" என்றாள்.
ரகு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு " நீங்கள் இதை வாங்கி வந்தீர்களா அல்லது வீட்டில் தயார் செய்து எடுத்து வந்தீர்களா" என்றான். ராஜி " நீங்களே சொல்லுங்கள், வீட்டில் செய்தது போல் இருக்கிறதா இல்லை கடையில் வாங்கியது போல் இருக்கிறதா". " நிச்சயமாக இது வீட்டில் செய்யப்பட்டது தான். சந்தேகம் இல்லை.அதுவும் உங்கள் கைகளால் செய்ததாகத்தான் இருக்கும்" என்றான் ரகு.
ராஜி " சரியாக சொன்னீர்கள், நானே என் வீட்டில் அந்த அம்மாவுக்கு தெரியாமல் செய்து எடுத்து வந்த ஸ்பெஷல் பாயசம்"
ரகு " அதெப்படி அம்மாவுக்கு தெரியாமல் வீட்டில் பாயசம் செய்தீர்கள்?
ராஜி " அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாததால் அவர்கள் சமையல் செய்ய முடிவதில்லை. அவர்களின் படுக்கை அறையில் தான் அதிகம் இருப்பார்கள். என் சின்ன மகள் வேலைக்கு சென்று விட்டாள். நேரம் சூழ்நிலை அமைந்ததால் மதியம் இரண்டு மணிக்கு துவங்கி ஒரு மணியில் பாயசம் செய்து விட்டேன்."
ரகு " எவ்வளவு நெய், எவ்வளவு முந்திரி, புளிக்காத இனிப்பு திராட்சை, எனக்கு பிடித்த சரியான படத்தில் ஏலக்காய் பச்சை கற்பூரம். ஆஹா பலே பலே. என்ன தவம் செய்தேன் இந்த பாயசம் அருந்த"
ராஜி " ரொம்ப மகிழ்ச்சி. ஆமாம், நீங்கள் மீண்டும் எப்போது பூனா செல்வீர்கள்?"
ரகு " நாளை மாலை எனக்கு ரயில், சென்ட்ரலிலிருந்து"
ராஜி " ஓ அப்படியா, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நீங்கள் சென்னையில் தங்கியிருந்தால் நான் உங்களை இன்னும் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கக்கூடும். பரவாயில்லை. கிடைத்தவரைக்கும் சந்தோஷம்"
ரகு " அடுத்த முறை நிச்சயமாக உங்களுடன் இரண்டு நாட்களாவது இருக்குமாறு வருகிறேன். ஆமாம் நீங்களே பார்க்கிறீர்கள் நான் எப்படி இருக்கிறேன். உங்கள் நிறத்திற்கும் எனது நிறத்திற்கும் வெகு தூரம். என் பாடல்களை தவிர என்னிடம் வேறு என்ன பெரிய விஷயம் என்னிடம் உள்ளது, நீங்கள் என்னை இவ்வளவு விரும்ப? "
ராஜி " உங்கள் பாடல்கள்தான் என்னை இவ்வாறு கவர்ந்தது. உங்களின் அபூர்வமான குரல்தான் என்னை உங்களிடம் ஈர்த்தது. உங்களின் முகம் உடல்கட்டு இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட தேவை இல்லாத விஷயங்கள். உங்கள் தொண்டையிலிருந்து பிறக்கும் அந்த இனிய நாதத்திற்கு நான் அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது."
ரகு " இதை கேட்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். நான் என்னை ஒரு பெரிய பாடகனாக நினைத்ததே இல்லை. ஏதோ என்னுடன் 'தேன்குரல்' ஆன்லைன் ஆப்பில் பாடுபவர்கள் சிலர் நான் பாடும் விதத்தை ரசிக்கிறார்கள். ஆனால் உன்னை போல் பரம ரசிகை வேறு எவரும் இல்லை"
ராஜி " நல்லது. உங்கள் மனைவி என்ன செய்கிறாள்? இரு பிள்ளைகளா? அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
ரகு " அடேங்கப்பா, எப்படி இவ்வளவு சரியாக இரண்டு பிள்ளைகள் என்று சொன்னீர்கள். எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் தான். ஒருவன் அமெரிக்காவில் பிஎச்டி படிக்கிறான். இன்னொருவன் பொறியியல் முடித்துவிட்டு டெல்லியில் வேலை செய்கிறான். மனைவி இல்லம் பராமரிக்கும் இனிய கண்மணி. நான் இந்தமாதிரி தினமும் இரண்டு மூன்று மணி நேரம் ஆன்லைன் ஆப்பில் பாடுவதும், இதில் சேட் செய்வதும் அவளுக்கு பிடிக்காது. இருந்தாலும் பாடுவதில் எனக்கு உள்ள அதிக விருப்பத்தால் இதை மிகை படுத்துவதில்லை. எனினும் அவ்வப்போது கொஞ்சம் சூக்ஷ்மமாக இதை குறிப்பிடுவாள்."
ராஜி " உண்மை தான். எந்த ஒரு மனைவியும் தன் கணவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அதிக நேரம் அவளுடன் இருக்கவேண்டும் என்று தானே விரும்புவாள்."
ரகு " கடந்த 25 வருடங்களாக நான் அவள் விருப்பப்படி தான் இருந்து வந்தேன்.இப்போது ஒரு வருடமாகத்தான் இந்த ஆன்லைன் ஆப்பில் சேர்ந்து என் இசையின் மடையை திறந்து விட்டுக்கொண்டிருக்கிறேன்."
ராஜி " நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். இனிமேல் நீங்கள் ஒன்லைனில் பாடுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் பாடல்களை கேட்க நான் எப்போதும் ஆவலாகவே இருக்கிறேன்.இருப்பினும் உங்கள் மனைவியின் மனநிலையும் நீங்கள் பார்க்கவேண்டும் அல்லவா?"
ரகு " நீங்கள் சொல்வதால் கட்டாயம் நான் இதை கேட்கிறேன். இனி ஒரு மணிக்கு மேல் தினம் நான் என் பாடல்களுக்காக செலவழிக்கமாட்டேன்."
ராஜி " மிக்க நன்றி. என்னை தவறாக நினைக்கவேண்டாம்"
ரகு" சொல்லியது உன் திறமை. அதை கடைபிடிப்பது எனது கடமை. உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் "
ராஜி " எனக்கு இருமகள்கள். கணவரை பத்து வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டேன். பெரிய பெண்ணுக்கு திருமணம் ஆகி பெங்களுரில் இருக்கிறாள். சின்னவள் போனவருடம் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு mnc கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்."
ரகு " இவ்வளவு அழகான பண்பும் சமையல் மற்றும் பாட்டு கலை தெரிந்த பெண்ணை எவன் விவாகரத்து செய்வான் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது"
ராஜி " அவர் வேறு ஒரு பெண்ணுடன் விவகாரம் வைத்துக்கொண்டிருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் சொல்லியும் அவர் அதை கேட்கவில்லை. ' உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடு" என்றார். நான் ஒரு அரசாங்க வேலையில் இருந்து வருவதால் துணிவுடன் நானும் அவரை விவாகரத்து செய்துவிட்டேன்."
ரகு " ஓ, உங்களிடம் உள்ள தைரியம் அசாத்தியம். அதுவும் சரியாக 40 வயதில் விவாகரத்து செய்வது என்பது எல்லோராலும் முடியாத கடினமான காரியம். சரி. நடந்தது நடந்துவிட்டது. இப்போது நீங்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதுதான் என் ஆசை, என் பிரார்த்தனையும் கூட."

அடுத்த நாள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜி ரகுவை சந்தித்தாள். ரயில் கிளம்ப இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. தன் பையிலிருந்து மீண்டும் பிளாஸ்கை எடுத்து அதிலிருந்து சூடான காப்பியை ஒரு டம்பளரில் ஊற்றி ரகுவுக்கு கொடுத்தாள். மிகவும் ரசித்து அதை ரகு குடித்தான். அதன் பின் இரண்டு பொட்டலங்களை ராஜி ரகுவுக்கு கொடுத்தாள். " ஒன்றில் உருளை பரோட்டா நான்கு, இன்னொன்றில் தொட்டுக்கொள்ள மசாலா" என்றாள். ரகு " ஏன் நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டீர்கள்?
ராஜி "என்னால் முடிந்ததை தான் செய்து வந்தேன். இனிமேலும் என்னை நீங்கள் என்று அழைக்காமல் நீ வா என்று சுதந்திரமாக அழைப்பதை நான் மிகவும் விரும்புவேன் "

ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியபோது ராஜி கண்ணீர் விட்டாள். ரகு அவளை லேசாக தட்டி கொடுத்து "அழ வேண்டாம் ராஜி. நாம் நிச்சயம் அவ்வப்போது சந்தித்தவண்ணம் இருப்போம். நான் உனக்கு வாட்சப்பில் மெசேஜ் வைத்துக்கொண்டிருப்பேன். என்னுடன் ஜோடி பாடல்களில் இணைய மறக்கவேண்டாம்."

ராகுவிற்கு இன்னொரு முறை யோகம் அடித்தது. ஒரு வருட காலம் பின்பு மீண்டும் வேலை விஷயமாக சென்னை செல்ல நேர்ந்தது. அந்த முறை அவன் இரண்டு நாட்கள் ராஜியுடன் இருக்க திட்டமிட்டான். ராஜி அவள் குடும்ப பொறுப்புகள் காரணமாக இரண்டு நாட்கள் வெளியூர் செல்ல இயலாது என்று சொன்னதால், முதல் நாள் இருவரும் பஸ்சில் காஞ்சிபுரம் சென்று கோவில்களை தரிசித்து வந்தார்கள். வரதராஜ பெருமாள் கோவிலில் இருவருமே ஒருமணி நேரம் அமைதியான சூழ்நிலையில் தியான உணர்வுடன் இருந்தனர். திரும்பி வரும்போது இருவரும் பஸ்சில் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து வந்தார்கள்.அடுத்த நாள் சனிக்கிழமை ராஜியின் சின்ன மகளுக்கு விடுமுறை என்பதால் ராஜி சமையல் செய்து விட்டு அவளிடம் அம்மாவையும் வீட்டையும் கவனித்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு தான் தன் அலுவலக தோழிகளுடன் திருத்தணி செல்வதாக கூறிவிட்டு ரகுவை பனகல் பார்க்கில் சந்தித்தாள். அங்கிருந்து இருவரும் தானே ஒட்டி செல்லும் வாடகை கார் எடுத்து கொண்டு திருத்தணி சென்றனர். காலை பத்து மணி என்பதால் நல்ல வெயில். தரிசனம் செய்துவிட்டு இருவரும் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தினார்கள்.
ரகு " உடனே திரும்பவேண்டுமா. இல்லையெனில் கொஞ்சம் ஓய்வு எடுத்து செல்வோமா?
ராஜி " ஓய்வு எடுக்க எங்கே செல்லவேண்டும்?"
ரகு " ஏதாவது லாட்ஜில் இரண்டு மணிநேரம் தங்கிவிட்டு செல்லலாம்"
ராஜி " ஒன்றும் பிரச்சினை இருக்காது தானே?"
ரகு " அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை"
அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் ஒரு லாட்ஜில் குளிர்ச்சி அறையில் இருந்தனர். ரகு வரவேற்புக்கு போன் செய்து நான்கு கிளாஸ் கரும்பு ஜூஸ் ஆர்டர் செய்தான்.
முதல் பத்து நிமிடம் இருவரும் எதிரெதிரே அமர்ந்து பேசினார்கள். பின்னர் இருவரும் அங்கு உள்ள சோபாவில் அருகருகில் அமர்ந்து கொண்டார்கள். ஏதோ மெல்ல மெல்ல பேசினார்கள். ரகு அவனை அறியாமலேயே ராஜியை நெருக்கி அணைத்து முத்தம் கொடுக்க துவங்கினான். முதலில் கொஞ்சம் கூச்சமும் நாணமும் அடைந்தாலும் ராஜி அவனது அணைப்பையும் முத்தங்களையும் வெகுவாக ரசித்தாள். ஆனால் அவளாகவே ஒன்றும் செய்யாமல் இருந்தாள். ரகு அவளை மெதுவாக படுக்கைக்கு அழைத்து சென்றான். கொஞ்சம் அவளின் அழகுகளை ரசித்து கொஞ்சம் ருசித்தான். ஆனால் என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒன்றும் பெரிதாக சாதிக்காத நிலையில் மிகவும் சோர்வுற்று படுக்கையில் சாய்ந்து விட்டான். பின்னர் இருவரும் கொஞ்சம் பேசியவண்ணம் இருந்தனர். ராஜியின் விருப்பத்திற்கிணங்க இருவரும் இணைந்து ஒரு திரைப்படப்பாடலை பாடினார்கள் . அடுத்த அரை மணியில் இருவரும் ஹோட்டலை காலிசெய்துவிட்டு வாடகை காரில் சென்னை வந்து சேர்ந்தனர்.

ஏனோ தெரியவில்லை. எதற்கோ புரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராஜி ரகுவிடம் வாட்சப்பில் மெசேஜ் அனுப்புவதை குறைக்க தொடங்கினாள். பாடுவதையும் தான். ஒரு மாதத்திற்கு பின் இருவரிடையே வாட்ஸாப்ப் தொடர்பு அபாயமான நிலையை எட்டியது. ரகு நான்கு முறை பெரிய மெசேஜ் வைத்தால் ராஜி ஒரு முறை ஒரே வார்த்தையில் முடிப்பாள். செல்போனில் பேசுவது ஏற்கெனவே குறைவுதான். அது இன்னமும் குறைந்தது. ரகுதான் அதிகமாக ராஜியை தேடினான். சுமார் ஆறு மாதங்கள் ஆன பின்பு ரகு ராஜி இருவரும் வேற்று மனிதர்கள் ஆயினர். தேனிசை ஆப்பில் எப்போவாவது ரகு ராஜிக்கு மெசேஜ் வைப்பான். ஆனால் அங்கிருந்து பதில் வராது. இந்த நிலையில் ரகு ராஜியை மறக்க தொடங்கினான். ஆனால் அவனால் அவளை மறுக்கவும் மறக்கவும் முடியவில்லை. இப்படியாக இரண்டு ஆண்டுகள் கழிந்தது.

திடீரென ஒரு நாள் ரகு வீட்டில் இருக்கும்போது ஒரு செல்போன் எண்ணிலிருந்து கால் வந்தது. யாரோ என்று போனை எடுத்தவன் ஒரு நொடி அதிர்ந்து போனான். அங்கிருந்து " நான் தான் ராஜி பேசுகிறேன்" ரகு சமாளித்துக்கொண்டு " நான் இப்போது அலுவலகத்தில் இல்லை. பதவி ஓய்வு பெற்றுவிட்டேன். பிறகு அழைக்கிறேன்" என்று சொன்னவுடன் ராஜியும் போனை வைத்துவிட்டாள்.

அடுத்த நாள் ரகு வெளியே சென்றபோது ராஜியிடம் பேசினான்.
ராஜி " நீங்க நல்ல இருக்கிறீர்கள் தானே?
ரகு " நன்றாக இருக்கிறேன். ஆனால் உன் பிரிவு இன்னமும் என்னை வாட்டுகிறது. நீ இரண்டு வருடங்களாக என்னுடன் பேசுவதும் இல்லை, படுவதும் இல்லை. முற்றிலுமாக என்னை ஒதுக்கி தள்ளிவிட்டாய்"
ராஜி " அப்படி இல்லை ரகு. என் சின்ன மகளின் கல்யாணத்திற்காக நான் மிகவும் மோசமான நிலைகளை, குறிப்பாக பொருளாதார ரீதியாக, சந்தித்து பின்னர் ஒரு வழியாக போன வருடம் அவளுக்கு கல்யாணம் முடித்துவிட்டேன். இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்."
ரகு " எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. போனால் போகிறது. ஏன் என்னுடன் பாடுவதில்லை பேசுவதில்லை?
ராஜி " அன்று திருத்தணியிலிருந்து வீடு திரும்பியதிலிருந்து என் மனம் மிகவும் வேதனைக்கு ஆளாகியது ஒருவித குற்ற உணர்வு என்னை சூழ்ந்து கொண்டு என்னை தின்ன ஆரம்பித்தது. அப்போது தான் நான் வணங்கும் ஒரு குருவிடம் சென்று நடந்தவற்றை மனம் திறந்து கூறினேன். அவர் கூறிய உபதேசம் " ராஜி
நீ மிகவும் வெகுளி. உலக விஷயங்களை அதிகம் அறியாதவள். நீ இருக்கும் சூழ்நிலையில் உனக்கு நடந்ததில் எந்த தவறும் இல்லை. நீ ஒன்றை மனப்பூர்வமாக செய்து விட்டு பின் குற்ற உணர்வோடு பார்ப்பது உன் பலத்தை விட உன் பலவீனத்தை தான் காட்டுகிறது. இப்போது கூட நீ விரும்பினால் ரகுவுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் ரகு மணமானவன். அவன் இதை எந்த வகையில் எடுத்துக்கொள்கிறான் என்பது உனக்கு தெரியாது." அதற்கு நான் சொன்னேன் " ரகு என்னை இப்போதும் கூட நிச்சயமாக விரும்புகிறார் என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். ஆனால் எனக்குதான் நான் அவரது குடும்ப அமைதியை கெடுக்கிறேனோ என்ற எண்ணம் நான்கு வேரூன்றி விட்டது. மேலும் இப்போது நான் என் சின்ன மகளுக்கு தீவிரமாக வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் ஒத்தயில் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். எனவே நான் ராகுவிடமிருந்து தூர விலகி கொள்கிறேன்" . இதை கேட்டுவிட்டு என் குரு " அப்படியே செய் ராஜி. ஆனால் இதன் பிறகு எந்த ஒரு மன குழப்பமும் உனக்கு வேண்டாம்."

ரகு " நீ கூறியதை கேட்ட பின் என் மனம் குமுறுகிறது. நமக்கு ஏன் இப்படி நடந்தது என்று. இனியும் நான் உன்னிடம் பழைய ராகுவாக இருக்க மாட்டேன். நான் இப்போது விரும்புவது ஒன்றே , நீ விரும்பினால் என்னுடன் மீண்டும் இணைந்து பாடல்களை பாடவேண்டும். நாம் ஒருவரை ஒருவர் புரிந்த நல்ல நண்பர்களாகவே இருப்போம் .நான் இனியும் உன்னை வேறு எந்தவித கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டேன்."
ராஜி " மிக்க நன்றி ரகு. இன்னும் ஒரு வருடத்தில் நானும் பதவி ஓய்வு பெற்றுவிடுவேன். அதன் பின்னர் நிச்சயம் உங்களுடன் இணைத்து பாடல்கள் பாடுவேன்."
********
உறவுகள் என்பது விண்ணில் இரவில் தெரியும் கணக்கிலடங்கா நட்சத்திரங்களை போல. யாருக்கு எவரிடம் எப்போது எந்த இடத்தில உறவு வரும் அந்த உறவு எப்போது எங்கே பிரியும் என்பது தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம் காதலுக்கு கண்ணில்லை, மொழி இல்லை, இனம் இல்லை, அதற்கு ஒரு வயதும் இல்லை வரையும் இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தான் பழகும் இன்னொரு மனிதரிடம் மிகவும் புரிந்து கொண்டு ஒருவரின் மேல் இன்னொருவர் நம்பிக்கை வைத்து பழக வேண்டும். உறவுகளின் நோக்கங்களை முன்னதாகவே சிந்தித்து மற்றவரிடம் பகிர்ந்து கொண்டு அதனால் வருகின்ற விளைவுகளை தாங்கும் தைரியம் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே உறவை தொடர வேண்டும் என்பது இந்த கதை ஆசிரியரின் அன்பு ஆலோசனை.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Nov-21, 10:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 193

மேலே