ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை

ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை
உறவுகள் இப்பொழுதெல்லாம் என்னை பார்க்கும் போது என்னப்பா சித்தப்பனை போய் பார்த்தியா? என்ற கேள்வியைத்தான் கேட்கிறார்கள். எனக்கு அந்த நேரத்தில் வரும் கோபத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்து விடுகிறேன். இதே உறவுகள் அன்று என்ன சொன்னது? இருந்தாலும் உன் சித்தப்பன் இப்படி பண்ணியிருக்க கூடாது? என்று சொல்லி சொல்லி என் கோபத்தை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் இனிமேல் அவர் முகத்தை பார்க்கவே கூடாது என்ற வைராக்கியத்தையும் அல்லவா ஏற்படுத்தினார்கள். அன்று அப்படி எல்லாம் பேசிவிட்டு இன்று ஒன்றும் தெரியாதவர்கள் போல் என்ன இருந்தாலும் உங்கப்பா கூட பொறந்த பொறப்பு, அவரும் உன்னை பாக்கறதுக்கு ஆசைப்படலாம். ஒரு முறை போய் பார்த்துட்டு வந்துடப்பா. ஊர்லே இப்ப அப்பவோன்னு கிடக்குறாரம் சொல்லிவிட்டு கிள்ம்பி விடுகிறார்கள். இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உறவுக்கு வந்தோமா, விருந்து சாப்பிட்டோமா, கிளம்பினோமா என்றில்லாமல் போகும்போது ஒரு வெடியை கொளுத்திவிட்டு போய் விடுவது.

உடனே மனைவி ஆரம்பித்துக்கொள்வாள். ஏங்க போய்தான் பாத்துட்டு வருவமே, வயசானவரு, உங்களை பாக்கணும்னு ஆசைப்படறாரு. ஏதோ அந்த காலத்துல அவருக்கு அப்படி ஒரு எண்ணம். தப்பா நடந்துகிட்டாரு. உங்கப்பாவ கஷ்டப்படுத்திட்டாரு. இப்ப அதை நினைச்சு திருந்தியிருக்கலாம்ல, அவளின் பேச்சை காது கொடுத்து கேட்டுக்கொண்டே கண்களை மூடி உட்கார்ந்தேன். அன்று நடந்தவைகள் மனதுக்குள் இன்றும் பசுமையாக ஓடின.
அப்பாவின் அப்பாவுக்கு விவசாயம்தான் வாழ்க்கை. அன்றைய காலத்தில் எல்லாம் வானம் பார்த்த பூமிதான். இன்று போல் “போர்வெல்” போட்டு தண்ணீர் எடுக்கும் வசதிகள் எல்லாம் வரவில்லை. பருவத்தில் மழை பெய்தால்தான் விதைப்பிலிருந்து அறுவடை வரை எல்லாம் ஒழுங்காக நடக்கும். அப்பா எப்படியோ பள்ளி இறுதி வரை வந்து விட்டார். வீட்டின் வறுமை அவரை சென்னைக்கு விரட்டியது.
எப்படியோ ஒரு வேலையை பிடித்துக்கொண்டு முடிந்தவரை மிச்சம் பிடித்து வீட்டுக்கு பணம் அனுப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் வீடு இவர் அனுப்பிய பணத்தில் சுவாசிக்க ஆரம்பித்தது. இவரும் மெல்ல முன்னேறி பின்னர் கல்யாணம் ஒன்று ஆகி நாங்கள் பிறந்து வளர ஆரம்பித்தோம்.
அப்பாவுக்கு தன்னுடைய ஊரை எங்களுக்கு காட்டுவதில் ஆனந்தம். ஒவ்வொரு வருட மே மாதம் எங்களை ஊருக்கு கொண்டு வந்து விட்டு விட்டு, இறுதி வாரத்தில் வந்து கூட்டி சென்று விடுவார். தோட்டத்தில் “போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்க ஆரம்பித்த பின் விவசாயம் ஓரளவு நல்ல விளைச்சலை கண்டது. அப்பா விவசாயத்தை பற்றி ஒன்றும் அவர் அப்பாவிடம் கேட்கமாட்டார். அப்பாவிற்கு பின்னால் தம்பி அதை பார்த்துக்கொண்டிருந்த போதும் என்ன நடக்கிறது என்று ஒரு வார்த்தை கூட தம்பியிடம் கேட்டதில்லை. பூரண நம்பிக்கை வைத்திருந்தார். தன் குடும்பத்தாரிடம்.
இதே உறவுகள் அவ்வப்பொழுது வந்து அப்பாவிடம் சொல்வதுண்டு. உனக்கும் பங்கு இருக்குதுடா, அதனால் அப்ப அப்ப என்ன நடக்குதுன்னு கேட்டு வச்சுக்க, என்று சொல்லும்போது அப்பா அது பொது சொத்து. அவன் நல்லபடியா பாத்துகிட்டு இருக்கான், இப்ப போயி அவனை கேள்வி கேட்டா மனசு வெறுத்து போயிடுவான்னு முடித்துக்கொள்வார்.
அப்பா இறந்த போதும், அம்மா இறந்த போதும் தன்னையே முன் நிறுத்தி எல்லா காரியங்களையும் செய்ததும் அப்பாவுக்கு உச்சி குளிர்ந்திருந்தது. தம்பியின் கல்யாணம் கூட இவரின் ஏற்பாடுதான் ஊரே தம்பி கல்யாணத்தை எப்படி நட்த்தியிருக்கான் பாரு? என்று அதிசயப்பட்டது.
இவர் ஓய்வு பெற ஒரு சில வருடங்கள் இருக்கும்போது வீடு ஒன்று விலைக்கு வந்தது. பணம் கொஞ்சம் பற்றா குறையால் ஊருக்கு வந்தவர் தன் பங்கு நிலத்தில் விளைந்ததில் ஏதாவது தம்பி வைத்துள்ளானா? என்று கேட்கும் போதுதான் தெரிந்தது. இவருக்கு பங்கே இல்லை என்று.. தம்பி எல்லா சொத்துக்களையும் அப்பாவிடமிருந்து எழுதி வாங்கியிருந்ததையும், அவருக்கு என்று ஒன்றுமில்லாமல் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியாகி விட்டார். தம்பி உனக்கு ஏதாவது கொடுக்கிறேன் என்று சொன்னதை அவன் முகத்திலே விட்டெறிந்து வீட்டுக்கு வந்தவர்தான்
. உறவுகள் கோர்ட்டுக்கு போக சொல்லி வற்புறுத்தின. மறுத்து விட்டார். அந்த அதிர்ச்சியிலேயே கொஞ்ச நாட்களில் இறந்து விட்டார். அதன் பின் நானும் ஒரு வழியாக வேலையில் சேர்ந்து எனக்கும் குடும்பமாகி அம்மாவும் என்னை விட்டு காலமாகி விட்டாள்.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அந்த குடும்பத்துடன் உறவே இல்லாமல் வைராக்கியமாய் இருந்திருக்கிறேன். சித்தப்பனுக்கும் வயதாகி இப்பவோ அப்பவோ இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும். நான் அதை அலட்சியம் செய்து கொண்டிருந்தேன். சில நாட்களாக மனைவி வழி உறவுகள் ஊரிலிருந்து வரும்போது சும்மா வருவதில்லை. சித்தப்பா குடும்பத்து செய்திகள் நான்கைந்து கொண்டு வந்து என் மனைவியின் காதில் ஓதி விட்டு செல்வார்கள்.
என்னுடைய குழந்தைகளும் பெரியவர்களாகி விட்டனர். நானே இன்னும் பத்து வருடங்களில் ஓய்வு பெறப்போகிறேன். என் மனைவிக்கு கொஞ்சம் சபலம், என் சித்தப்பா செய்த தவறை உணர்ந்து ஏதோ சொத்தில் கொஞ்சம் கொடுத்தாலும் கொடுக்கலாம், அவளுடைய உறவுகள் வேறு அதை கொஞ்சம் அழுத்தமாகவே அவள் காதில் போட்டு விட்டு போயிருந்தனர். நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். உங்க சித்தப்பாவை போய் பார்த்துட்டு வந்துடுவோம்.
இவளின் நச்சரிப்பை தாங்க முடியாமல் ஒரு நாள் ஊருக்கு கிளம்பினேன். இருபது வருடங்கள் கழித்து என் ஊரை மிதிப்பதில் எனக்கு ஒரே ஆன்ந்தம் என்றாலும் சித்தப்பா வீட்டுக்கு போவதில் அவ்வளவு விருப்பமில்லை. என்றாலும் மனைவியின் நச்சரிப்புக்காக சித்தப்பா வீட்டுக்கு தப்பு தப்பு எங்கள் அப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தேன்.
ஒரே மரியாதைதான், சித்தப்பாவின் வாரிசுகள் எங்களை சூழ்ந்து கொண்டு நலம் விசாரிப்புகள், சித்தப்பா உங்களை பக்கணும் பாக்கணும்னு துடிச்சுகிட்டிருக்காரு, என்று வருந்தி வருந்தி உள்ளே அழைத்தனர். உள்ளே என் சித்தப்பா உடல் மெலிந்து அந்த நார் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தவுடன் என் வைராக்கியமெல்லாம் காணாமல் போய் விட்டது. சித்தப்பா என்று அவர் கையை பிடித்துக்கொண்டேன். அவரும் மெல்ல என் கையை பிடித்துகொண்டவர், சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நல்லா இருக்கேன் சித்தப்பா என்றேன். உன்னை பாக்கணும் பாக்கணும்னு துடிச்சுகிட்டிருந்தேன் என்று சொல்ல என் சித்தப்பா என்னை பார்க்க எவ்வளவு தூரம் காத்திருந்து இருக்கிறார் என்று என் மனம் கரைந்து விட்டது. மன்னிச்சுங்குங்க சித்தப்பா என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்த்து.
மெல்ல தன் வாரிசுகளை பார்த்து கை அசைக்க அவர்களும் ஓடிச்சென்று ஒரு பேப்பர் கட்டை கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தனர். எனக்கு அது நில பத்திரம் போல தெரிந்தது. சித்தப்பா தன் தப்பை உணர்ந்து விட்டார் போலிருக்கிறது, அது தான் பத்திரத்தை திருப்பி கொடுக்கிறார் என நினைத்து இதுக்கென்ன சித்தப்பா இப்ப அவசரம் என்று சம்பிரதாயமாக ஒரு வார்த்தை சொல்ல, இனிமேல் நான் இருப்பேனோ இல்லையோ என்று சொன்னவுடன்
நான் மனம் பதை பதைத்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க சித்தப்பா சொல்லிவிட்டு கொண்டு வந்த பத்திரத்தை பிரித்து பார்த்தேன். ‘இப்பொழுது இவர்கள் இருக்கும் வீட்டையும்’ சித்தப்பாவின் பெரிய மகனுக்கு இவர் எழுதி கொடுப்பதாகவும் இதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று என்னையும் ஒரு சாட்சியாக கையெழுத்து போடுவதற்கு இடம் விட்டிருந்தது.
இப்பொழுது புரிந்தது சித்தப்பா ஏன் என்னை பார்க்க துடித்திருக்கிறார் என்று. கடைசியாக பொது சொத்தாக இருந்த இந்த வீட்டையும் தன் மகனுக்கு மாற்றவே தன்னை பார்க்க துடித்திருக்கிறார்.
பத்திரத்தை காண்பித்து மனைவியின் முகத்தை பார்த்தேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Nov-21, 3:00 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 172

மேலே