நவராத்திரி தொண்டு புரிந்த தொண்டை

" நாராயணன் எங்கே இருக்கிறான்? எனக்கு இப்போதே காண்பி பிரகலாதா? இந்த தூணில் இருக்கிறானா இல்லை இந்த துரும்பில் இருக்கிறானா? இப்போது இதை சொல்லாவிட்டால், என் மகன் என்றும் பார்க்காமல், நானே என் கையால் உன்னை கொன்று விடுவேன். ம்ம் சொல்." என்றான் அசுர அரசன் ஹிரண்யகசுபு இறுமாப்புடன் .
"தந்தையே, இங்கே இருக்கும் இந்த தூணிலும் என் சுவாமி நாராயணன் இருக்கிறான். எங்கும் நிறைந்திருக்கிறான்." என்று கொஞ்சம் கூட பயம் சூது வாது இல்லாமல் கனிவுடன் பதில் அளித்தான் பிரகலாதன்.
நாராயணன் இந்த காட்சியை தொலை காட்சியில் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாராயணன் சுவாமி நாராயணன் அல்ல. நாராயணனன் மேல் பக்தி கொண்ட அவரது பக்தன் நாராயணனன். இவன் ஒரு சராசரி மனிதன். ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா பணி செய்து , பதவி ஓய்வு பெற்று, அவனது மகன் மகள் இருவரின் திருமணத்தையும் முடித்து விட்டு, மனைவி வேதவல்லி துணையில் அமைதியாக வாழ்ந்து வந்தான்.

அடடா, மேலே சொல்ல ஆரம்பித்த பிரகலாதன் கதையை அப்படியே விட்டு விட்டோமே! அடுத்து பிரகலாதன் கதையில் என்ன நடந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் மிக சுருக்கமாக இங்கே சொல்லி விடுகிறேன்.
அருகில் உள்ள தூணை ஹிரண்யகசுபு அவனுடைய சக்தி வாய்ந்த கதை ஆயுதத்தால் தாக்க அதிலிருந்து நரசிம்ம அவதாரம் வெளிவந்து அவனை மடியில் வைத்து கொன்றார். பிரகலாதனுக்கு வாழ்வில் முக்தியும் கிட்டியது. நாராயண நாராயண என்று மனமுருகி பக்தியுடன் சொல்லுபவர்க்கு ஒரு துன்பமும் வராது என்பது இந்த கதையின் நீதி.

நம் லோக்கல் நாராயணன் கூட நாராயண பகவான் மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் உள்ளவன். அவன் ஓரளவுக்கு பாடவும் செய்வான். இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கடந்த 25 ஆண்டுகளாக அவனை ஒவ்வாமை( allergy) வியாதி அடிக்கடி தாக்கி வந்தது. இதற்காக அவன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹோமியோபதி மருந்து எடுத்து வந்தான். அவன் செய்து வந்த நித்திய பிராணாயாமம் மற்றும் தினமும் செய்து வந்த 40 நிமிட வேகநடையாலும் அவனுக்கு இந்த ஒவ்வாமை வியாதியிலிருந்து நிறைய நிவாரணம் இருந்தது. இருப்பினும் அவன் வசித்த ஊரில் மூன்று மாதங்கள் பனி இருப்பதாலும் மற்றும் தட்ப வெப்ப நிலையில் அதிகம் மாற்றம் ஏற்படுவதாலும் அவனை ஒவ்வாமை வியாதி வெவ்வேறு விதங்களில் தாக்கி வந்தது. அவன் படும் உடல் சில உபாதைகள் இவை : அஜீரணம், பித்தம், மூச்சு திணறல், தும்மல், உடல் அரிப்பு, முகத்தில் வலி, குறிப்பாக மூக்குக்குள்ளும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் கோர்த்துக்கொண்டு அவதி படுவது, உடலில் திடீரென குளிர் திடீரென வெப்பம், தொண்டையில் சளி, வலி இது போல பல பிரச்சினைகள் அவனுக்கு இருந்து வந்தது. இவை அனைத்தும் எதோ ஒரு வகையில் அவனின் அன்றாட வாழ்க்கையில் அவனுக்கு சுகமின்மையையும் உடல் பலவீனத்தையும் கொடுத்த கொண்டிருந்தது. இவ்வளவையும் கடந்து நாராயணன் கடவுள் மீது மிகுந்து பக்தி கொண்டு அவருக்கு பூஜை செய்து அவர் புகழ் பாடும் பாடல்களை பாடி வந்தான்.
இடையில் தொண்டையில் அடிக்கடி வலி வந்து அவனை படுத்தியதால், ஒவ்வாமைக்காக ஆயுர்வேத மருந்து எடுத்து வந்தான். இடையில் ஓரிரு முறை அல்லோபதி மருத்துவரிடமும் காண்பித்தான். தொண்டையில் கொஞ்சம் நோய்த்தொற்று (infection) என்று சொல்லி மருந்து கொடுத்தனர். ஒன்றும் உபயோகம் இல்லை. தொண்டை வலி ஒரு ஆண்டுக்கு மேல் விட்டு விட்டு இருந்து வந்ததால் மீண்டும் ஆயுர்வேத மருந்து எடுக்க ஆரம்பித்தான். தொண்டை வலி இருப்பினும் பாடல்கள் பாடி வந்தான். ஒரு முறை அவனுடைய வெளியூர் குடும்ப நண்பர் தம் இல்லத்தில் நவராத்திரி கொலு வைத்திருப்பதாகவும், எனவே கொலுவில் கேட்டு அவர்கள் மகிழ, நாராயணன் இரண்டு மூன்று பாடல்களை பாடி வாட்சப்பில் அனுப்புமாறு கேட்டு கொண்டார். பிறர் எவரேனும் அவன் பாடலை கேட்கவேண்டும் என்று விரும்பினால் நாராயணனுக்கு கரும்பு கொடுத்தது போல ஒரு இனிப்பு. ஆனால் அந்த நேரத்தில் அவனுக்கு தொண்டை வலி இருந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக அவன் அதிகம் பேசினாலும் பாடினாலும் அவன் தொண்டை வலி அதிகரித்தது. இதனால் உடம்பில் ஒருவித காய்ச்சல் போல் விட்டு விட்டு இருந்தது. ஆயுர்வேத மருத்துவர் மருந்து கொடுத்து அவனிடம் தொண்டையை பாதிக்கும் அளவுக்கு பாடவேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்.

இருப்பினும் அவனது குடும்ப நண்பரின் ஆசையை பூர்த்தி செய்ய நாராயணன் முடிவு செய்தான். மூன்று பக்தி பாடல்களை பாட தீர்மானித்தான். அவனுக்கு சினிமா பாடல்களை பாடவும் நல்ல விருப்பம். smule என்ற ஒரு ஆன்லைன் ஆப்பில்அவன் கரோக்கே பதிவு பாடல்களை வாரத்தில் ஐந்து நாட்களாவது பாடி வந்தான். இசையமைப்பாளர் இளையராஜாவின் குறிப்பிட்ட, அவனுக்கு பிடித்த சில பாடல்களை கடந்த மூன்று வருடங்களாக அவன் ஸ்மூலில் பாடி வருகிறான். ஆனால் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் மறைந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் M .S . விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் தான். தவிர நாராயணன் மக்களுக்கிடையில் பழைய திரைப்படப்பாடல்கள் நலிந்து வருவதை நன்கு அறிவான். எனவே தான் அவன் ஸ்மூலில் நுழைந்து அதில் அவனுக்கு பிடித்த பல பழைய திரைப்படப்பாடல்களை பாடி வருகிறான். புதிய பாடல்கள் ஒரு பாணி. இன்றைய இளைய தலைமுறையினர் இளையராஜா பாடல்களையே பழைய பாடல்களாக கருதுகிறார்கள். அப்படி இருக்கையில் அவருக்கு முன் இருந்த இசையமைப்பாளர்கள் மெட்டு கட்டி அமைத்த பல சிறந்த பாடல்கள் கதி என்னாவது என்று எண்ணி அதற்காகவே நாராயணன் பல பழைய திரைப்பட பாடல்களை பாடி வருகிறான். இதனால் இன்றைய தலை முறையினரும் இப்பாடல்களை கேட்டு மகிழ்ந்து வருங்காலத்திலும் இப்பாடல்கள் நிலைத்து நிற்கவேண்டும் என்பது நாராயணின் மானசீகமான விருப்பம்.

இப்போது நாம் மேலே விட்ட இடத்திலிருந்து தொடருவோம். நவராத்திரிக்கு பாட வேண்டும் என்பதால் நாராயணன் மூன்று பழைய திரைப்பட பாடல்களை தேர்வு செய்தான். முதலில் " மலர்களிலே பல நிறம் கண்டேன் , திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்" என்ற பாடலை ஸ்மூலில் பாடினான். கொஞ்சம் தொண்டை வலித்தாலும் நல்லவிதமாக பக்தி உணர்வோடு அந்த பாடலை பாடி, அதை அவன் குடும்ப நண்பருக்கு பகிர்ந்தான். அடுத்து " மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலை வாணி" என்று தனி பாடலையும் ஸ்மூலில் பாடி அனுப்பினான். அவனது குடும்ப நன்பரும் அவர் வீட்டில் உள்ளவர்களும் இந்த இரண்டு பாடல்களையும் கேட்டுவிட்டு நாராயணனை வெகுவாக பாராட்டினார்கள். இதை கண்டவுடன் நாராயணனின் உற்சாகம் கூடியது. இன்னும் இரண்டு பாடல்களை பாட தீர்மானித்தான். அவன் முதல் பாடலை பாடும்போது சில சிக்கல் இருந்ததால், மீண்டும் இரண்டாவது முறையாக பாடினான். ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பிரச்சினை வர, விடாகொண்டனாக அந்த உச்ச ஸ்தாயி பாடலை (திருமால் பெருமைக்கு நிகரேது என்ற, தசாவதாரங்களை சித்தரிக்கும் பாடல் தான்) ஒரிஜினல் பாடலின் சுருதியில் பாடினான். பாடும்போது தொண்டை கொஞ்சம் தடை செய்தும் ஒருவழியாக பாடலை நல்ல விதமாக பாடி முடித்தான். பாடியவுடன் அவன் தொண்டையில் வலி கூடியது. " நான் வழிபாடும் நாராயண பகவான் எனக்கு நிச்சயம் இந்த வலியிலிருந்து நிவாரணம் தருவார்" என்று நம்பிக்கையுடன் எண்ணியபடி இன்னொரு பக்தி பாடலையும் தொடர்ந்து பாடினான். "தெய்வம் இருப்பது எங்கே, அது இங்கே வேறெங்கே" என்ற திரைப்பட பாடல் தான். இதுவும் மிகவும் உச்ச ஸ்தாயி பாடல். கொஞ்சம் சிரமப்பட்டு ஸ்மூலில் இரண்டாவது முறை சரியாக நல்ல பக்தி இசை உணர்வுடன் பாடி முடித்தான். அந்த பாடலையும் அவன் குடும்ப நண்பருடன் வாட்சப்பில் பகிர்ந்து கொண்டான். அவர்கள் இப்படல்களை கேட்டு மகிழ்ந்து நாராயணனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதன் பிறகு அவன் தொண்டை வலி மிகவும் அதிகரித்தது. வேறொரு ENT மருத்துவரிடம் காண்பித்ததில் தொண்டையில் infection ஒன்றும் இல்லை வேறு எதோ காரணம் என்று சொல்லி மருந்து கொடுத்தார். தொண்டைக்கு இரண்டு வார ஓய்வும் கொடுக்கச்சொன்னார். இதன் பிறகு இரண்டு முறை அந்த மருத்துவரிடம் சென்று வந்து நிவாரணம் இல்லாததால் இன்னொரு பேர்போன ENT மருத்துவமனைக்கு சென்று 10000 ரூபாய் வரை செலவு தொண்டை மூக்கு சம்பந்தமான இரண்டு பெரிய பரிசோதனைகள் செய்து கொண்டான். இதன் முடிவுகளை பார்த்து விட்டு அந்த பிரபலமான ENT மருத்துவர் " உங்களுக்கு மூக்கில் நிறைய சளி கோர்த்து இருக்கிறது. தவிர மூக்கில் இரண்டு பக்கமும் உள்ள எலும்புகள் கொஞ்சம் வளைந்து வளர்ந்து விட்டதால், அதனால் மூக்கு வழியாக தொண்டைக்கு செல்லும் காற்று பாதை குறுகி விட்டதன் விளைவால் தொண்டையில் அடிக்கடி வலி. இது பயப்படக்கூடிய பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் முகத்தில் அதிகம் தங்கியுள்ள நீரை வெளியே எடுக்கவேண்டும். ஒரு ஆபரேஷன் செய்து வளைந்த மூக்கு எலும்புகளையும் சரி செய்து விட்டால் உங்களுக்கு தொண்டையில் வலி இருக்காது" என்று கூறினார். நாராயணன் பாடுபவர் என்று தெரிந்ததும் " நீங்கள் மேடை கச்சேரி செய்பவரா" என்று கூட கேட்டார். நாராயணன் " இல்லை டாக்டர். பாடுவது என்னுடைய இனிய பொழுது போக்கு. தினசரி ஒரு மணிக்கு குறையாமல் பாடி வருகிறேன்" என்று கூறியவுடன் அவர் " இப்போது உள்ள உங்கள் தொண்டையின் ரணம் குணமாக வேண்டும் என்றால் நீங்கள் பாடுவதை மட்டும் அல்ல அதிகம் பேசுவதையும் ஒருமாதம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பல மருந்துகளை எடுத்துக்கொள்ள எழுதி கொடுத்தார்.

அதன் பிறகு அந்த மருத்துவரின் உதவி மருத்துவர் ஒருவர் நாராயணனுக்கு மூக்கிலும் தொண்டையிலும் அவனுக்கு உள்ள குறைகளை மீண்டும் விரிவாக விளக்கினார். அப்போது நாராயணன் கேட்டான் " டாக்டர், என் மூக்கில் உள்ள இரண்டு நரம்புகள் கொஞ்சம் வளைந்து விட்டது என்று சொன்னீர்கள். இது எப்போது ஏற்பட்டிருக்கும்? . உதவி மருத்துவர் சொன்னார் " அது பிறப்பிலிருந்து இருக்கலாம் அல்லது பிறகு ஏற்பட்டிருக்கலாம். இவ்வளவு காலம் அது உங்களை அதிகம் பாதிக்கவில்லை. உங்களுக்கு மன அழுத்தம் அதிகம் இருப்பின் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு". நாராயணன் கேட்டான் " ஒரு வேளை ஆபரேஷன் செய்தால் எவ்வளவு செலவாகும்"?. " நாம் தேர்ந்தெடுக்கும் ஆபரேஷன் முறையை முன்னிட்டு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் வரை ஆகலாம்" என்று உதவி மருத்துவர் சொன்னார். சொல்லிவிட்டு, மூக்கு தொண்டை ஆபரேஷன் எப்போது செய்யலாம் என்று கேட்டபோது நாராயணன் " நான் வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசிவிட்டு தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு 20 நாட்களுக்கான மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.

உதவி மருத்துவர் நாரணனுக்கு மீண்டும் விளக்குவதற்கு முன்பு, பெரிய மருத்துவர் ஸ்கேன் செய்த பரிசோதனை காகிதங்களை வைத்து கொண்டு நாராயணனுக்கு ஒரு மூக்கு படம் ஒன்று வரைந்து , நாராயணன் மூக்கில் உள்ள குறைபாடுகளை விளக்கினார். ஆனால் அவர் சிபாரிசு செய்த காகிதத்தில் மருந்துகள் மற்றும் தொண்டைக்கு ஓய்வு வேண்டும் என்ற விஷயங்களை குறிப்பிட்டாரே ஒழிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதை எழுத்தில் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தை நாராயணன் வீட்டிற்கு வந்த பிறகு தான் கவனித்தான். அப்படி என்றால் ஆபரேஷன் செய்துதான் ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றுதான் தெரியவருகிறது தவிர உதவி மருத்துவரிடம் கேட்டதற்கு " நாங்கள் சிபாரிசு செய்யும் ஆபரேஷன் உடனடி அவசர நடவடிக்கை போன்றது இல்லை. ஆபரேஷன் செய்து கொள்வது உங்களது தேர்வு, அவ்வாறு செய்யமல் இருந்தால் தொண்டையில் இதுபோன்ற வலி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி இருந்து கொண்டிருக்கும், அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி இருக்கும் என்றும் சொன்னது நினைவுக்கு வந்தது. " இந்த நிலையில் நான் ஏன் அவசரப்பட்டு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்கள் பொறுத்து பார்ப்போமே. வலி தாங்க முடியவில்லை என்பது போல் தெரிந்தால் ஒழிய நான் ஏன் இயற்கையாக உள்ள என் மூக்கு நரம்புகளை உடைத்து ஆபரேஷன் செய்ய வேண்டும்" என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்ததால் மருந்துகளை மட்டும் அவன் எடுத்து வந்தான்.

அவன் ஊரில் மூன்று மாதங்கள் காலை மாலைகளில் அதிகம் குளிர் இருக்கும் . அதே நேரத்தில் எங்கேயோ உருவான குறைந்தழுத்த காற்று மண்டலம் விளைவாக தினசரி தட்பவெப்ப நிலையில் திடீரென பெருத்த மாற்றங்கள் ஏற்பட அதன் விளைவாக நாராயணனுக்கு உடல் மிகவும் பாதிப்படைந்தது. குறிப்பாக முகம் வாய் தொண்டையில் நல்ல வலியும், காய்ச்சல் போன்ற உடம்பும், உடல் முழுவதும் வலியும் அவனை மிகவும் தாக்கின. இந்த நிலையில் நாராயணன் தினமும் அவன் நவராத்திரி நேரத்தில் பாடிய அந்த மூன்று உச்சஸ்தாயி பக்தி பாடல்களை தினமும் கேட்டு வருகிறான். "நான் நம்பிக்கையுடன் பக்தியுடன் தொழும் நாராயண பகவான் என்னை ஏன் இப்படி சோதிக்கிறார். அவர் மீது உள்ள பக்தியில் தானே தொண்டை வலியையும் பொருட்படுத்தாமல் அந்த பாடல்களை பாடினேன். விளையாட்டாக இரண்டு வருடங்கள் ஆகிறது இன்னும் என்னுடைய தொண்டை வலி பிரச்சினை தீரவில்லை " என்று அவ்வப்போது அங்கலாய்த்து வண்ணம் இருக்கிறான்.

இதே நாராயணன் இன்னொரு நேரத்தில் " இந்த உடம்புக்கும் உள்ளத்திற்கும் என்ன என்ன அனுபவிக்கவேண்டும் என்று உள்ளதோ அவற்றை அனுபவித்த்து தானே ஆக வேண்டும். ஆனான பட்ட ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களுக்கெல்லாமே கொடிய புற்று நோய் வந்து தானே தாக்கி அவர்களின் உயிரை பறித்தது. அப்படி இருக்கையில் நான் கடவுள் நாராயணனின் பக்தன், அவரை தினம் வணங்குகிறேன் அவர் பேரில் துதிக்கிறேன், பாடல்கள் பாடுகிறேன் என்ற காரணத்தால் எனக்கு மட்டும் VIP மரியாதையை தந்து " இந்தாடா பக்தன் நாராயணனே, உன் தொண்டை பிரச்சினை இப்போதே தீர்ந்து விடும் , நீ இனி வழக்கம் போல் என்னை பக்தி செய்தும் ஸ்மூலில் மீண்டும் பாடவும் செய்யலாம்" என்று சொல்லப்போகிறாரா. நிச்சயம் இல்லை. நமக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் முடிவு செய்யலாம் ஆனால் காலம் எப்போது அதற்கு விருப்பமான முடிவுகளை நம் மீது திணிக்கும் என்பது எவருக்கும் தெரியாது.

நாராயணன் இந்நாட்களில் இதை தான் நினைக்கிறன்" நான் தினம் அரை மணிக்கு குறையாமல் மௌனத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியாத ஆத்மாவான நான் இந்த உடல் உள்ளம் தழுவிய உயிர் பொருளை ஒரு சாட்சியாக இருந்து கவனிக்கிறேன். ஏனெனில் இந்த உடல் பட்டு விடும். மனம் கெட்டு விடும். புத்தி விட்டு விடும். ஆனால் ஆத்மாவான நான் இந்த உடல் மாண்டாலும், மீண்டும் இன்னொரு உடலில் பிரவேசிப்பேன். எனக்கு முக்தி கிட்டும் வரை இந்த பிறப்பு இறப்பு சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். அதன் பின் நிச்சயமாக ஆத்மாவான நான் எங்கும் வியாபித்திருக்கும், பிறப்பு இறப்பு, ஆரம்பம் முடிவு இல்லாத, கால தேச வர்த்தமானங்களை கடந்து எப்போதும் அன்பு என்ற கடலாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிவிடுவேன்."

மேலே நாராயணன் கொண்டுள்ள எண்ணம் உங்களில் சிலரில் ஏற்றுக்கொள்ள படலாம், பலரால் ஒப்புக்கொள்ளமுடியாமல் இருக்கலாம். இருப்பினும் இக்கதாசிரியனாகிய நான் நாராயணன் முடிவில் சொன்னவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் இப்படிப்பட்ட ஆன்மீக எண்ணம் இருந்தால்தான் மனதில் உடலில் வரும் சங்கடங்களை தைரியத்துடன் துணிவுடன் எதிர்கொண்டு தாங்க முடிகிறது. நாராயணன் பக்தியுடன் ஆன்மீக மார்க்கத்தையும் கொண்டுள்ளான். எனவே நிச்சயம் அவனுக்கு என்ன நேர்ந்திடிலும் அதை அவனுக்கு உகந்ததாக ஏற்று கொள்வான்.

முடிவில் நாராயணின் தொண்டைக்கு என்ன ஆயிற்று? வலி குறைந்ததா? அவன் மீண்டும் பாடத்துவங்கி விட்டானா? இப்படி பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் இருக்கிறது. நாராயணனுக்கு எல்லாம் நல்லதாக நடக்க நான் பிரார்த்தனை செய்கிறேன். விருப்பம் இருந்தால் நீங்களும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யலாம், நாராயணனுக்கு மட்டும் இல்லை உலகில் உள்ள அனைவரின் உடல் மன நலத்திற்கும் மற்றும் எல்லா உயிர்களின் அன்பான அமைதியான ஆனந்த வாழ்விற்கும்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-Nov-21, 11:44 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 82

மேலே