கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும் – அறநெறிச்சாரம் 31

இன்னிசை வெண்பா

வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. 31

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

நாள்தோறும் கற்கள் நீரினுள்ளேயே கிடந்தாலும் கல்லுக்கு, மென்மையடைதல் மிகவும் அரிதான இயலாத செயலாகும்.

அதுபோல நல்ல குடும்பத்தில் பிறக்காத கயவர்களின் மனமானது, நாள் தோறும் நல்ல அறநூல்களைக் கேட்டாலும் கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவும், கடினமானதுமாகவே இருக்கும் எனப்படுகிறது.

கருத்து:

எனவே, நல்ல அறநூல்களைக் கேட்டு, நல்லதையே நினைத்து நல்லவற்றையே செய்யும் மனப்பக்குவம் அனைவர்க்கும் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-21, 8:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே