இரவின் பார்வையில்
பார்க்கும் போதெல்லாம் எந்தன்
குட்டி இதயம் படபடத்ததில்லை
காணும் போதெல்லாம் காதல் வழிய கண்களால் பருகியதில்லை
காது மடல்களின் நுனியை
மீசைமுடிகள் உரசியதில்லை
தொலைவான தருணங்களில் நிமிடத்திற்கொருமுறை
அழைத்து விசாரித்ததில்லை
சில நொடி உரையாடல்கள் போதுமென்றாலும்
எப்போதும் மணித்தியாலங்களாய் நீண்டதில்லை
ஊரறிய மஞ்சள்கயிறுகட்டி
உரிமையை உறுதி செய்த பின்னும்,
நாடி பிடித்து பட்டு தங்கமென செல்லம் கொஞ்சியதில்லை
ஆசையாய் ஆடைகள் தேர்ந்தெடுத்து அளித்ததில்லை
அரக்கபரக்க கிளம்பிடும் காலைப்பொழுதுகளில்
காலி வயிற்றை நிரப்ப
ஊட்டி விட்டதில்லை
வெளியூர் பயணங்களில் ஏக்கங்கொண்டு
புகைப்படத்தில் புதைந்து போனதில்லை
உயிர் அணுக்கள் ஒன்றாகி
புது உயிர் ஜனித்த பிறகும்
ஒரு தடவை கூட காதலென்ற சொல்லை யோசிக்க துணிந்ததில்லை
கேட்பவர் இடத்தில் பெயரினை இணைத்தே அறிமுகப்படுத்தியதில்லை
பிறந்தநாள், மணநாள் என்று
வாழ்த்துகளோ தீடீர் பரிசுகளோ
பகிர்ந்து ஆனந்த அதிர்ச்சி அளித்ததில்லை
அத்தனை முறை நாம் முறைத்துக் கொண்டாலும்
முறித்துக் கொள்ளும் எண்ணம் வந்ததில்லை
ஆயிரமாயிரம் கவிதைகளில் காதலை எழுத முடிந்த என்னால்...
இதுவரை உனக்காக ஒன்றுகூட எழுதியதில்லை
அடடா நீ எல்லாம் என்று எரிந்து விழுந்தாலும் எதிராளியிடம் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
இத்தியாதி சங்கதிகள் பலவற்றை!!!
பகலில் புதைந்து இரவில் கன்னம் வைத்து
உறக்கத்தை களவாட
உலாவரும் உன்மத்தமான
இந்த கவிதைகளில் இப்போதும்
மறைத்தே வைத்திருக்கிறேன்
ஊசிப்போன பழைய உணவாய்
பச்சை நரம்புகளில் இச்சை சிலிர்க்க
உன்னிடம் மட்டுமே உணர்ந்திருந்த இதத்தை!.
சந்தைப்படுத்திட மட்டும் விருப்பமின்றி இன்னும் சலம்புகிறது
சதியிவளின் மனம்!
இருந்தும் இதோ என் பகல்கள் பழையதாகிப்போய்
இரவுகள் முடிந்தபின்னும்
சமர் செய்யும் உன் யட்சனியாய்
காலம் முழுவதும்
நான் எழுதுவதெல்லாம் உனக்கானதல்ல எனக்கானது என் யட்சனே!!!
- மதிஒளி சரவணன்