நிலம் விற்பனைக்கு அல்ல
நிலம் விற்பனைக்கு அல்ல
கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி. தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார். அதே போல்தான் அவர் மனைவியும். இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது கணபதியப்பன் அமைதியிழந்து தவித்துக் கொண்டிருக்கிரார். அவரது பிள்ளைகளால் கோடி கணக்கில் பனம் அவரது நிலத்துக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டிருந்தது. அதனால் இதுவரை விவசாய சிந்தனைகளுடனே வாழ்ந்து வந்தவர் மனம் கிடைக்கப்போகும் பெரும் பணத்துக்கு அடிபணிய வற்புறுத்திக்கொண்டிருந்தது அவ்வப் பொழுது மாறுபட்ட மனம் மட்டும் பரம்பரை சொத்தை கேவலம் வாழப் போகும் கொஞ்ச நாட்களுக்காக இழக்க விரும்புகிறாயா ? என்று இடித்துரைத்தது.
கணப்தியப்பன் பெரும் நிலம் கொண்ட விவசாயி என்று சொல்ல முடியாவிட்டாலும் கோயமுத்தூரில் பேரூரை அடுத்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி ஐந்து ஏக்கரா தோட்டம் வைத்திருக்கிறார். அந்த தோட்ட்த்தில் விவசாய்ம் செய்து தான் மூன்று பிள்ளைகளை ஓரளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். குழந்தைகள் புத்திசாலிகளாக இருந்ததால் நன்கு படித்து அவரவர்கள் நல்ல வேலை தேடி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். கடைசி பையன் மட்டும் கடைசி வருடம் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு வேலையும் தேடிக் கொடுத்து கலயாணம் செய்து வைத்தால் கடைசி பாரமும் குறைந்து விடும் என நினைத்து கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் அவரது மூத்த பிள்ளைகள் இருவரும் அப்பாவிடம் வந்து இனிமேல் விவசாயம் செய்து என்ன செய்யப்போகிறாய் ? அந்த நிலம் மெயின் ரோட்டை ஒட்டி வருவதால் ஏக்கரா கோடிக்கணக்கில் விலை போகும், பேசாமல் எல்லா நிலத்தையும் விற்று விட்டு கிடைக்கும் தொகையை நான்காக பிரித்து வாரிசுகள் மூன்று பேருக்கு மூன்று பாகமும் உங்களுக்கு ஒரு பாகத்தையும் பிரித்துக் கொள்ளலாம். நீங்கள் அந்த பணத்தை வைத்து ஊரில் ஒரு வீட்டை கட்டிக் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அவர்கள் அம்மாவிடமும் அதற்காக வற்புறுத்தியும் சென்றுள்ளார்கள்.
கணபதியப்பனுக்கும் வயதானதால் அவருக்கும் இதை பற்றி கொஞ்சம் சிந்தனை வந்து விட்டது. எதற்கும் கடைசி பையனிடமும் பேசி பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஒரு நாள் பக்கத்து தோட்டம் ராமசாமி வந்திருந்தார், அவருக்கு இவரது தோட்டத்தின் கிழக்கு பக்கமாக மூன்று ஏக்கரா நிலம் இருக்கிறது. கணபதி அண்ணே தோட்டம் விக்கிற மாதிரி கேள்விப்பட்டேன், அப்படி விக்கிறதா இருந்தா வெளி ஆளுக்கு கொடுத்துடாதீங்க, எனக்கே கொடுத்துடுங்க, கூட குறைச்சு நானே முடிச்சுக்கறேன். சொன்னவரை ஆழ்ந்து பார்த்தார் கணபதியப்பன். ராமசாமி அப்பப்ப உன் நிலத்தை பயிர் பண்னறதுக்கே அலுத்துக்குவே இப்ப என் நிலத்தையும் கேக்கறியே ? எல்லத்தையும் பயிர் பண்ன முடியுமா ? கேட்ட கணபதியப்பனிடம் எண்ணன்னே இப்படி கேக்கறீங்க ? விவசாயிக்கு நிலத்துல பாடுபடும் போதோ இல்லை அதுக்கான வெள்ளாமை கிடைக்காத போதோ புலம்பறதுதான், அதுக்காக நம்ம தொழிலை விட்டுட முடியுமா இவருக்கு மனதுக்குள் சுருக்கென்றது, சரி ராமசாமி நான் விக்கிறதா இருந்தா உன் கிட்டே சொல்றேன் விடை பெற்றார் ராமசாமி.
மறு நாள் நாகரிக உடையணிந்த ஒருவர் கணபதியப்பனை தேடி வந்திருந்தார். சார் நாங்க இடத்தை வாங்கி அதுல வீடுகள் கட்டி விக்கிறவங்க, நீங்க இடத்தை விக்கிறதா கேள்விப் பட்டோம். உங்க இடத்தை நாங்க வாங்கறதுக்கு ரெடியாக இருக்கோம். இடத்துக்கான தொகையும், அது போக கட்டுன வீட்டுல இரண்டு வீடுகளும் உங்களுக்கு கொடுப்போம். நீங்க என்ன சொல்றீங்க ? பதிலை எதிர்பார்த்து நின்றார். கணபதியப்பன் ஆடிப்போனார். இன்னும் விக்கலாமா வேண்டாமா என்று முடிவே செய்யவில்லை. அதற்குள் எத்தனை விசாரிப்புக்கள், ஐயா நான் இன்னும் விக்கிறதை பத்தி முடிவே பண்ணலீங்க. அப்படி ஏதாவது செய்யறதா இருந்தா உங்களை பாக்கறேன். விடை கொடுத்து அனுப்ப முயற்சி செய்தார். மறுபடியும் பேசிக் கொண்டிருந்த அந்த நபர் கடைசியாக ஒரு “கார்டை” கொடுத்து நீங்கள் எதுவானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு வழியாக நடையை கட்டினார்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் அவருக்கு ஏராளமான தொலை பெசி அழைப்புக்கள், விசாரிப்புக்கள், நேரில் பல பேர் வந்து சென்று விட்டார்கள். இவருக்கு பதில் சொல்லி சொல்லி அலுப்பே வந்து விட்டது. ஆரம்பத்தில் இவ்வளவு பணம் கிடைக்குமே என்று ஆசைப்பட்ட மனம் விட்டால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டது.
மனைவியின் சொந்தத்தில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. கண்டிப்பாக இருவரும் வரவேண்டும் திருமணம் கோயமுத்தூரில் காந்திபுரத்தில் உள்ள பெரிய திருமண மண்டபத்தில் நடை பெறும் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. பத்திரிக்கை கொடுத்தவர் மனைவியின் பெரியப்பா பேரனாக வேண்டும்,. அதனால் கண்டிப்பாக போக வேண்டும் என்று மூடிவு செய்தனர். அது போக அவர்களை போல பெரியப்பா மகனும் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்தான். கல்யாணமாகப் போகும் பையன் அப்பாவிடம் சொல்லி ஊரில் இருந்த நிலம் அனைத்தையும் விற்று நகரில் ஒரு பெரிய வீடு கட்டி குடி போய்விட்டார்கள். அதையும் பார்த்து வரலாமே என்ற எண்ணத்துடன் இருவரும் கிலம்பினர்.
கல்யாணம் அமர்க்களமாய் நடந்தது. பணம் தண்ணீராய் செலவழிக்கப்பட்டிருப்பது பார்க்கும் போதே தெரிந்த்து. இவர்கள் வழக்கம்போல் எளிமையாக அந்த திருமனத்தில் கலந்து கொண்டு மனைவியின் அண்ணனையும் அவர் மனைவியையும் பார்த்து விசாரித்தார்கள். எப்படி இருக்கிரது வாழ்க்கை ? உங்கள் வீட்டையும் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் தன் மகனிடம் சொல்ல பெரிய கார் ஒன்று அவர்கள் நால்வரையும் வீட்டுக்கு அழைத்து சென்றது. வீடா அது ? பார்த்தவுடன் வாயை பிளந்து விட்டனர் இருவரும். மாட மாளிகையாய் இருந்தது, கணபதியப்பன் மனைவியின் அண்ணன் கையை பிடித்துக்கொண்டு ரொம்ப சந்தோசமாய் இருக்குது. இந்த வீட்டுல நீங்க இருக்கறது, மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அந்த மகிழ்ச்சி அந்த தம்பதிகளிடம் தென்படவே இல்லை. சுரத்தே இல்லாமல் “அட போப்பா” இவ்வளவு பெரிய வீட்டுல எங்களுக்கு என்ன வேலை ? அதைய சொல்லு. வீடு கூட்டறதுல இருந்து எல்லா வேலையும் செய்யறதுக்கு ஆளு. உண்மையை சொல்லணுனா காலையில எந்திரிச்ச உடனே எங்களுக்கு இன்னைக்கு என்ன வேலை இருக்கும் ? அப்படீங்கரத்துதான் பேச்சா இருக்கும். இப்படி இருந்தா என்னைய மாதிரி பாடுபட்ட உடம்பு எப்படி இருக்கும் ? கொஞ்சம் யோசிச்சு பாரு, என் சமசாரம் காலையில நாலு மணிக்கு எந்திரிச்சி ஒரு காப்பிய போட்டு குடிச்சுட்டு மாடு கண்னை எல்லாம் பார்த்துட்டு அதுக்குள்ள நாமும் எந்திரிச்சி அந்த காப்பிய குடிச்சுட்டு அப்படியே தோட்டம் போயி தண்ணீர் பாய்ச்சுட்டு திரும்ப வர்றதுக்குள்ளே காலை சாப்பாடு ரெடியா இருக்கும். சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓஞ்சு உட்கார்ந்துட்டு மறுபடி தோட்டம் போய் களையெடுத்து அதுக்குள்ள இவ மதியம் சாப்பாடு எடுத்து வந்தாக்க நாங்க இரண்டு பேரும் அங்கேயே நிழல்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு மறுபடி வேலைய பார்த்தமா, சாயங்காலமானா நண்பர்களை பார்த்து திண்னையிலே பேசிகிட்டு ம்…அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா அப்படீன்னு ஏக்கமா இருக்கு. சொன்னவரை குறு குறுப்புடன் பார்த்தார் கணபதியப்பன்.
அவர்கள் வீடு திரும்பும்போது தெளிவான முடிவுடன் ஊருக்குள் வந்தனர். வீட்டில் கடைசிப் பையன் கொஞ்சம் நடுத்தர வயதுடைய ஒருவருடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் கணபதியப்பன் தம்பதிகள் மனதுக்குள் திடுக்கிட்டனர். ஒரு வேளை இவனும் நிலத்தை விற்க ஆளுடன் வந்திருக்கிறானோ ?
அப்பா இவர் என் நண்பரோட அப்பா, விவசாய ஆபிசுல மண் ஆராய்ச்சி செய்யற வேலை செய்யறவரு. நான் நம்ம தோட்ட்த்து மண்னை ஆராய்ச்சி செய்ய சொல்லி கேட்டிருந்தேன்.இப்ப நேரம் கிடைச்சு வந்திருக்காரு. மண் சாம்பிள் எடுத்து கொண்டு போறாரு. நான் படிச்சு முடிச்சுட்டு விவசாயம்தான் பாக்க போறேன், நம்ம மண்ணுல எது எது போட்டா நல்ல வளரும்னு இவர் ஆராய்ச்சி பண்ணி சொன்னதுக்கப்புறம் அந்த மாதிரி பண்ணையம் பண்ணப்போறேன். சொல்லிக்கொண்டே போன மகனை பெருமிதமாய் பார்த்த்னர் கணபதியப்பன் தம்பதிகள்.
அடுத்த தலைமுறை விவசாயத்திற்கு தயாரகிவிட்ட்தையும், மூத்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் தங்கள் வேலைகளை பார்க்க இருவரும் பிரிந்து சென்றனர்.