சென்னை மும்மூர்த்திகள் நிறைவு பகுதி

மும்பை சேர்ந்தவுடன் மஞ்சுவை விட்டு பிரியப்போகிறோம் என்பதை முரளிக்கு தாங்கமுடியவில்லை.
"என்ன ஒரு பண்பான கள்ளமில்லாத இனிய பெண்" என்று எண்ணி வியந்து போனான். ஸ்லீப்பர் பஸ் என்பதால் இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு சென்றனர். முரளிக்கு மஞ்சுவை மீண்டும் அனுபவிக்க இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மஞ்சுவின் வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரம் இட்டது " இனிமேல் நாம் அருமை நண்பர்களாக இருப்போம்" என்று மஞ்சு சொன்னது. கொஞ்ச நேரம் இருவரும் வீடியோ பார்த்து விட்டு பின் கொஞ்சம் பேசினார்கள். மஞ்சு நன்றாக தூங்கி விட்டாள். ஆனால் முரளிக்கு குறுகுறுவென்று இருந்தது. ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. ஏதோ பேருக்கு என்று கொஞ்சம் தூங்கினான். காலையில் மும்பை சேர்ந்தவுடன் இருவரும் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்கள். முரளிக்கு மஞ்சு இரு கன்னங்களிலும் தலா ஒரு முத்தம் விகிதம் கொடுத்து சென்றாள், அதனுடன் அவளது நட்பின் ஆழத்தையும்.

முரளி அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு வரதன் பாலு தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றான். அவர்கள் அப்போது தான் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். முரளியை கண்டதும் இருவரும் மிகவும் வியப்புடன் பார்த்தனர். முரளியும் அவர்களுடன் சேர்ந்து காபி அருந்த துவங்கினான். பாலு " முரளி என்னப்பா உனக்கு கோவா மச்சம் மிகவும் செம்மையாக அமைந்துவிட்டது. இரண்டாம் திருமணம் முடித்து மணப்பெண்ணுடன் வருவாய் என்று எங்களுக்கு தோன்றியது." வரதன்" எது எப்படியோ முரளி, நான் மைசூரில் கனவில் ஏதேதோ அனுபவித்தேன். நான் கண்ட கனவுகளை நீ நெனவாக செய்து விட்டாய்".
முரளி " பாலு, அதெப்படி பா, நல்ல ஒரு சம்சாரம் இருக்கையில் இன்னொரு பொண்ணை கட்டிக்கொள்ள ? அதுதான் வெறுமனே கட்டிக்கொண்டு மட்டும் வந்துவிட்டேன். ஆமாம் வரதா, நீ கனவு கண்டாய் நான் அதை நிஜமாகவே அனுபவித்தேன் என்று தான் கூறவேண்டும். ஆனால் இது எல்லாமே ஒரு முறை அனுபவம் தான் வாழ்க்கையில். இப்போதிலிருந்து நானும் மஞ்சுவும் நல்ல தோழர்களாக மட்டுமே இருப்போம். ஆமாம், நேற்று காலையிலேயே வந்துவிட்டீர்கள் இங்கு. எங்கெல்லாம் சுற்றி பார்த்தீர்கள்? பாலு " கேட் வேய் ஆப் இந்தியா, சித்தி விநாயகர் கோவில் சென்று வந்தோம்".
வரதன் " முரளி, நேற்று கோவில் சென்றிருந்தபோது, பாலுவுக்கு ரத்த தானம் செய்ய ஒரு வேண்டுகோள் வந்தது. அந்த காலத்து ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் மறைந்த மன்மோகனுடைய மனைவியின் உடல் நிலை சரி இல்லை அவருக்கு AB பொசிட்டிவ் ரத்தம் தேவை என்று தெரியவந்தது. இன்று பாலு சென்று ரத்தம் கொடுக்கப்போகிறான்." முரளி இதை கேட்டு மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான். " எங்கோ வந்த இடத்தில இப்படி ஒரு தர்ம காரியம் செய்யும் பாக்கியம் பாலுவுக்கு கிடைத்தது நம் நல்ல காலம் தான்" என்றான்.

சிற்றுண்டி முடித்துவிட்டு மூவரும் சைபீ ஹாஸ்பிடல் சென்றனர். அங்கே பாலு AB பொசிட்டிவ் ரத்தம் ஒரு யூனிட் கொடுத்தான். அப்போது அங்கே வந்த மன்மோகனின் பெண் பாலுவை கண்டவுடன் ஹிந்தி மொழியில் " நீங்கள் என் மறைந்த கணவரை போலவே இருக்கிறீர்கள். உங்களை பார்த்ததில் உங்கள் ரத்ததானம் உதவியை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றாள்.
பாலு " எங்களுக்கு அவ்வளவு சரியாக ஹிந்தி புரிந்து கொள்ள முடியாது ஹிந்தியில் பேசவும் முடியாது . தயவு செய்து ஆங்கிலத்தில் அதிகமாக உரையாடினால் நாங்கள் புரிந்து கொள்வோம்." அந்த பெண்ணும் அப்போதிலிருந்து ஆங்கிலத்தில் தான் உரையாடினாள். அவள் அம்மாவுக்கு ஒரு ரோடு விபத்தில் அதிகம் எலும்பு முறிவு ஏற்பட்டு அன்று ஆபரேஷன் செய்ய இருக்கிறார்கள். AB பொசிட்டிவ் ரத்தம் கொஞ்சம் குறைவாக அவர்கள் ரத்த வங்கியில் இருப்பதால், மேலும், இதே குரூப் ரத்தம் கொண்ட ஆறு நோயாளிகள் அந்நேரத்தில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பதாலும் முக்கிய இடங்களில் இந்த பிளட் குரூப் தேவையைப்பற்றி தெரியப்படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிய வந்தது. அவளது பெயர் சுபாங்கி என்று சொல்லிவிட்டு பாலுவின் போன் நம்பரை வாங்கி கொண்டாள். ஆபரேஷன் முடிந்தபின் அவள் அம்மாவின் நிலையை பாலுவுக்கு தெரியப்படுத்துவதாக கூறினாள். பாலுவை போல் இன்னொருவர் வாழ்ந்துவிட்டு இறந்தார் என்று கேள்வி பட்டவுடன் வரதனுக்கும் முரளிக்கும் வெகு ஆச்சரியமாக இருந்தது, ஏன் பாலுவுக்கும் தான். முரளி சொன்னான் " ஒருவரை போலவே உலகில் 7 பேர் வரையில் இருப்பார்கள் என்று கேள்விப்படுகிறோமே" . பிறகு அவர்கள் அங்கிருந்து ஒரு உயிர்வாழும் அருங்காட்சியகம் சென்று ரசித்தனர். அதன் பின் உணவு எடுத்துவிட்டு, வெயில் குறைவாக இருந்ததால் சவுபார்த்தி பீச்சுக்கு சென்றார்கள். அங்கே இருக்கையில் வரதன் " இப்போது இன்னுமொரு பீச்சுக்கு வந்திருக்கிறோம். யாருக்கு என்ன அதிருஷ்டம் இருக்கோமோ, தெரியவில்லை". முரளி " எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இன்று காலை பாலு வாத்தியாருக்கு ஒரு அழைப்பு கிடைத்தது போல் எனக்கு தோன்றுகிறது". உடனே பாலு " ஏன்டா எதை எதையோ உளருகுறீர்கள். நான் ஒரு சாது சந்நியாசி. என் மனைவி என்பதால் அவள் புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள். குடும்பத்தை நடத்த திறமையான, வலிமையான ஆண்மகன் தேவையே தவிர என்னை போல் ஒரு சந்நியாசி ஆளு இல்லை." பின்னர் அங்கே கொஞ்சம் கொரித்து விட்டு காபி டீ குடித்துவிட்டு இரவு ஹோட்டல் அருகில் உள்ள ஹோட்டலில் டின்னர் செய்துவிட்டு ஹோட்டல் ரூமுக்கு சென்று உறங்கிவிட்டனர். அடுத்த நாள் , பௌத்த சமய முறை விபாசனா சர்வதேச பகோடா மையம் (தியானம் செய்ய கற்றுக்கொள்ள இடம்) மற்றும் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வந்தனர். விபாசனாவில் வரதன் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நேரம் தியானத்தில் இருந்தான்,. அங்குள்ள அமைதியான சூழ்நிலை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்து புறப்பட்டு இஸ்கான் கோவிலுக்கு சென்று அங்கு கொஞ்ச நேரம் கிருஷ்ணா பஜனைகளை கேட்டுவிட்டு அங்கேயே இரவு உணவும் சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினர்.

அடுத்த நாள் மாலை அவர்களுக்கு சென்னை திரும்பி செல்ல விமானம். காலை வாக்ஸ் ம்யூஸியம் சென்று வர திட்டமிட்டனர்.காலை சிற்றுண்டி எடுக்கையில் பாலுவுக்கு போன் கால் வந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் போனில் பேசிவிட்டு பாலு சொன்னான் " என்ன ஒரு தர்ம சங்கடமான நிலைமை. அந்த சுபாங்கி என்னை மீண்டும் ஆஸ்பத்திற்கு அழைத்திருக்கிறாள்.அவள் அம்மாவுக்கு ஒரு ஆபரேஷன் ஆகிவிட்டதாம். இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டுமாம் . ஆனால் அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கிறதாம், கொஞ்சம் என்னுடன் பேசவேண்டும் என்று அழைக்கிறாள். நான் இன்னும் பத்து நிமிடத்தில் பதில் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் நான் என்று தெரியவில்லை?" வரதன் " பாலு நீ உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரி செல்லு. அங்கே உள்ள சூழ்நிலை குறித்து தெரிந்து கொண்டு பின் எங்களுக்கு போன் செய். எப்படியும் மதியம் மூன்று மணி அளவில் நாம் செக் அவுட் செய்யவேண்டும்." முரளியும் அதுதான் எனக்கும் சரி என்று படுகிறது என்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பாலு சைபீ ஆஸ்பத்திரியில் இருந்தான். அவனை கண்டதும் சுபாங்கி " வாங்க பாலு, நீங்கள் இப்போது எங்களுக்கு ஒரு தெய்வம் போல" என்றவுடன் பாலுவுக்கு ஒன்றும் புரியவில்லை. சுபாங்கி தொடர்ந்தாள் " நேற்று ஆபரேஷன் முடிந்து இரண்டு மணிக்கு பிறகு அம்மா கண் விழித்தார்கள். அங்கும் இங்கும் கண்ணை சுழற்றி விட்டு " சஹாதேவ் எங்கே , சஹாதேவ் எங்கே" என்று கேட்ட வண்ணம் இருந்தாள். சஹாதேவ் மூன்று மாதத்திற்கு முன் காலமான என் கணவர். அவர் என்றால் அம்மாவுக்கு அவ்வளவு மரியாதையும் மதிப்பும். அவரை எப்போதும் தங்கமான மனிதர் என்று தான் கூப்பிடுவார்கள். அவர் இறந்தபிறகு நான் அழுததைவிட என் அம்மாதான் அப்படி கதறி அழுதார்கள். அடிக்கடி அவரை பற்றி தான் பேசி வந்தார்கள். டாக்டர்கள் " உங்கள் கணவன் சஹாதேவின் நினைப்பாகவே உன் அம்மா இருக்கிறார். ஏதாவது ஒன்று செய்து அவர் மன நிலையில் கொஞ்சம் மாற்றம் கொடுக்க வேண்டும். அவர் நினைவுடன் இருந்தாலும் ஒருவித அதிர்ச்சி உண்டாகி கொஞ்சம் சித்தம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அதற்கு தேவையான மருந்துகள் கொடுக்க துவங்கி விட்டோம். அவர்களுக்கு இன்னுமொரு ஆபரேஷன் காலில் செய்ய வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கும் என்று " என டாக்டர்கள் சொன்னதை பாலுவுக்கு தெரியப்படுத்தினாள் சுபாங்கி . பாலு " இப்போது நான் என்ன செய்ய வேண்டும்" என்றான். சுபாங்கி " நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு என் மறைந்த கணவராக நடிக்க வேண்டும்." பாலு அதிர்ந்து வெலவெலத்து போனான் ." என்னால் கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாத ஒரு காரியத்தை செய்ய சொல்கிறீர்கள். எப்படி இது முடியும்? உங்கள் கணவர் இப்பொது உயிருடன் இல்லை. நான் இன்று அவர்போல் உன் அம்மாவுக்கு காட்சி அளித்துவிட்டு உடனே சென்றுவிட்டால், என்னாகும் அவர்கள் கதி? இன்று மாலை எங்களுக்கு சென்னை திரும்பி செல்ல விமானம். நாங்கள் சென்றே ஆகவேண்டும்." சுபாங்கி மிகவும் தாழ்மையுடன் பாலுவிடம் " நீங்கள் சொல்வது எதையுமே நான் மறுக்கவில்லை. நேற்று திடீரென இங்கு வந்தீர்கள். என் கணவர் போல தெரிந்தீர்கள். இன்று என் அம்மா என் கணவரை காணவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு எது நடக்கவேண்டுமோ அதுதான் நடக்கும். இருப்பினும் மிகவும் நல்லவராக பண்புள்ளவராக உள்ள உங்களை ஒரு முறை அணுகி பார்க்கலாம் என்று தான் நான் உங்களை இங்கு வர சொன்னேன். என்னை மன்னித்து விடுங்கள். என அம்மாவுக்காக உங்கள் ரத்தத்தை தானம் செய்தீர்கள். அதுவே மிக பெரிய விஷயம். நீங்கள் உங்கள் திட்டப்படி சென்னை திரும்புங்கள். என் அம்மாவுக்கு நன்றாக குணம் அடைய, எனக்கும் நிம்மதி கிடைக்க உங்கள் பிரார்த்தனையை மாத்திரம் செய்வீர்களா?" என்றபோது அவளது குரல் தழுதழுத்தது. பாலுவுக்கு இதயமெல்லாம் மிகவும் கனத்துவிட்டது மாதிரி இருந்தது. " கொஞ்சம் என் நண்பர்களுடன் போனில் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து அவன் நண்பர்களுடன் போனில் பேசி நடந்த நம்பமுடியாத மாற்றங்களை குறிப்பிட்டான். வரதன் " பாலு, உன்னுடைய மனமும் உன் சூழ்நிலையும் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் எங்கள் விருப்பம் எல்லாம் நீ ஒரு முறையாவது அவள் தாயை பார்த்து விட்டு வா. உன்னை பார்த்து அவர் உடல் முன்னேற்றம் அடைந்தால் அது நல்லது தானே. தவிர சுபாங்கிக்கும் அது கொஞ்சம் ஆறுதல் தரும். நீ இருந்துவிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் கூட திரும்பி சென்னை வரலாம். நீ VRS ( voluntary Retirement Scheme ) அப்ளை செய்து அது நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. இனி தொடரப்போவது உன்னை எப்போது பதவி விடுவிப்பு செய்ய வேண்டும் என்பதே. எனவே இன்னும் ஒருவாரம் கூட தள்ளி போனாலும் அதனால் உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நாங்கள் அலுவலகத்தில் இதைப்பற்றி உன் உயர் அதிகாரியிடம் சொல்லுகிறோம். நீ முடிந்தால் அவருக்கு போனில் ஒரு மெசேஜ் மட்டும் வை" என்றான். பாலுவுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. யாராவது அவனிடம் உதவி என்று கேட்டால் அவனால் தட்ட முடியாது. அவனால் முடிந்ததை நிச்சயம் செய்பவன். ஓரிரு நிமிடம் கண்களை மூடி சிந்தித்தவன் " சரி முரளி. நீங்கள் சொல்வதை போலவே நான் செய்கிறேன்.என் விமான டிக்கெட்டை கேன்ஸல் செய்து விடுங்கள். எனக்கு மட்டும் அதே ஹோட்டலில் இன்று இரவிலிருந்து மூன்று நாளுக்கு வேறு ஒரு அறை புக் செய்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு சுபாங்கியிடம் சென்று " உன் அம்மா என்னை பார்க்கலாம்" என்றபோது சுபாங்கிக்கு தாங்கமுடியாத சந்தோஷம். " என்னால் நம்பவே முடியவில்லை" என்று சொல்லிவிட்டு பாலுவை வெளியே இருக்கச்சொல்லிவிட்டு அவள் மட்டும் டாக்டரை சந்தித்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சுபாங்கி அம்மா உள்ள படுக்கைக்கு முன்பு பாலு நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் டாக்டரும் உடன் இருந்தார். பிறகு " நான் சஹாதேவ், நான் சஹாதேவ் என்று அவர்கள் காதருகில் கூறினான்." முதலில் அவர்கள் கண்ணை திறக்கவில்லை. மீண்டும் பாலு அதைப்போலவே இரண்டு முறை அவள் காதில் சொன்னபோது மிகவும் மெள்ளமாக அவர்கள் கண்களை திறந்தார்கள். "ஆவோ பேட்டா, ஆவோ பேட்டா ( வா மகனே , வா மகனே ) என்று சுவாதீனமான குரலில் கூறினாள். மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். அன்று மூன்று முறை பாலு சுபாங்கி அம்மாவுக்கு அவன் தரிசனம் கொடுத்து வந்தான். மாலை ஆன பிறகு, பாலு ஹோட்டல் செல்கிறேன் என்றபோது " தப்பாக நினைக்கேவேண்டாம். நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கலாம்.என் தம்பி மற்றும் உறவினர்கள் வீட்டில் இருக்கிறார்கள். நீங்கள் தங்க தனியாக அறை மற்றும் எல்ல வசதிகளும் உள்ளது. எனக்காக இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்" என்று கனிவுடன் சொன்னாள் சுபாங்கி. பாலு " ஆகட்டும். ஆனால் இன்று இரவு நான் ஹோட்டலில் தங்கிவிட்டு என் பெட்டிதுணிமணிகளுடன் நாளை உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என்றான் சுபாங்கி " இதோ என் டிரைவர் உங்களை ஹோட்டலில் விட்டுவிட்டு நாளை அவரே நாளை காலை நீங்கள் சொல்கின்ற நேரத்தில் உங்களை பிக்கப் செய்துகொண்டு என் வீட்டில் விடுவார்" என்றாள்.

ஹோட்டல் ரூமுக்கு வந்த பாலு வீட்டுக்கு போன் செய்து நடந்த விவரங்களை அப்படியே அவன் மனைவிக்கு கூறினான். அவன் மனைவி மிகவும் நல்ல உள்ளமும் குணமும் படைத்தவள். " மிகவும் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல ஆலோசனைதான் கூறியுள்ளார்கள். நீங்க இன்னும் மூன்று நான்கு நாட்கள் இருந்துவிட்டு சென்னை வந்து சேருங்கள்" என்றாள். அடுத்த நாள் பாலுவை சுபாங்கியின் டிரைவர் வந்து பிக்கப் செய்துகொண்டு அவள் வீட்டிற்கு கூடி சென்றார். மிகவும் சௌகரியமான பெரிய வீடு. அவரை வீட்டில் உள்ளவர்கள் அவ்வளவு உபசரித்தனர். பாலுவுக்கு ஆச்சரியம் சுபாங்கியும் அங்கு இருந்தாள். " நீங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பேன் என்று நான் நினைத்தேன்" என்று பாலு வியந்து சொன்னபோது " நேற்று என் தம்பி ஆஸ்பத்திரிக்கு வந்து தங்கியதால் நான் வீடு வந்துவிட்டேன். உங்களுக்கு சிற்றுண்டி தயாராக உள்ளது. நானும் கம்பெனி தருகிறேன்" என்றாள். பிறகு இருவரும் சிற்றுண்டி எடுத்தனர். கொஞ்சம் பாலுவை ஓய்வு எடுக்க சொன்னாள் சுபாங்கி. மீண்டும் ஒரு மணி அளவில் இருவரும் உணவு எடுத்தனர். சிறிது ஓய்வு எடுத்த பின்னர் இருவரும் ஆஸ்பத்திரி சென்றனர். மீண்டும் ஒருமுறை பாலு அவள் அம்மாவுக்கு பக்கத்தில் சென்று காட்சி கொடுத்தார். இந்தமுறை அவள் அம்மா மிகவும் தெளிவாக காணப்பட்டாள். அங்கிருந்த டாக்டர் " உங்களை பார்த்தபின் இவர் உடல் நிலையில் நல்ல மாற்றம் இருக்கிறது.கூடிய விரைவில் பழைய நினைவுக்கு வந்துவிடுவார்கள்"என்றார்.

பின்னர் பாலு சுபாங்கியுடன் ஆஸ்பத்திரியில் உள்ள உணவகத்தில் உணவு எடுத்தனர். " நான் கொஞ்சம் வெளியே சென்று விட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு உங்க வீட்டிற்கு இரவு பத்து மணிக்குள் வந்துவிடுவேன் " என்று பாலு சொன்னபோது " அம்மா இந்த நிலையில் இருப்பதால், என்னால் உங்களுடன் வெளியே வரமுடியவில்லை. மன்னிக்க வேண்டும் என்னை. இல்லையெனில் நிச்சயம் நானும் உங்களுடன் வந்திருப்பேன். இரவு உணவு என் வீட்டிலேயே சாப்பிடலாமே" என்றாள் சுபாங்கி. பாலு " பரவாயில்லை. உங்கள் சூழ்நிலையை நான் அறிவேன். இன்று நான் வெளியிலேயே சாப்பிட்டு வருகிறேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அங்கிருந்து அவன் விபாசனா மையத்திற்கு சென்று அங்குள்ள தியான திடலில் தியானத்தில் அமர்ந்தான் இரண்டு மணி நேரங்கள் தியானம் செய்த பின் அவனுக்கு மனது லேசாகி விட்டது. அங்கிருந்து அருகிலுள்ள மார்க்கெட்டுக்கு சென்று கொஞ்சம் சிற்றுண்டி எடுத்துவிட்டு தேநீர் அருந்தினான். பிறகு அங்கே உள்ள மார்க்கெட் வீதிகளில் நுழைந்து இரண்டு சேலைகள் மற்றும் சில சின்ன பொருட்களை வாங்கினான். அருகில் இருந்த ஒரு கோவிலுக்குள் நுழைந்து அங்கே சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தான். கண் விழித்தபோது இரவு எட்டு மணி ஆகி விட்டது. சிறிது தூரம் நடந்து ஒரு ஹோட்டலில் இரவு உணவு எடுத்துவிட்டு அங்கிருந்து சுபாங்கி வீடு சென்றான். சுபாங்கி அவனை வரவேற்றாள். " ஏதாவது சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டாள். பாலு " நான் சாப்பிட்டுத்தான் வந்தேன்" என்றவுடன் கொஞ்சம் பழங்களை நறுக்கி பாலுவுக்கு கொடுத்தாள். பின்னர் பாலுவை அவன் தங்கியுள்ள அறைக்குள் அழைத்து சென்று " நான் கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை ஏதேனும் உண்டா" என்றபோது பாலு " தாராளமாக பேசலாம்" என்றான். அவன் குரலில் ஒரு அக்கறையும் அதே நேரத்தில் அமைதியும் கலந்து இருந்தது.

சுபாங்கி சொல்ல ஆரம்பித்தாள் " எங்கள் இருவருக்கும் 15 வருடங்களுக்கு முன் திருமணம் விமரிசையாக நடந்தது. சஹாதேவ் ஒரு சார்ட்டட் அக்கௌன்டன்ட் . அவர் நண்பர் ஒருவருடன் இணைந்து கன்சுலேட்டன்சி கம்பெனி நடத்தி வந்தார். போனவருடம் அவரது உடல்நிலை குன்ற ஆரம்பித்ததும் டாக்டர்கள் சோதனைகள் பல செய்துவிட்டு அவருக்கு கேன்சர் வியாதி இருப்பதாக கூறினார்கள். அடுத்த எட்டு மாதங்களுக்கு எங்களால் ஆன எல்லா வைத்தியங்களையும் செய்து விட்டோம் . இறுதியில் எதுவும் பயனளிக்காமல் மூன்று மாதத்திற்கு முன் அவர் காலமானார். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் என்னிடம் அன்பாய் பழகினால் கூட மிகவும் நெருக்கமாய் பழகவில்லை. எனக்கும் அவர் அப்படி பழகியது குறையாக தெரியவில்லை. இப்போது உங்களை பார்க்கையில் நான் மறைந்த ஸஹதேவை பார்க்கிறேன். உங்களை கண்டவுடனே ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு முன்பே உங்களை பற்றி என் மனதில் மிகவும் உயர்ந்த எண்ணம் வந்துவிட்டது. நீங்கள் நிச்சயம் திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் தான் என்பதையும் என்னால் யூகிக்கமுடியும்."
பாலு " உங்கள் வாழ்க்கையை கேட்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. உங்களுக்கு நான் எந்த வகையில் உதவ வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களிடம் பணக்குறை ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை."
சுபாங்கி " மனக்குறை தவிர வேறு எதுவும் இல்லை. என்னை நீங்கள் உங்களின் இன்னொரு துணைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா"?
பாலு திடுக்கிட்டு "என்ன அப்படி சொல்லுகிறீர்கள், நான் 25 வருடங்களாக என் மனைவியுடன் ஒரு வளர்ந்த மகனுடன் வாழ்ந்து வருகிறேன். இந்த நிலையில் இன்னொரு திருமணம் என்ற கேள்விக்கு சிறிதளவு கூட இடம் இல்லை" என்றான். சுபாங்கி " புரிகிறது. இப்போது ஒரு உண்மையை கூறுகிறேன்.நான் ஒரு அனாதை. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து அதே இடத்தில பணி புரிந்து வந்தபோது தான் சஹாதேவ் என்னை பார்த்தார் . அதன் பின் என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி என்னை கைப்பிடித்தார். அவர் இப்போது இவ்வுலகில் இல்லாதபோது நான் மீண்டும் ஒரு அனாதையாகத்தான் வாழவேண்டும் "

இதை கேட்டவுடன் பாலுவுக்கு கருணையும் மனிதாபினனமும் இருமடங்கு கூடிவிட்டது. அவனுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியாத ஒரு குழப்பம் உண்டானது. சுபாங்கி தொடர்ந்தாள் " உங்கள் மனதில் ஓடும் குழப்பத்தை என்னால் உணரமுடிகிறது. ராமகிருஷ்ணா பரமஹம்சர் சாரதா தேவி வாழ்க்கையை பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்"
பாலு " நன்கு தெரியும். திருமணமாகியும் தாம்பத்திய உறவு ஏதும் கொள்ளாமல், பக்தி மார்கத்தில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள்" என்றான். சுபாங்கி " நானும் நீங்களும் அவ்வாறு வாழ முடியுமா" என்று கேட்டவுடன் பாலு, இந்த விண்ணப்பத்தை எதிர்பார்த்தவன் போல " எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு. நான் வீட்டில் இதை என் மனைவி மகனுடன் கலந்தாலோசித்து விட்டு பதில் கூறுகிறேன்" என்றான்.
பின்னர் சுபாங்கி அவள் அறைக்கு சென்றுவிட்டாள். அடுத்த நாள் மீண்டும் ஒருமுறை பாலு சுபாங்கியுடன் சென்று அவள் அம்மாவை பார்த்தான். அன்று காலையில் தான் காலில் ஆபரேஷன் செய்ததால் கொஞ்சம் மயக்கமான நிலையில் இருந்தார் அவள் அம்மா. அதன் பின்னர் பாலு அன்று மாலையே விமனநிலையத்திற்கு சென்று அன்று இரவே சென்னை அடைந்தான். அவனை வழி அனுப்ப சுபாங்கி விமான நிலையம் வந்தாள். பாலு விமான நிலத்திற்குள் நுழைகையில் சுபாங்கி " நீங்கள் உன் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதையே செய்யுங்கள். உங்கள் மனைவி மகன் வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். என்னை பற்றி கவலை வேண்டாம். அம்மா மீண்டும் வீடு திரும்பியவுடன் நான் முன்பு வேலை செய்துகொண்டிருந்த அனாதை இல்லத்திற்கு சென்று விடுவேன். அவர்கள் என்னை அங்கு வருமாறு மிகவும் கரிசனத்துடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லி தன்னுடைய இரண்டு போன் நம்பர்களையும் பாலுவுக்கு கொடுத்து " உங்கள் வாழ்க்கை நன்றாக இனித்திட என் வாழ்த்துக்கள் " என்று சொல்லி ரொம்ப நேரமாக கையசைத்துவிட்டு சென்றாள்."

சரி வாசகர்களே, மைசூரில் வரதனின் குன்றா நீர்வீழ்ச்சியில் சொர்க்கபுரி லீலையும், கோவாவில் கடற்கரை முரளியின் இன்ப லீலையும், மும்பையில் பாலுவின் கதம்ப லீலைகளையும் கண்டோம். வரத்தான் தப்பித்து கொண்டான். முரளி மஞ்சு நட்பு தொடர்ந்து இருந்ததா? அவர்கள் மீண்டும் எப்போதேனும் சந்தித்து கொண்டார்களா? சுபாங்கியின் எதிர்காலம் எப்படி இருந்தது? பாலு அவன் குடும்பத்தினரிடம் சுபாங்கி பற்றி பேசினானா? அவர்கள் அதற்கு ஒப்பு கொண்டார்களா? சுபாங்கி பாலுவுடன் வாழ வாய்ப்பு அமைந்ததா, இவை எதுவும் நிச்சயமாக எனக்கு தெரியாது. எனவே, நீங்களே கற்பனை வளத்துடன் சிந்தித்து அவசியமான முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.மும்மூர்த்திகளின் கதை இத்துடன் நிறைவு பெறுகிறது.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Nov-21, 1:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 78

மேலே