வேடிக்கை மனிதரைப் போல் கவிஞர் இரா இரவி

வேடிக்கை மனிதரைப் போல்!

கவிஞர் இரா. இரவி

வேடிக்கை மனிதரைப் போல் வீழவில்லை பாரதி
வையகம் போற்றிடும் மகாகவி ஆனார் பாரதி!

வாழ்ந்த காலத்தில் மதித்தவர் மிகச்சிலர்
வாழ்ந்து முடித்த காலத்தில் மதிப்போர் பலர்!

முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் தான் வாழ்ந்தார்
மூவாயிரம் ஆண்டுகள் கடந்தும் வாழ்வார்!

காலத்தால் அழியாத கவிதைகள் யாத்தார்
காலம் கடந்து கவிதைகளால் வாழ்வார்!

சகலகலா வல்லவராகத் திகழ்ந்தவர் பாரதியார்
சற்றும் சளைக்காமல் எழுதிக் குவித்தார் பாரதியார்!

விடுதலை வேட்கையை பாட்டால் விதைத்தவர்
விவேகமாக சிந்தித்து பாடல்கள் செய்தவர்!

முண்டாசு கட்டி முத்தமிழ் முழங்கியவர் பாரதியார்
முறுக்கு மீசை வீரத்தை பாடலில் விதைத்தவர்!

அச்சமில்லை என்று பாடி அச்சத்தை அகற்றியவர்
அன்பே கடவுள் என அனைவருக்கும் போதித்தவர்!

சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தோர் பலர்
செந்தமிழ்ப்பாவலர் பாரதியார் சிலை மட்டுமே பள்ளியில்!

திருவல்லிக்கேணியில் வாழ்ந்திட்ட தமிழ்க்கேணி பாரதியார்
திருமணம் செய்து கொண்டு செல்லம்மாவை நேசித்தவர் பாரதியார்!

வறுமை வாட்டி துன்பக்கடலில் தவித்திட்ட போதும்
வாடாமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றவர்!

உலகின் முதல்மொழியான தமிழ்மொழியை பாரதியார்
உன்னத மொழியெனப் போற்றிப் புகழ்ந்து பாடியவர்!

தமிழ்மொழி போல இனிதான மொழி வேறில்லை என்றவர்
தமிழ்மொழிக்கு மகுடங்கள் சூட்டி மகிழ்ந்தவர் பாரதியார்!

மக்கள் மனங்களில் கல்வெட்டாகப் பதிந்தது பாடல்கள்
மகாகவிக்கு மரணம் இல்லை வீழ்ச்சியும் இல்லை!

உலகம் உள்ளவரை தமிழ்மொழி இருக்கும்
உன்னதத் தமிழ்மொழி உள்ளவரை வாழ்வார் பாரதியார்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (28-Nov-21, 6:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 184

மேலே