கடல்கொள்

கடல்கொள்

ஓ மனிதா கொஞ்சம் கடல் கொள் !!!!!!

காலையில் உலகிற்கு ஒளி தருவதில் தொடங்குகிறது என் அரும்பணி !!!

மனதோடு பேசும் மாலைவேளை,
மணலோடு பாதங்கள் பதிக்க, ஆங்காங்கே மழலைகள் குதிக்க,
வருகிறேன் அனைவரையும் சந்திக்க.

சுண்டல் விற்பவர்கள், குதிரை ஓட்டிகள், ராட்டினக்காரர்கள் தினமும் நன்றி தெரிவிக்கின்றார்கள் மனதின் வழியே. என் ஆசியும் பெறுகிறார்கள் அடுத்தநாள் ஆரம்பத்தில்.

மனிதர்களுக்கு பூவாக நுரைகள் மனிதர்களுள் புனிதர்களுக்கு என் சிந்தனைச் சிறைகள். அதன் வரம் அவர்களுக்கே பிடிபடும் - கவலைகள் பொடிபடும்.

பாசம் உண்டு எனக்கு - வாழ்வை என்னுள் முடிக்க எண்ணுவோர்க்கும் பரிசளிப்பேன் அடுத்தநாளை
ரோஷமும் உண்டு எனக்கு சிலரை விழுங்குவேன். மறவாதீர் எனக்கு உப்பிட்டது நீங்களல்ல மனிதர்களே, இறைவன் !!!

உப்பு கொஞ்சம் அதிகம் அதனால் தான் செஞ்சோத்து கடனுக்காக சில உயிரையும் எடுக்க நேர்கிறது.

பரிகாரமாக உப்பிட்ட கரங்களின் ஆணைப்படி எண்ணிலடங்காத நீங்கள் இன்னும் கண்டுமிராத உயிர்களை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.

மனிதர்களே... நண்டு பிடியுங்கள் அதோடு சமூகத்தில் மனிதநேயத்தை கண்டும் பிடியுங்கள். சகிக்கவில்லை உங்கள் வாழ்வியல்.

மீன் பிடிக்கிறீர்கள் மீனவர்களே காரணம்  நாட்டின் புரதம்.
ஆனால் உங்கள் குடும்பங்களே கொண்டுள்ளனர் மாற்று வேளைகளில் வாழ்நாள் விரதம்....

சமத்துவம் என்றொரு பேச்சு அடிபடுகிறது உங்களுள், அதற்க்கர்த்தம் சொல்வேன் காத்திருங்கள்,
வருகிறது திசம்பர்.

கவலையா மாலையில் என்னிடம், நோயா காலையிலேயே என்னிடம், கொண்டாட்டமா இரவுகளில், சிலர் பிழைப்புக்காக பலநாட்கள் என்னோடு, புரிந்து கொள்ளுங்கள் என் முக்கியத்துவத்தை.

நீரின்றி அமையாது உலகு என்றார் இன்று என்னோடு இருக்கும் ஒரு மனிதருள் புனிதர். உலக நீரின் அளவில் 97 விழுக்காடு நான்தான். நீங்கள் பற்றாக்குறையென்று பளிச்சிடுவதை கண்டு எள்ளிநகைகிறேன்..

மனிதர்களே இதோ என் அலைகள் எதோ சொல்ல வேண்டுமாம் உங்களுக்கு... ஆனால் நீங்கள் ஒருநாளும் இயற்கை மொழிகட்க்கு செவிசாய்ப்பதில்லையே.

அந்தி சிவக்கிறது, என்னை இன்னும் அழகுற செய்கிறது, இயற்கைக்கு அழகூட்டுவது இயற்கை மட்டும்தான், அதை ரசிப்பது மட்டுமே நீங்கள்....

அதோ ஒரு கவிஞன் வருகிறான், என்னிடம் வந்தால் அவன் கவிதைக்கு கர்ப்பனைக் கெட்டாத வரிகள் கிடைக்கிறதாம். பார் மனிதனே!! நானே ஆதிகவி.

அதோ ஒரு இசைக்கலைஞன் வருகிறான், அவனது இசை உலகம் பரவ நான் சுவாசித்த காற்றில் அவன் கச்சாப்பொருள் எடுத்து செல்கிறான். அலைமொழி கேட்டதுண்டா நீ?

இதோ இந்த கரை இதுதான் எனதுற்ற நண்பன் என் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் சிநேகிதன்.
தினமும் அழுகிறான்
உங்கள் தேவையின் மிச்சங்கள் இவனால் தாங்கப்படுவதை எண்ணி எண்ணி

நெகிழிகள், குப்பைகள், பற்பல கழிவுகள் எல்லாவற்றினும் மேலாக நீங்கள் மகிழ்ந்த முகத்துடன் செல்ல,
இங்கே விட்டுச்செல்லும் சோகங்கள்...
சிந்தியுங்கள்....

பாருங்கள் உலகின் ஒற்றை விளக்கு என்னுள் புதைவதை. இனி இரவுகாட்சி தொடங்கும்
நான் என்னோடும் கரைமண்ணோடும் ஆர்ப்பரிக்கும் நேரம்.

மறந்துவிடாதே என்னைப்போல் நீயும் இயற்கையே, எதோ மதிகெட்டுவிட்டாய் மறந்துமட்டும் விடாதே, உப்பிட்டவரை 🙂

எழுதியவர் : புதியவன் (2-Dec-21, 8:55 am)
சேர்த்தது : புதியவன் 1
பார்வை : 44

மேலே