நல்ல மாற்றம் எதிர் நோக்கி இட மாற்றம்

வாழ்க்கையில் சொந்தவீடு வாங்குவது என்பது ஒரு பெரிய சாதனை. அதிலும் தனி வீடு என்று வாங்கினால் அது இன்னும் பெரிய சாதனையே. கல்யாணம் பலர் ( பல இல்லை ஐயா) செய்து கொள்ளலாம். ஆனால் சொந்த வீடு, அது சின்ன வீடாக இருப்பினும் (வேறு ஏதேனும் தப்பாக நினைக்க வேண்டாம்) பெரிய வீடாக இருப்பினும், அதை வாங்குவதற்கு பணம் மட்டும் இல்லை , அதிர்ஷ்டம் கூட தேவை.
நான் எனது 38 வயதில் சென்னையில் ஒரு சிறிய வீடு ( மொத்தமாக 720 சதுர அடிகள் தான்?) வாங்கினேன். ஆனால் ஐதராபாத் நகரில் வேலை என்பதால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டேன். இப்போது சென்னையில் வீடு வாங்கி செல்ல மனம் இல்லை எனவே இந்த சின்ன வீட்டை இந்த வருடஆரம்பத்தில் விற்று விட்டேன்.
இது ஒரு புறம் இருக்க, என் 45 ஆவது வயதில் நான் ஐதராபாத் நகரில் கொஞ்சம் ஊரைத் தள்ளி அடுக்கு மாடி ஒன்றில் ஒரு வீடு( flat) ஒன்று வாங்கி இந்நாள் வரை இதில் வாழ்ந்து வருகிறேன். எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த வீடு இது. ஐந்தாம் மாடியில் வீடு. அருமையான காற்றோட்டம், நல்ல சூரிய ஒளி, சத்தம் மிகவும் குறைவான அமைதியான சூழ்நிலை. இப்போது இந்த வீட்டில் 17 வருடங்கள் கழிந்து விட்டது. நான் வேலை ஓய்வு பெற்று விட்டேன். பொதுவாக இந்த ஊர் பலருக்கு பிடித்து போய் விடுகிறது. ஆனால் என்னை பொறுத்தவரை கடந்த 24 வருடங்கள் இங்கு உள்ள தட்பவெப்பநிலை என்னை ஏதாவது ஒரு விதத்தில் படுத்தி எடுக்கிறது. 1997இல் ஒவ்வாமை , பெரிய அளவில் என்னை முதன் முதலாக தாக்கியது. அதனால் நான் எவ்வளவு துன்பம் அடைந்தேன் என்று எளிதில் சொல்ல முடியாது. அவ்வளவு அவஸ்தைகள் பட்டேன். இருப்பினும் ஹோமியோபதி மருந்து எடுத்ததால் மற்றும் பிராணாயாமம் செய்து வந்ததால் ஒவ்வாமை தாக்கம் வெகுவாக குறைந்தது.
இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் சில வகையான உடல் அசௌகரியங்கள ஒவ்வாமை காரணமாக மீண்டும் துளிர் விட ஆரம்பித்து விட்டது. இது தவிர, இங்கு உள்ள சமுதாயத்துடன் நான் இணைய முடியவில்லை. நண்பர்களிடமும் ஒருங்கிணைய முடியவில்லை.
இக்காரணங்களால் நான் இந்த ஊரிலிருந்து குடி பெயரத் தீர்மானித்து விட்டேன்.பெரிய வீட்டை துறக்கிறேன் என்ற ஆதங்கம் எங்கள் இருவருக்கும் இருப்பினும், வாழ்க்கையில் அவ்வப்போது கொஞ்சம் மாற்றம் நல்லது என்று நான் சிறு வயதிலிருந்தே கேள்வி பட்டிருக்கிறேன். இப்போது இதை நான் செய்கையில் காட்ட இருக்கிறேன். ஆமாம், பிப்ரவரி முதல் நாங்கள் இருவரும் கொங்கு நாட்டுக்கு ( கோயம்புத்தூர்) குடி பெயரப் போகிறோம். முடிந்தால் இங்கு ஹைதராபாத் வீட்டை விற்று விடுவோம். கோவை நகரில் முதலில் வாடகை வீட்டுக்கு தான் செல்கிறோம். அங்கு
என் உடல் நலம் நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். இதைத் தவிர, அங்கு சமுதாயத்துடன் இணைந்து வாழ மிகவும் ஆவலாக இருக்கிறேன். எனக்கு உற்சாகம் தருவது மட்டும் இல்லாமல் ஏனையோருக்கும் ஊக்கத்தை உற்சாகத்தை கொடுக்க மனதார விழைகிறேன். கோவையில் நான் நிச்சயமாக பருத்தி நெய்யப் போவதில்லை ஆனால் அவசியம் என்னை திருத்தி அதனால் உய்யப் போகிறேன். அதனால் திருப்தியும் அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் இருக்கிறது.
நான் எப்போதும் மானசீகமாக வேண்டும் மூன்று விஷயங்கள் அன்பு அமைதி ஆனந்தம். இவை நிலைத்து இருக்க நான் என்னுள் போட்டிருப்பது தைரியம் துணிச்சல் என்ற பலமான திடமான அஸ்திவாரம். அதன் மேல் தான் மகிழ்ச்சி என்கிற என் வாழ்க்கை இல்லம் அமைந்துள்ளது. இனிய வாசகர்களே, கோவைக்கு நீங்கள் வருகை தந்தால், அவசியம் அடியேன் இல்லத்திற்கு வருமாறு அன்புடன் பணிக்கிறேன்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (24-Dec-21, 4:35 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே