உள்ளத்தான் நள்ளாது கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – நாலடியார் 128
நேரிசை வெண்பா
உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும் 128
- தீவினையச்சம், நாலடியார்
பொருளுரை:
நீர் தெளிவுடையதாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய பூக்கள் நிறைந்த மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!
உள்ளத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்த் தீய எண்ணத்தினால் நேயஞ் செய்தவரது மிகுந்த நட்பு என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.
கருத்து:
மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்:
உன்ளத்தானென்றது அகத்தன்பினால் என்னும் பொருட்டு;
கழிகேண்மையென்றார் அத்தகைய நட்புக்கு முதலில், அவ்வாறு மிக நெருக்கமாயிருப்பதும் ஓர் அறிகுறியாதலின். ‘அல்வழியெல்லாம் உறழென மொழிப'1 வாதலின் எதுகை நோக்கிப் ‘புனற்செதும்பு' எனத் திரிபேற்றது.