நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு –நாலடியார் 129

நேரிசை வெண்பா

ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு 129

- தீவினையச்சம், நாலடியார்

பொருளுரை:

ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்;

அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால் அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையே யாகும்

கருத்து:

கல்லாத மூடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.

விளக்கம்:

‘ஊக்கம் அழிப்பதும்' என்னும் உம்மை ‘மேல் உயிரை அழிப்பதும்' என்னும் எதிரது தழீஇயது.

‘கைப்பட்டக்கால்' என்பதை ஆக்கம் என்பதற்கும், ‘ஆகும்' என்பதைக் கருமமே என்பதற்குங் கொள்க.

தனது பொருள் கல்லாத மூடர்வழியாகப் பலர்க்குந் தனக்குந் தீங்கு விளைத்தலாலும், இம்மையிற் செய்த வினைகள் மறுமையிலுந் தொடர்தலாலுந் ‘இருமையுஞ் சென்று சுடுதல்' நுவலப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Dec-21, 2:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே