விண்இயங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல் - பழமொழி நானூறு 34

நேரிசை வெண்பா

பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். 34

- பழமொழி நானூறு

பொருளுரை:

நிரல்பட உயர்ந்து மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும் வேல்போன்ற கண்களையும் உடைய பெண்ணே! வானிற் செல்லும் சூரியனைக் கையால் மறைப்பவர்கள் இல்லை, மறைக்க முடியாது.

அதுபோல, மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை பாசியைப் போன்ற அடாத சில சொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? மறைக்க முடியாது.

கருத்து.:

அறிவுடையார் புகழை மறைப்பின் மறைபடாது என்பதாம்.

விளக்கம்:

பாசியை உவமை கூறலின் மிக்க படிற்றுரைகளை இடைவிடாது உரைப்பர் என்பது பெறப்பட்டது. அவர்மேல் பழித்தற்குரியன இல்லை யென்பார் இட்டுக் கூறினார் என்றார்.

'ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' - இஃது இச்செய்யுளில்,வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-21, 4:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே