எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் - பழமொழி நானூறு 33

இன்னிசை வெண்பா

வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா!
என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில். 33

- பழமொழி நானூறு

பொருளுரை:

எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்து தம்மிடத்து அகப்பட்டவிடத்தும் உறங்குகின்ற புலியை அவ்வுறக்கத்தினின்றும் எழுப்புவார்களோ? இல்லை.

அதுபோல, கொடிய சினத்தையுடைய அரசன் தங்கீழ் வாழ்வார்க்கு வேண்டாத தீமையே செய்யினும் அவன் மனத்தில் கறுவு கொள்ளத்தக்கனவற்றை அவன்கீழ் வாழ்வார் ஒருசிறிதும் செய்ய வேண்டாம்.

கருத்து:

அரசன் தமக்குத் தீமை செய்யினும் அவற்குத் தீமை செய்யாதொழிக.

விளக்கம்:

புலி அகப்பட்டு விட்டதே என்பது கருதி துயில் எழுப்புவார் இலராதல் போல, அரசன் தீமை செய்தானேயென்பது கருதிச் சிறிதும் தீமை செய்தல் இலராதல் வேண்டும்.

புலி உறக்கத்தினின்றும் நீங்கி நிற்றல் அச்சத்திற்குக் காரணமாதல் போல், அரசன் மனத்துச் சிறிது கறுவு கொள்வதும் அது செய்தார் அழிவுக்குக் காரணமாம். 'அகப்படாக் கண்ணும்' என்பதும் பாடம்.

'எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-21, 3:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே