தனிமரம் 🌲

காலை எழுந்தவுடன் வெளியில் ஒரே கூச்சல். ஜன்னலை திறந்து என்ன சத்தம் என்று எட்டி பார்த்தேன். தெரு முனைவில் இருக்கும் இரண்டு வீட்டினரும் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். இது இன்று மட்டும் அல்ல, எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். ஒரு வீட்டினர் சதீஷ் குடும்பம். மற்றொருவர் வானதி அம்மாள். இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்சினை.

வானதி அம்மாள், வயது ஐம்பத்தைந்து, கணவர் திருமணமான சில மாதங்களில் ஓடி விட்டார். ஒரேயொரு மகன் தான். அவனும் இப்போது வெளியூரில் படித்து வருகிறான். ஆண்டுக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ தான் தாயை பார்க்க வீட்டிற்கு வந்துசெல்வான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவனால் கைவிடப்பட்ட வானதி அம்மாள் வீடு வாடகைக்கு விட்டு அதிக வசூல் ஈட்டி வந்தாள். அந்த தெருவில் அவளுக்கு என்று பத்து வீடுகள் மேல் உள்ளது. ஒரு வீடு காலி ஆனாலும் அடுத்த நாளே அந்த வீட்டிற்கு வேறொருவர் குடியேறி விடுவார்கள். இருந்தும் அவள் வீட்டு மாடியில் இருக்கும் வீட்டிற்கு மட்டும் யாரும் குடியேற வில்லை. அதற்கு காரணம் அந்த வீட்டின் மேற்பரப்பு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் ஆனது. வீடு பார்க்க வந்து சென்றவர்கள் எல்லோரும் வெப்பத்தை காரணம் காட்டி வர‌ மறுத்து விடுகின்றனர். வானதி அம்மாளுக்கு அந்த வீட்டிற்கு செலவு செய்வதில் விருப்பமில்லை. யாரும் குடியேறாத வீட்டிற்கு செலவு செய்து பயனில்லை. இந்த வீட்டின் மூலம் நமக்கு வர வேண்டிய வாடகையை மற்ற வீட்டின் வாடகையை உயர்த்தி சரி செய்து கொள்வோம் என்று மற்ற வீடூகளின் வாடகையை உயர்த்தினாள். மக்களும் தாங்கள் வேலைக்கு சென்று வருவதற்கு வசதியாக வீடு இருப்பதால் அவள் கேட்கும் வாடகையை கொடுத்து வசித்து வந்தார்கள்.

ஒரு நாள் அவள் பையன் தன் பள்ளியில் நடக்கவிருக்கும் ஓவிய போட்டிக்காக தன்னை ஆய்த்த படுத்தி கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டை வரைந்து வானதி அம்மாளிடம் அதை காட்டி எப்படி இருக்கிறது என கேட்டான். "எல்லோரும் வீடு எளிதில் வரைந்து விடுவார்கள். நீ வெற்றி அடைய வேண்டுமானால் நீ இன்னும் முயற்சிக்க வேண்டும்" என்றாள். அவனும் அவன் வரைந்த வீட்டிற்கு அருகில் ஒரு மரம், வீட்டின் முன் ஒரு புறா கூண்டு, தெருவிளக்கு என்று அந்த ஓவியத்திற்கு அழகு சேர்த்தான். மறுநாள் தன் தாயிடம் தான் வரைந்த ஓவியத்தை காட்டி அவன் பெற்ற பரிசையும் நீட்டுகிறான். அதை கண்ட வானதி அம்மாளிற்கு ஒரு யோசனை வந்தது. பிறகு வீட்டின் முன்பு சில செடிகளை நட்டு வைத்தாள். தினமும் தண்ணீர் ஊற்றி அதை பார்த்து பார்த்து வளர்த்தாள். அந்த செடிகள் அருகே யாரையும் நெருங்க விடாமல் காத்து வந்தாள். நட்ட செடிகளில் ஒன்றை தவிர எல்லாமே நாளடைவில் பட்டு போனது. சில வருடங்கள் ஓடின. அந்த ஒரு செடி மரமாக வளர்ந்து அவள் வீட்டிற்கு நல்ல நிழல் தந்தது. அவள் வீட்டிற்கு மட்டுமன்றி அந்த தெருவிற்கே அந்த மரம் அழகு சேர்த்தது. பச்சை பசேலென இலைகள், நாலாபுறமும் கிளைகள் தொங்க அடர்த்தியான மரமாக கம்பீரத்துடன் நின்றது. கண்ணுக்கு கவர்ச்சி ஆகவும், குளிர்ச்சி சூழலையும் அந்த மரம் தந்து வந்தது. அந்த தெருவில் முகவரி தேடி வருபவர்களுக்கு கூட அந்த மரத்தை அடையாளம் காட்டி வழி சொல்லும் அளவிற்கு அந்த மரம் உயர்ந்து தனியாக தெரிந்தது‌. அக்கம் பக்கத்தினர் வானதியிடம் மரத்தின் அழகை புகழ்ந்து தள்ளினர். மேலே இருக்கும் வீட்டிற்கு இப்போது மக்கள் வந்து விடுவார்கள் என நம்பினாள். வீடு பார்க்க வருபவர்களிடம் வாடகையும் சற்று குறைத்து பேசினாள்.

சில நாட்களில் பிழைப்புக்காக ஊர் தேடி வந்த சதீஷ் குடும்பம் அந்த மேல் வீட்டிற்கு குடி போகிறது. சதீஷ் புதிதாக திருமணம் ஆகி மனைவியும் கையில் இரண்டு வயது குழந்தையுடனும் மேல் வீட்டிற்கு குடியேறி இருக்கிறான். இவர்கள் வந்த படியால் வானதி அம்மாளிற்கு இருந்து வந்த அந்த ஒரு குறையும் அப்போது தீர்ந்து விட்டது. மாதம் தொடங்கி மூன்றாம் தேதிக்கு முன் வாடகை கொடுத்து விடாவிட்டில் மூன்றாம் நாள் அவள் மூஞ்சியில் தான் முழிக்க நேரிடம். தாமதமாக கொடுப்பவரிடம் அதிக வசூல் செய்வாள். அதே வசிப்பவர்கள் ஏதேனும் சரி பார்க்க சொன்னாள் இப்போது பார்க்கிறேன், அப்புறம் பார்க்கிறேன் என்று தட்டி களித்து விடுவாள். அவர்கள் காலி செய்தாலும் கூட அடுத்து வருவதற்கு மக்களுக்கா பஞ்சம் என்ற திமிரு தான். இப்படியிருக்க, மேல்வீட்டிற்கு ஆள் வந்தவுடனே, தன் வீட்டின் முன்பு வளர்ந்து இருக்கும் மரத்தை அவள் கண்டு கொள்ளாமல் விடுகிறாள். புதிதாக குடிவந்த சதீஷ் வீட்டினரும் அந்த மரத்தை பற்றி யோசிக்கவில்லை. அந்த மரம் தானாக வளர்ந்து வந்தது. வானதி அம்மாள் வீட்டை காட்டிலும் பெரிய வீடாக அந்த மரம் செயல்பட தொடங்கினது.

காலையில் காக்கைகளுக்கும், இரவில் வௌவால்களுக்கும் இடையே தன்னை தேடி வரும் காதல் புறாக்களுக்கும் ஒரு விருந்தினர் மாளிகையாக இருந்து வந்தது. சில நேரங்களில் அதன் கிளைகளில் கூட சில தூக்கணாங்குருவிகள் தூளிகட்டி ஆடி கொண்டிருக்கும். அந்த மரத்தில் பூக்கும் பூக்களை சுவைக்க வரும் வண்டுகளும், வண்ணத்துபூச்சிகளும் ஏராளம். காய்க்கும் காய் கனிகளை சுவைக்க வரும் குருவிகளும், மொய்க்க வரும் ஈக்களும் கூட எண்ணில் அடங்காதவை. வானதி அம்மாள், சதீஸ் வீட்டினரும் அதில் இருந்து கீழே விழுகும் பழுத்த பழங்களையும் புசிப்பார்கள். அந்த தெருவில் வசித்த எல்லோருக்குமே பூ காய் கனிகளை கொடுத்து அந்த மரம் பெரும் பயனை அளித்து வந்தது. வானதி அம்மாளுக்கு தன் வீட்டு வேலையை செய்யவதற்கே நேரம் பற்றாத படியால் இதை எதையும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டாள். நாள்போக்கில் அந்த தெருவில் வேலை செய்யும் கூலி ஆட்களும் மதிய பொழுதினில் அந்த மரத்தின் கீழே தலை சாய்த்து இளைப்பாறி கொள்ள தொடங்கினர். பக்கத்து தெரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவர்கள் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில் அந்த மரத்திற்கு வந்து விளையாடி விட்டு வீடு செல்லும் பழக்கம் கொண்டனர். குழந்தைகள் அதிக பேர் வந்து விளையாடி செல்வதை தெரிந்து கொண்டு ஒரு தாத்தா அந்த மரத்தடியில் ஒரு மிட்டாய் கடையையும் போட்டு விடுகிறார். சில வாலிபர்கள் குடித்து விட்டு மது பாட்டில்களை அங்கு தான் போடுவார்கள். சில பேர் சிறுநீர் கழிக்கவும், குப்பைகள் போடவும் பயன்படுத்தி வந்தனர். அந்த வீதி ஈ.பி. காரர் கூட மின்சார கம்பி பழுது பார்க்க அந்த மரத்தை துணைக் கொண்டு தான் ஏறுவார். அவர் மட்டுமல்ல, நிழலுக்காக ஒதுங்கும் சிலர், மழைக்கு ஒதுங்கும் சிலர், காதல் ரொமான்ஸ் செய்யும் ஜோடிகள், செல்பி எடுத்திடும் சிலர், மரக்கிளைகளில் ஏறி விளையாடும் சிலராக ஒரு பட்டாளமே அந்த மரத்தை பயன்படுத்தி வருவது வானதி அம்மாளுக்கு தெரியவந்தது.

இதை அறிந்த வானதி அம்மாள் செய்வது அறியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள். யாரையும் நெருங்க விடாமல் பார்த்து வளர்த்த மரம் இப்போது புளு பூச்சிகள் முதல் ரோட்டில் போகும் பூதங்கள் வரை எல்லாம் வந்து தொல்லை கொடுப்பதை நினைத்து கோபம் கொண்டாள். அந்த மரம் இருபத்து நான்கு மனிநேரமும் செயல்படும் ஒரு விடுதியாகவே மாறிவிட்டது. இதை தடுப்பது இனி இயலாத காரியம். பழகியதால் மீண்டும் மீண்டும் வர தான் செய்வார்கள். வெட்டுவது தான் இதற்கு சரியான முடிவு என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போது சதீஸ் அவள் வீட்டிற்கு வாடகை பணம் கொடுக்க வந்திருந்தான். அடுத்த மாதம் தான் வீடு காலி செய்ய போவதாகவும் அதற்கு காரணம் இரவில் அதிகம் வௌவால் தொல்லை இருப்பதால் அவன் குழந்தை பயப்படுகிறது என்றும், தினமும் இலை சருகுகளை பெருக்கி தன் மனைவிக்கும் முதுகு வழி வருகிறது என்றும், கீழே மரத்தின் ஓரம் நிறுத்தியிருக்கும் என் வண்டியை பறவைகளும், பிள்ளைகளும் படுத்தும் பாடு சொல்லி கொண்டே போகலாம் என்றும், புலம்பி விட்டு அந்த வாரத்திலே வீட்டு சாவியை ஒப்படைத்து விட்டு ஓடி விட்டான். அலுவலகம் அருகிலே இருப்பதனால் எங்கும் தூரம் செல்லாமல் அந்த மரத்திற்கு பின்புறம் இருக்கும் ஒரு தனி கட்டிட வீட்டிற்கு சதீஷ் இடம் பெய்ர்ந்தான். வானதி அம்மாளும் இந்த நேரத்தில் மரத்தை வெட்டினால் வீட்டிற்கு திரும்பவும் யாரும் வருகை தர மாட்டார்கள் என பயந்து வெட்டும் முயற்சியை கைவிட்டு முடிந்த வரை அந்த மரத்திற்கு அருகில் வருவோர்களை விரட்டி கொண்டு இருந்தாள். வானதி அம்மாளின் இந்த செய்கையால் அந்த தெரு மக்கள் பூ காய் கனி பறிப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் இயலாமல் போய் விட்டது. மிட்டாய் கடை தாத்தா அவர் வீட்டிலே முடங்கி கொண்டார். சிறுவர்களும் விளையாட வேறு இடம் பார்த்து சென்றார்கள். பறவைகளும் வருகையை குறைத்து கொண்டது.

இப்படியே சில மாதங்கள் ஓடின. அந்த மரமும் செழித்து வளர்ந்து இன்னும் கிழை விட்டு பெரிதாய் நின்றது. ஒரு நாள் எதிர் வீட்டில் பாம்பு புகுந்து விட்டது. இந்த மரம் இருப்பதால் தான் பாம்பு வந்து தஞ்சம் புகுகிறது என்று அந்த வீட்டுகாரர் வானதி அம்மாளிடம் புகார் செய்தார். இன்னொருவர் அதன் கிளை வளர்ந்து என் வீட்டை மோதிக் கொண்டு இருக்கிறது என்றார். வேறொருவர் குரங்கு தொல்லை வருகிறது இது வீடா இல்ல காடா என்று கத்தினார். மற்றொருவர் நடுஇரவில் மரத்தை சுற்றி பேய் நடமாடுவதாக புரளி பேசினார். தெரு மக்களும் இப்போது அந்த மரம் தங்களுக்கு பயனளிக்க வில்லை என்பதனால் அதை அகற்ற சொல்லி வானதி அம்மாளுக்கு எச்சரிக்கை விட்டனர். இவர்களே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சதீஷ் புகார் இருந்தது. அது என்னவெனில், மரத்தின் தொல்லை தாங்க முடியாமல் தான், நான் வீடு காலி செய்து விட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பின்பும் இந்த மரம் என்னை விடவில்லை. அது வளர்ந்து இலை சருகுகள், காய்ந்த பூக்கள், ஒடிந்த கிளைகளை எல்லாம் புதிதாக வந்த வீட்டிலும் கொட்டி கொண்டு தான் இருக்கிறது சீக்கிரம் மரத்தை வெட்டுங்கள் என்று கடிந்தான். வானதி அம்மாளிற்கு சதீஷ் பேசுவதை கேட்டு இன்னும் கோபம் அதிகமானது. "பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு தங்க தஞ்சம் கொடுத்தவள்" என்று கூற பாராமல் என்னையே ஏளனமாக பேசுகிறானே! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள். யார் என்ன சொன்னாலும் மரத்தை வெட்ட போவதில்லை என்ற முடிவும் எடுத்தாள். இவள் இப்படியொரு முடிவெடுக்க அந்த மரத்தை அவள் ஊட்டி வளர்த்த அன்பினாள் இல்லை, மரத்தை வெட்டி விட்டால் வேறு யாரும் அந்த வீட்டிற்கு வர மாட்டார்கள் என்பதால் தான். அன்று இப்படி தொடங்கபட்ட பிரச்சினை தான், இன்று வரையில் வானதி அம்மாளுக்கும் சதீஸிற்கும் பல சண்டை பிரச்சினைகள் அந்த மரத்தை காரணம் காட்டி இருந்து வருகிறது. அக்கம்‌பக்கதினரும் அவ்வப்போது மரத்தை அகற்ற சொல்லி புகார் தெரிவிப்பார்கள்.

நான் இந்த தெருவிற்கு வந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. ஆனால் தினமும் காலை இலை பறந்து வந்தது, கிளை முறிந்து விழுந்தது என்று இந்த பிரச்சினை தான் நடக்கும். எல்லோரும் மரத்தையே குறை கூறுவார்கள் இவர்கள் மனதில் குறையை வைத்துக் கொண்டு. வானதி அம்மாள் இல்லாத நேரம் பார்த்து ஒரு நாள் அந்திசாயும் மாலை நேரத்தில் நான் அந்த மரத்திற்கு அருகில் சென்றிருந்தேன். சிலுசிலுவென காற்று வீசி கொண்டிருந்தது. அப்படியே அந்த மரத்தின் மடியில் என் தலையை சாய்த்து வானத்தை அயர்ந்து பார்த்தேன். மரத்தில் இருந்த பூக்களை சுற்றி வண்ணத்து பூச்சிகள் அழகழகாய் வட்டமிட்டு கொண்டு இருந்தது. அதற்கு பின்னால் வானில் சில வென்னிற மேகங்கள் அங்கும் இங்குமாக தாவி தவிழ்ந்து கொண்டிருந்தது எனக்கு அது ஒரு வண்ண வானவில் போன்று காட்சி அளித்தது. தென்றல் காற்று என் தலையை கோத, குயில்கள் கூவும் ஓசை, தாலாட்டு கேட்பது போல் இயற்கையின் மோகம், என்னை மயக்கியது. காற்றில் மேலே இருந்து பூக்கள் உதிர்ந்து என்மேல் விழுந்தது. சற்று நேரம் இளைப்பாறி விட்டு எழுந்து அந்த மரத்தை கட்டி அனைத்து கொண்டேன். வெளியே சென்ற வானதி அம்மாள் வீடு திரும்பும்முன் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று அந்த மரத்திற்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். ஆம் நான் அந்த மரத்தை காதலிக்கிறேன்.

பிறகு ஒரு நாள் என் தெரு பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவுன்சிலரை சந்தித்து அந்த மரத்தை அகற்ற அங்கிருந்து அகற்ற சொல்லி கோரிக்கை இட்டனர். கவுன்சிலரும் அரசாங்க உதவியுடன் பொதுமக்களுக்கு பிரச்சினையும், துயரத்தையும் தந்து வருகிற அந்த மரத்தை நீக்க உத்தரவு இட்டார். வானதி அம்மாளும் அரசாங்க கட்டளைக்கு பனிந்து மரத்தை வெட்ட சரி சொன்னவுடன், ஒருநாள் அந்த மரத்தை வெட்டுவதற்கு ஊழியர்கள் வந்தார்கள். மரத்தை வெட்ட துனிந்த போது மரத்தின் முன் நின்று அவர்களை தடுத்தேன். மரத்தை வெட்ட துணிந்தவர்கள் என்னை வெட்ட மறுத்து விட்டார்கள். என்னை பொறுத்த வரையில் மரமும் உயிர் தான். என்னை கொன்று விட்டு இந்த மரத்தை கொள்ளுங்கள் என்று வெட்ட வந்தவர்களை வெட்ட விடாமலும், தெரு பொதுமக்களுக்கும் எதிராக நான் ஒருவன் மட்டுமே போராடினேன். இந்த மரத்தால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை என்னிடம் சொல்லுங்கள் அது இனிமேல் நடக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் அப்படி என்னால் முடிய வில்லை எனில் இந்த ஊரை விட்டு நான் கிளம்பி விடுகிறேன். பிறகு இந்த மரத்தை வெட்டி விடுங்கள் என்று ஒரு பந்தயம் கட்டி அவர்களை இரவு பகல் பாராமல் காத்து வந்தேன். தினமும் தெருவை சுத்த படுத்திய சுகத்தையும் அனுபவித்தேன். குப்பை வண்டிக்காரர் அவருக்கு பயனுள்ளவனாக இருக்கிறேன் என்று என்னை பாராட்டினார். புயலால் ஒரு நாள் பலத்த காற்று வீசியது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பலத்த காற்று வீசியதால் எட்டுதிக்கும் மரத்தின் கிளைகள் பறந்தன. காய் கனிகள் விழுந்து புரண்டு நசுங்கி தெருவே சேராய் இருந்தது. மரத்தின் பெரிய கிழை முறிந்து விழுந்து ஒரு கார் கண்ணாடி கூட சுக்குநூறாக உடைந்து விட்டது. மின் கம்பிகளும் அறுந்து மரத்தில் சுற்றி சிக்கிக் கொண்டது. எனக்கு இப்பவுமே அந்த மரத்தின் மீது கோபம் வரவில்லை. இவர்களை யார் மரத்தை சுற்றி வீடு கட்ட சொன்னது. வீடுகளுக்கு நடுவில் மரம்‌ வளர்க்க சொன்னது. இவர்கள் இஷ்டத்துக்கு ஒரு உயிரை மன்னில் விதைப்பார்கள் அது வேண்டாம் என்றால் விஷம் என அதே மன்னில் வீழ்ப்பார்களா? நான் அன்று இரவே அந்த ஊரை விட்டு புறப்பட முடிவு செய்தேன். எப்படியும் மறுநாள் காலை எழுந்தவுடன் மரத்தை வெட்ட போகிறார்கள் வெட்டும் முன்னே இதை படிக்கட்டும். புத்தி வந்தால் மரத்தை காக்கட்டும் என்று ஒரு காகிதத்தில் என் எண்ணங்களை எழுதி அந்த மரத்தின் கிளை ஒன்றில் தொங்க விட்டு கிளம்பி விட்டேன்.

மறுநாள் எல்லோரும் அந்த மரத்தின் முன்பு ஒன்று கூடி அந்த மரத்தை வெட்ட ஒருமனதாக முடிவு செய்தார்கள். தொங்கும் காகிதத்தை எடுத்து ஒரு சிறுவன் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி படித்தான். ஒரு மரம் ஒரு வீட்டிற்கோ, தெருவிற்கோ மட்டும் அடையாளம் அல்ல. ஒரு வம்சத்திற்கே அது தான் அடையாளம். மரத்தை வெட்ட வெறியுடன் நிற்கும் நீங்கள் அது விதையில் இருந்து மரமாக வளர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் என்று நினைத்து பாருங்கள். மரத்தை விடுங்கள் இது ஒரு உயிர் தான். ஆனால் இதை வெட்டினால் இதில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நிலைமை? நாம் நமக்கு நெருக்கமான ஒருவரை சந்திக்க வெகுதூரம் கடந்து அவரை காண செல்லும் போது அவர் இறந்த விட்டார் என்ற செய்தி வந்தால் எப்படி இருக்கும், அப்படி தானே இந்த மரத்தை தேடி வரும் பூச்சிகளும் பறவைகளும் இது இறந்தபின்பு துடிதுடித்து போகும். எத்தனை பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருக்கிறதோ... இதை கொள்ள துடிக்கும் உங்கள் கண்களுக்கு இது உங்களுக்காக செய்து கொண்டிருக்கும் உதவிகள் ஒன்று கூடவா தென்படவில்லை. உங்களுக்கும் தானே நிழல் கொடுத்து உதவியது. இதே இந்த மர வகைகள் இந்த சாதியினரை சேர்ந்தது என்று மரத்திலும் சாதி பிரித்து வைத்திருந்தால் இந்த மரத்தை சாக விடாமல் காப்பற்ற ஒரு குலமாவது முன் நின்று காத்திருக்கும். எல்லோருக்கும் சமமாக இருந்து இப்போது பயனில்லாமல் போனதால் தானே எல்லோரும் சேர்ந்து இந்த மரத்தை கொல்ல துடிகிறீர்கள். தனிமரம் தோப்பாக்காது தான். ஆனால் ஒரு மரம் இத்தனை உயிர்களை காத்து வருகிறது என்றால் இதுவும் ஒரு தோப்பு தான். மரமும் மனிதனை போல் சுவாசிக்கும் சக உயிர் தான். மனிதனை கொன்றால் மட்டும் சட்டம் என்பீர். மரத்தை கொன்றால் சலுகை என்பீரா? தேவை இருக்கும் வரையில் தான் மரம் உங்களுக்கு தேவை படுகிறது. தேவை முடிந்தவுடன் அது உங்களுக்கு தேளாய் கொட்டுகிறது. மரத்தையும் ஒரு உயிராக நேசியுங்கள். அது என்றும் உங்களுக்கு உதவுமே தவிர துரோகம் செய்யாது. இதே உலகில் மரத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்களும் உள்ளனர். மர சாமான்களை கொண்டு சமைத்து வாழ்பவர்களும் கூட இருக்கிறார்கள். கொட்டும் இலை சருகுகள், உதிரும் பூக்களை அழகாய் கொண்டாடும் நாடுகளும் இந்த உலகத்தில் தான் இருக்கிறது. நீங்கள் தான் எந்த வேற்று கிரக வாசிகள் என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு தாய் தந்தை இல்லை. இந்த இயற்கை தான் எனக்கிருக்கும் ஒரே உறவு. இந்த உலகில் நான் தனிமரமே, இந்த மரமும் இப்போது தனிமரமாக தான் தவித்து கொண்டு இருக்கிறது யார் உதவியும் இன்றி. எனவே நாங்கள் சொந்தம் ஆகினோம். இனி இந்த மரத்தின் மீது கைவைத்தால் கேட்க ஆளில்லை என்று நினைக்காதீர்கள். நான் இருக்கிறேன். அந்த மரம் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். நான் நீங்கள் போட்ட பந்தயத்தில் தோற்றதால் தான் இங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னால் இந்த மரத்தை இங்கிருந்து நகர்த்தி என்னுடனே அழைத்து செல்ல எனக்கு சக்தி இல்லாததால் தான் இங்கே விட்டுவிட்டு கிளம்பினேன். இன்று இந்த மரம் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது. நாளை நீங்கள் உயிருக்கு போராட வேண்டி இருக்கும். மரம் இல்லை எனில் மனிதன் இல்லை என்ற உண்மை மரம் இல்லாத போது தான் நீங்கள் உணர்வீர்கள். என் முகவரியையும் கீழே எழுதி உள்ளேன். நீங்கள் இந்த மரத்தை வெட்டிய பிறகு இந்த முகவரிக்கு மர துண்டுகளை அனுப்பி வையுங்கள். அதை கொண்டு என் பினத்தை எரிக்கட்டுமே. எங்களுக்கு உதவாத இந்த சுய உலகத்தை விட்டுவிட்டு ஒன்றாக நாங்கள் இருவரும் காற்றில் கலந்து விடுவோம். பொது நலத்திற்காக மரத்தை நடமால் சுய நலத்திற்காக மரத்தை நடும் இந்த மனிதர்களும் இந்த சமூகமும் விரைவில் அழியக் கூடும். நீங்கள் மரத்தை நடக்கூட வேண்டாம். நிலைத்து நிற்கும் மரங்களை காத்து வாருங்கள் அதுவே போதும்.

நீங்கள் மரங்களை வாழ வைத்தால்,
மரங்கள் உங்களை வாழ வைக்கும்.

🪵 நன்றி,
✍️ முத்து.

எழுதியவர் : (2-Jan-22, 11:47 pm)
சேர்த்தது : முத்து
Tanglish : thanimaram
பார்வை : 616

மேலே