சாமிநாதனின் சங்கடம்

சாமிநாதனின் சங்கடம்

சாமிநாதா இங்கே வா இந்த பேப்பரை எடுத்துட்டு போயி வசந்தியம்மா டேபிள்ல வச்சுடு, சொன்ன பாலகிருஷ்ணனுக்கு வயது இருபத்தி எட்டுக்குள்தான் இருக்கும். சாமிநாதனுக்கு வயது நாற்பத்தி ஐந்துக்கு மேல் இருக்கும். கொடுங்க சார் பவயமுடன் வாங்கிக்கொண்டு வசந்தியம்மாளின் டேபிளில் வைத்து விட்டு பாலகிருஷ்ணன் சார் வைக்க சொன்னாரு, ஓ ! இந்த வேலைஅயை அவர் பாக்க மாட்டாராமா ? சாமிநாதன் இந்த பேப்பரை அவர் டேபிளிலே வச்சுட்டு நீங்களே இதை “டீல்” பண்ணிக்குங்க, அப்படீன்னு சொல்லிடுங்க.சொல்லிவிட்டு அவள் எழுதுவது போல பாவனையுடன் தலையை குனிந்து கொண்டாள்.
சாமிநாதனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.. அவனுக்கு ஆயிரம் வேலை, அதில் இவர்கள் கணவன் மனைவிதான் என்றாலும் இருவரின் ஊடலுக்கு இவன் அங்கும் இங்குமாக அல்லாட வேண்டும். இவர்கள் சண்டையை மற்றவர்கள் முன்னால் காட்ட வேண்டுமா ? மனதுக்குள் நினைத்தாலும் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு பாலகிருஷ்ணனிடமே கொண்டு வந்து கொடுத்தான். அவங்க உங்களையே பார்க்க சொல்லிட்டாங்க. சொல்லிவிட்டு சட்டென அந்த இட்த்தை விட்டு நகர்ந்து விட்டான்.
நல்ல வேளை பாலகிருஷ்ணன் என்ன நினைத்தானோ சிறிது யோசித்தவன் அவனே எழுந்து போய் அவளிடம் ஏதோ பேசுவது தெரிந்தது. அதற்கு அவள் மறுப்பு தெரிவிப்பது புரிந்தது. ஐந்து நிமிடங்களில் இருவரும் சிரித்து பேசிக் கொண்டு வெளியேறுவது இங்கிருந்து பார்க்கும் போது சாமிநாதனுக்கு தெரிந்தது. பெருமூச்சு விட்டான் சாமிநாதன், கூடவே சலிப்புடன் “ச்சு” கொட்டினான். இவர்கள் பணிக்கு வருவதும் ஒன்றுதான், சொந்த வேலை பார்ப்பதும் ஒன்றுதான். அலுவலக நேரத்தில் சொந்த வேலை பார்ப்பார்கள், சொந்த வேலை பார்க்கும் நேரத்தில் அலுவலக வேலையை தூக்கி வைத்துக்கொள்வார்கள்.. காலை முதல் மாலை வரை இவனைப்போல ஓடிக்கொண்டே இருப்பவர்களை “கிளார்க்குகள்” மற்றும் “அதிகாரிகள்”, அலுவலகத்தில் அந்த நேரத்தில் டேபிளில் உட்கார்ந்து வேலை பார்க்காமல், தன்னுடைய சொந்த வேலைகளை மானேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு செய்து விடுவார்கள். அதன் பின் மாலை ஆறு மணிக்கு மேல் உட்கார்ந்து இரவு நெடு நேரம் செய்வார்கள். இவர்கள் வேலை செய்வதால் சாமிநாதனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை ஆனால் அவனையும் அந்நேரம் வரை இருக்க வைத்து விடுவார்கள். இதனால் இவனுக்கு வீட்டிலும் நிம்மதி இல்லாமல் போய் விடுகிறது.
ஏதோ அலமேலு இவனை அவ்வப் போது கடிந்து கொண்டாலும் குடும்பத்தை சமாளித்து ஓட்டிக் கொண்டிருக்கிறாள். இல்லாவிட்டால் இந்த அலுவலகத்தில் அவனால் குப்பை கொட்ட முடியாது என் அவ்வப் பொழுது நினைத்துக்கொள்வான். பையனுக்கு பனிரெண்டாவதுக்கு மேல் படிக்க விருப்பமில்லை. அப்படியே அவனை விடவும் முடியாமல் ஒரு தொழில் கல்வியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் போராடி படிக்க வைத்து விட்டான்.அவனும் எப்படியோ முடித்து இப்பொழுது ஒரு “வொர்க்ஷாப்பில்” மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்து விட்டான். சிறியவள் காலேஜுக்கு போய் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கலயாணத்தை முடித்து விட்டால் தனக்கு ஒரு பெரிய பாரம் குறையும் என நினைத்துக் கொண்டான்.
என்னய்யா அதிசயமா இருக்கு ! இன்னைக்கு ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திட்ட? சொல்லிக் கொண்டே அவன் கையில் இருந்த சாப்பாட்டு பையை வாங்கிக் கொண்ட அலமேலு கால் கையை கழுவிட்டு வா காப்பி தாறேன், என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். அலுப்புடன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்த சாமிநாதன் காப்பி குடித்து விட்டே கை கால் கழுவ போகலாம் என முடிவு செய்து கொண்டான். காப்பி எடுத்து வந்த அலமேலு இவன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவள் அவன் நிலைமையை யூகித்துக் கொண்டு சர் சரி முதல்ல காப்பியை குடி சொல்லி அவனிடம் கொடுத்து விட்டு சமையலறைக்குள் சென்றாள். அதை வாங்கி குடித்தவுடன் தான் கொஞ்சம் தெம்பு வந்த்து போல் இருந்தது
இரவு எட்டு மணி இருக்கும், அப்படியே அலுப்புடன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த சாமிநாதனிடம் அவன் மகன் மெல்ல நெருங்கி ‘அப்பா’ என்று அழைத்தான். அலுப்பில் பாதி தூக்கத்தில் இருந்த சாமிநாதன் மெல்ல கண் விழித்து இவனை பார்க்க அப்பா உங்கிட்ட ஒண்ணூ சொன்னா கோபிச்சுக்க மாட்டீயே ? சொன்னவனை வியப்புடன் பார்த்த சாமிநாதன் சொல்றா எனக்கென்னப்படா கோபம் வந்திருக்கு ? சும்மா சொல்லு, அவனை மெல்ல தூண்டினார். இல்லே நானு..நானு. இழுக்க… சொல்றா நீ என்ன பண்ணூனே அதை சொல்லு,. இவர் வேடிக்கையாக கேட்பது போல கேட்டாலும் மனதுக்குள் ஒரு பயம் வந்து ஓட்டியது.. இவன் என்ன குண்டை தூக்கி போடப்போறானோ? என்று..
நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், நீ என்ன சொல்வியோன்னுதான் பயமாயிருக்கு, சொன்னவனை ஆயாசமாய் பார்த்தான் சாமிநாதன், இவனுக்கு இருபத்தி ஐந்து இருக்குமா? அதற்குள் காதல் என்று நினைத்தவன், இருபத்தை ஐந்து வயது சரியான வயதுதானே, மனதுக்குள் சொல்லிக்கொண்டு உன்னோட தங்கச்சி ஒண்ணு இருக்கு ஞாபகம் இருக்கா? அதுக்கு முதல்ல முடிச்சுட்டு அப்புறம் பார்ப்போம், சொல்லிவிட்டு எழப்போனான். அப்பா அதுக்கில்ல, தங்கச்சிக்கு பார்த்த பின்னாலதான் நம்ம கல்யாணம் அப்படீன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டோம். நான் கேக்க வந்தது அதுவல்ல, என்று இழுத்தான். வேற என்னடா ? அவனை பார்க்க அப்பா கோபிச்சுக்காதே, அவ உன் ஆபிசுலதான் வேலை பாக்க்குறா. நீ அங்க பியூனா வேலை செய்யறது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்காம். அதுவும் போறவங்க வர்றவங்க எல்லாம் உன்னை பேர் சொல்லி கூப்பிட்டு வேலை வாங்கறது அவளுக்கு ரொம்ப சங்கடமா இருக்காம். சொல்லிவிட்டு மெல்ல இவன் முகத்தை பார்த்தான்.
இவனுக்கு ஒரே ஆச்சயமாகி விட்டது, அது யார் நம்ம ஆபிசில் ? நான்கைந்து கல்யாண வயதுடைய பெண்கள் வேலை செய்வது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பெயர்களை நினைவு படுத்த ஆரம்பித்தவன் அலுப்புடன் அதெல்லாம் நமக்கு எதற்கு ? என்ற முடிவுடன் ஏண்டா நான் என்னுடைய வேலை செய்யறதுல அவளுக்கு என்ன அவமானம்? ஓ இவர்தான் என்னோட மாமனார் அப்ப்டீன்னு சொன்னா கேவலமா இருக்காமா ? அப்பா அப்படியெல்லாம் நினைக்காதப்பா. அவளும் அப்படி நினைக்கல. இருந்தாலும் ஆபிசு விசய்மா இருந்தாலும் அவளும் உன்னை கூப்பிட்டு வேலை சொல்லணும்ல, அதுக்குத்தான் தயங்குறா ! இது இவன் மனதுக்கு சரியென்றே பட்டது.
சரி நான் என்ன பண்ன்னும்னு சொல்லு ? இன்னும் பத்து வருசத்துக்கு சர்வீஸ் இருக்கு. இவளுக்கு பயந்துகிட்டு ரிட்டையர்டு ஆக முடியுமா? அப்புறம் உன் தங்கச்சி உங்கம்மா, நானு எப்படி சாப்பிடறது ? அப்பா உன்னை ரிட்டையர்டு ஆக சொல்ல்லை , பக்கத்து ஆபிசு எங்கியாவது “ ட்ரான்ஸ்பர் “ வாங்கிக்க, அப்படீன்னுதான் சொல்றேன். ஏண்டா எங்கே ட்ரான்ஸ்பர் வாங்கினாலும் என்னோட தொழில் மறையப்போறதில்லை, அப்புறம் என்னடா ? மகன் அலுப்புடன் அப்பா கொஞ்சம் புரிஞ்சுக்கப்பா, சொன்னவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
மறு நாள் சாமிநாதன் வேலைக்கு சென்றதும் முதல் கல்யாண வயதுடைய பெண்கள் யார் கூப்பிட்டு இவனிடம் வேலை சொன்னாலும் இவளாய் இருக்குமோ? இவளாய் இருக்குமோ? என்று மண்டையை உடைத்துக்கொண்டான். இரண்டு நாட்கள் இப்படியே மண்டையை உடைத்துக் கொண்டவன் இறுதியாக முடிவு செய்து மானேஜரை பார்த்தான்.
இவன் கொடுத்த விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்த மானேஜர் வியப்புடன் என்னய்யா திருப்பூருக்கு ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கே ? ஏன் சார் திருப்பூர் நல்ல ஊர் இல்லியா? அப்பாவியாய் கேட்ட சாமிநாதனை அன்புடன் பார்த்த மானேஜர் இல்லையா நம்ம மீனா ஸ்டாப்பும் இப்பத்தான் எனக்கு திருப்பூருக்கு மாற்றல் கொடுங்க சார் அப்படீன்னு ரொம்ப கெஞ்சி கேட்டுச்சு. இப்ப நீயும் அதே ஊருக்கு கேக்கறியா, அதுதான் கேட்டேன் அவர் சொல்லி முடிக்கவும் இவனுக்கு மீனா என்ற பெண்ணின் உருவம் மனதுக்குள் வந்தது. ஓ! அந்த சுருள் முடி சாமிநாதன் சார் அன்புடன் கூப்பிட்டு பேசுவது, களையான முகம் புரிந்து விட்டது,
சார் தயவு செய்து அந்த “ மீனா ஸ்டாப்புக்கு “ ட்ரான்ஸ்பர் கொடுத்துடாதீங்க, எனக்கு வேணா கொடுத்திடுங்க சார். அந்த பொண்ணுக்கு வயசான அம்மா இங்கிருக்காங்க சார், அதை விட்டுட்டு திருப்பூருக்கு தினமும் போய்ட்டு வரமுடியாது சார். அதனால் எனக்கு ட்ரான்ஸ்பர் திருப்பூருக்கு கொடுத்துடுங்க சார் மூச்சு விடாமல் பெசிய சாமிநாதனை ஏதும் புரியாமல் வியப்புடன் பார்த்தார் மானேஜர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Jan-22, 12:20 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 108

மேலே