காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 5

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 5

பாகம் ஐந்து
============

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை. அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி மிக மகிழ்ச்சியான நினைவுகளோடு தொடர்கிறது அவர்களது பயணம். அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடவார கிராமம் 'வனமேடு' அடைந்தனர். அங்கு அவர்களுக்கான வீடு பார்க்கும் படலம் ஆரம்பமானது. வீடு கிடைத்ததா? காட்டுக்குள் சென்றார்களா? வாருங்கள் பார்க்கலாம்)

"ஒன்னு ரெண்டு வீடு இருக்கு.. நான் அவங்ககிட்ட போன்ல பேசிடறேன்.. அப்பறம் எம் பொண்ணு உங்கள அங்கப்போய் விட்டுடுவா... சரிங்களா?"

"சரிங்க", என மேகலா சொல்ல..

அப்பெண்ணின் அம்மா செல்போனில் யாருக்கோ ரிங் செய்து பேச ஆரம்பித்தாள்.

மூவரும் அவளது முக ஓட்டத்தினை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். அவ்விளம்பெண் தனது பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து அதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

புன்னகைத்த படியே போனை வைத்த அந்த அம்மா...

"பிருந்தா", எனக் கூப்பிட..

"சொல்லும்மா..", என்ற படியே அந்த இளம்பெண் வந்தாள்.

"உங்க மாமா வீட்டுல போயி இவங்கள விட்டுட்டு வா"

இதைக்கேட்டதும் அவளுக்குள் ஒரு குதூகலச் சிரிப்பு வந்தது.

"நாந்தான் இங்க பிஸியா இருக்கேனே.. நீ போனா என்னம்மா?"

"என்னடி.. புதுசா பேசற? எப்பவுமே அங்க போறேன்.. அங்க போறேனு ஓடுறவ நீ.. ஒழுங்க போயி இவங்கள விட்டுட்டு வா.. அது வரைக்கும் நான் இங்க பார்த்துக்கறேன்."

"ம்.. நீ சொன்னா சரிம்மா.. வாங்க போகலாம்.. இங்க பக்கத்துல தான் வீடு இருக்கு"

"நடந்து போற தூரமா?"

"ஆமா... ரொம்ப பக்கம்.. நீங்க கார எடுத்துட்டு வாங்க.. நான் அப்படியே மொல்லமா முன்னாடி நடக்கறேன். ஒரு நாலு நிமிஷத்துல போயிடலாம்", எனச் சொன்ன பிருந்தா.. உடனே முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

மேகலா காரை எடுத்துக்கொண்டு அவளைப் பின் தொடர, இரண்டு மூன்று நிமிடங்களில் ஒரு சிறிய மாடிவீட்டை அடைந்தனர்.

அங்கே சென்றதும், "மாமா.. அத்தை", எனச் சத்தமிட்டுக் கூப்பிட்டாள் பிருந்தா.

ஆனால் வெளியே ஒரு இளைஞன் வந்தான்.

"என்ன பிருந்தா வெளியவே நின்னுட்டு கத்திட்டு இருக்கற.. அதுவும் இவ்ளோ காலைல.. அத்த விடமாட்டாங்களே..!", எனப் பேசியபடியே வந்தவன் வெளியே புதிதாய் நிற்கும் மூவரைக் கண்டதும் சட்டென அமைதியானான்.

"டே.. வருண்.. மாமா அத்தை இல்ல.."

"ம்.. ம்.. இருக்காங்களே..", என்ற படி.. "அப்பா.. அம்மா.. அப்பா அம்மா", என கத்த ஆரம்பித்தான்.

உள்ளேயிருந்து இருவர் வந்தனர்.

இவர்களையும் கவனித்த படியே வந்த அவர்கள் முகத்தில் அளவாய் புன்னகை.

இவர்களும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தனர்.

"ஏண்டா இப்படி கத்தற? ஓ பிருந்தாவா.. இப்பத்தான் தங்கச்சி போன் பண்ணுச்சு.. இந்தா மாடி போர்ஷன் சாவி.. நீயே இவங்கள கூட்டிட்டுப் போய் வீட்டக் காட்டிட்டு வா"

"சரி.. கொடுங்க மாமா", என பிருந்தா சாவியை வாங்கிக்கொள்ள மூவரும் அவளுடன் மேலே சென்றனர்.

இரண்டு நாளைக்கு முன்பு வரை யாரோ இருந்திருப்பார்கள் போல.. ஓரளவுக்கு சுத்தமாகவே இருந்தது. அடிப்படைத் தேவைக்குத் தேவையான பொருட்களும் வீட்டில் நிறைந்திருந்தது. மூவருக்கும் பார்த்ததுமே பிடித்து விட்டது. வாடகைக்காகவே கட்டப்பட்டது என்பது புரிந்தது. வீட்டைப்பார்த்தபடியே பிருந்தாவிடமும் பேச்சுக் கொடுத்தனர்.

"பிருந்தா.. உன் பேரே இவ்ளோ தானா?"

"இல்லக்கா... முழுப்பேரு பிருந்தாவனம்"

"ஓ.. சூப்பர்.. பிருந்தாவனம்.. அழகானப் பார்.. உங்க அப்பா என்ன பண்றார்..?"

"அப்பா இல்ல.. நான் சின்ன வயசா இருக்கும் போதே.. அம்மாவோட சண்ட போட்டுட்டு எங்கள விட்டுட்டு எங்கேயோ போயிட்டார்.."

"ஓ.. சோ.. சேட்.."

"உங்களுக்கு வீடு ஓகேவா..! நான் கெளம்பவா?"

"ம்.. ஓகே தான்.. தண்ணி வசதியெல்லாம் எப்படி?"

"எங்க ஊருல தண்ணிப்பிரச்சனையா அப்படீனா என்னனு கேப்பாங்க.. எப்பவுமே தண்ணி வரும்"

"ஆகா.. செம"

"சரி.. வா.. நாங்க கீழ வந்து வீட்ட வாடகைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லிடறோம்.. நீ உங்க கடைக்கு கெளம்பு..."

"சரிங்க அக்கா"

அவர்கள் கீழே வந்து.. வாசலில் நின்றிருந்தவர்களிடம் மீண்டும் ஒரு புன்னைகையை சிந்தி..

"ரொம்ப நல்லா இருக்குங்க வீடு.. ஒரு பத்து நாள் நாங்க தங்க வேண்டிவரும்..", என இவர்கள் தெரிவிக்க.. மற்ற வாடகை விபரங்கள் பேசப்பட.. பிருந்தா இவர்களிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றாள், அவளுடன் வருணும் சென்றான்.

பொருட்களை, பைகளை, சூட்கேஸை எடுத்துவந்து வீட்டில் செட்டில் ஆனவர்களுக்கு, அடுத்து உடனே காட்டு பகுதிக்குச் செல்ல ஆசை பிறந்தது. தயாராகிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்டது.

வெளியே பிருந்தா நின்றிருந்தாள். கையில் ஒரு பை. அதில பல டிபன் பாக்ஸ்கள். மணம் அப்படியே அள்ளியது.

"அக்கா.. இந்தாங்க.. பிரேக்பாஸ்ட்.. அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. லஞ்ச், டின்னர் கூட கொடுக்கறதா சொன்னாங்க.. இது நீங்க தங்கி இருக்கறவரைக்கும் கிடைக்கும்னும் சொன்னாங்க"

"வாவ்.. சூப்பர்.. ரொம்ப நன்றி சொன்னோம்னு சொல்லுமா"

"ம்.. சரிக்கா... சாப்பிட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க"

"கண்டிப்பா பிருந்தா.. வாசனையே அள்ளுதே.. நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க"

"நீங்களும் தான் ரொம்ப அன்பா பழகறீங்க"

"வனமேடா.. மனமேடா.. இல்ல மணமேடா.. ஆரம்பம் அசத்தலா இருக்கு... ரொம்ப பிடிச்சுப்போச்சு.. இந்த ஊரும்... நீங்க எல்லாரும்.. ஆமா.. அந்தப் பையன்.. அதான் உன் மாமா பையன் வருண் என்ன பண்றார்?"

"டிகிரி முடிச்சிட்டு.. இப்ப வீட்ல சும்மா தான் இருக்கான்.. அப்பப்ப வேலை தேடறதா பாவ்ளா பண்ணுவான்"

"ஓ.. சரி.. தேவைனா அந்த தம்பிய எங்க கூட காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போலாம்னு பார்க்கறோம்"

"கண்டிப்பா கூட்டிட்டுப் போங்க.. சும்மா வெட்டியாத்தான் இருக்கான்.. அவனுக்கும் காட்டுல சுத்தறதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம்.. ரொம்ப டைம் காலைலே காட்டுக்குள்ள கெளம்பி போயிட்டு சாயந்தரமா கூட வந்திருக்கான்.."

"அட.. அப்ப சரியான ஆள் தான் வருண்.. சரி பிருந்தா.. காட்டுத்தீ பத்தி எதாவது தெரியுமா?"

"அதப்பத்தி ஒன்னும் தெரியாதேக்கா"

"சரி... நீ கெளம்பு.. நாங்களும் சாப்பிட்டுட்டு கெளம்பறோம்..", என்றவர்கள் விறுவிறுவெனக் காலை உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்பி கீழே வந்தனர்.

வருண் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

"நான் உங்க கூட காட்டுக்குள்ள வர்ற ரெடி", என அவனாகவே சொன்னான்.

"ஓ.. பிருந்தா சொல்லிட்டாளா?"

"அப்ப.. சரி.. வாங்க போலாம்...", என அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

சரியான பாதை இல்லை.. கரடுமுரடான பாதையில் ஆரம்பமானது காட்டுத்தீயை எதிர்கொள்ளும் அவர்களது பயணம்.

அப்போது உடல் முழுதும் தீக்காயங்களுடன் ஒரு நரி.. அவர்கள் முன் மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தது.

வருண், திடுக்கிட்டுப் போனவனாய் நரியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு.. இந்த நரிக்கு.. யாரு இதுக்கு தீவச்சா?", என அவனாகவே கத்தினான்..

தர்ஷினி தன் கேமராவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தாள்.

ஷாலினி தன் குரலை சரிபடுத்திக்கொண்டு ரெடியானாள்.

மேகலா.. காரை மெதுவாக அங்கேயே நிறுத்தினாள்.

(தொடரும்)

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 10:51 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 58

மேலே