காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 4
காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 4
பாகம் நான்கு
==============
(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை.. அந்த பிரச்சனையால் தான் எத்தனை சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி மிக மகிழ்ச்சியான நினைவுகளோடு தொடர்கிறது அவர்களது பயணம். அடுத்து நடப்பது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)
"அப்பப்பா.. என்ன மாதிரியான மனிதர்கள்..! காரோட டயர் மட்டும் வெடிக்கலேனா இவ்ளோ சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பே இல்லாம போயிருக்கும்"
"ஆமாண்டி.. சின்னவன், பூங்காவனம், மயில்விழி...இவங்கள எல்லாம் மறக்க முடியுமா?"
"சின்னவன்.. ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தமேயில்ல.. அவரோட தோற்றத்துக்கும் பண்புக்கும் தொடர்பே இல்ல.. பூங்காவனம்.. ஒரு தெய்வீகமான உருவம். அவங்க சமையல்.. அடடா... டாப் நோட்ச்... திரும்பி வரும் போது ஒரு பிடிபிடிக்கணும்.. மயில்.. குயீட்டான குட்டிப்பாப்பா.. அப்படியே அன்பு மழைல நம்ம நனைச்சிட்டா.."
"அருமையான குடும்பம்.. அற்புதமான பண்பு.. அறிவான செயல்பாடுகள்.. அப்பறம் அவங்க வீட்டுல இருந்த புத்தகங்கள்.. அட அட.. இந்தக்காலத்திலேயும் இப்படி படிக்கறவங்க இருக்காங்களானு எண்ணிப்பார்க்கத் தோணுது.. நீ படிச்சிருக்கியாடி.. பொன்னியின் செல்வன்.. வேள்பாரி நாவல்கள்.."
"பொன்னியின் செல்வன் ரொம்ப முன்னாடி படிச்சது.. ஆகா என்ன ஒரு மொழிவளம்.. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கூட்டிட்டுப் போயிடுவார் கல்கி.. அதுல வர்ற கேரக்டர்கள் ஒவ்வொன்னும் அடடா.. அடடா... தான் போ.."
"ஆமா.. இப்பக்கூட மணிரத்னம் அத படமா எடுத்திட்டு இருக்கார்"
"படம் நல்லா பிரமாண்டமா பாகுபலி மாதிரி இருக்கணும்.. இங்க மட்டுமில்லாம இந்தியா முழுதும் நல்லா ஓடணும்.. இன்னும் உலக லெவல்லேயும் ஜெயிச்சா.. நம்ம தமிழர் பெருமை இன்னும் நல்லா எல்லாப்பக்கமும் பரவும். எப்படி படம் எடுக்கணும்னு சொல்லித்தரவே வேண்டாம்.. தெரியும்.. ரொம்ப நல்லாவேத் தெரியும் அவருக்கு.. நிச்சயமா படம் கலக்கும்னு நம்பலாம்..."
"ம்.. கலக்கினா சரிதான்.. இந்த வேள்பாரி நாவல்.. யாருடி படிச்சிருக்கீங்க? ஆனந்த விகடன்ல 100 வாரத்துக்கு மேல தொடரா வந்துச்சு.. இப்ப மதுரை பாராளுமன்ற உறுப்பினரா இருக்கற எழுத்தாளர் உயர்திரு.. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதினது"
"நான் படிச்சிருக்கேன்டி.. அப்பப்பா.. என்ன ஒரு எழுத்து நடை.. எத்தனை எத்தனை அறிய செய்திகள்.. எத்தனை எத்தனை அதிசய விலங்குகள், பறவைகள், தாவரங்கள். எத்தனை வித்தியாசமான மனிதர்கள்னு நாவல் முழுதும் நாம எண்ணிப்பார்க்க முடியாத வர்ணனைகள், விபரங்கள்.. பல ஆதிகால தமிழ் இனங்கள் பற்றிய தகவல்கள், அவர்களுடைய கதைகள்னு.. சும்மா கலக்கு கலக்குனு கலக்கியிருப்பார்.. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்..", என மேகலா சொல்ல...
"ம்.. சூப்பர்.. இந்த புரஜக்ட் முடிச்சிட்டு.. திரும்ப போனவுடனே நான் படிக்க முயற்சிக்கிறேன்..", என ஷாலினி சொன்ன வேளை.. அவளது செல்போன்.. "தூரிகா'வை அழைக்க ஆரம்பித்தது.
"ஹே... விழும் இதயம் ஏந்திப்பிடி
ஹே.. அதில் கனவை அள்ளிக்குடி
ஹே.. குறுஞ்சிறகு கோடி விரி
வா.. என் இதழில் ஏறிச் சிரி
கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா.. என் தூரிகா.."
சென்ற தடவை மாதிரியில்லாமல் இம்முறை முழுதும் பாடலை ஒலிக்க விட்டே அட்டன்ட் செய்தால் ஷாலினி.
"குட்மார்னிங் மேம்"
"குட்மார்னிங் ஷாலினி.. பயணம் எப்படி இருக்கு? ஸ்பாட்டுக்கு போயிட்டீங்களா?"
"பயணம் தொடருது மேடம்.. ஆனா நேற்றிரவு ஒரு சம்பவம்"
"என்ன சம்பவமா?"
"ஆமா மேடம்.. ஆனாலும் அது ஒரு ஸ்வீட் சம்பவம்.. வந்தவுடன அதப்பத்தி விரிவாச் சொல்றோம்.. இப்ப பக்கத்துல வந்துட்டோம் மேம்.. இன்னும் பத்து கிலோ மீட்டர்ல மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்துக்கு போயிடுவோம்.. அங்க போயிட்டு கொஞ்சம் செட்டில் ஆகிட்டு உங்களுக்குப் போன் பண்றோம் மேம்.."
"ஓகே.. ஷாலினி.. உங்களோட வாட்ஸ் அப்புக்கு என்னோட காலேஜ் ப்ரண்டோட போன் நம்பர அனுப்பியிருக்கேன்.. அவளே கால் பண்ணுவா.. இல்லேனா நீங்க கூட கால் பண்ணிப் பேசுங்க.. சரியா.. இன்னிக்கே ஒரு முக்கிய அப்டேட்ட எதிர்பார்க்கறேன்..."
"ஷ்யூர் மேம்.. அங்க போனவுடனே பரபரப்பா இயங்கி.. உங்களுக்கு நைஸ் அப்டேட் சீக்கிரமா அனுப்பி வைக்கறோம்"
"குட்.. சரி நான் அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்திருப்பேன். பாதுகாப்பா செயல்படுங்க.. கலக்குங்க.. இப்ப போன வைக்கறேன்"
"எஸ் மேம்... தேங்க்யூ..."
ஷாலினி போனை வைத்த வேளை.. குளுகுளு காற்றுடன் தலையை அசைத்து சாலையோர மரங்கள் இவர்களை வரவேற்றன.
அந்த கிராமம் 'வனமேடு'
அதிகமான வீடுகள் இல்லை.. ஊரின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று கடைகள் கண்ணில் பட்டன. அதில் ஒரு டீக்கடையைக் கண்டதும் அதன் முன் காரை நிறுத்தினாள் மேனகா.
மூவரும் இறங்கினர்.
மூவரையும் ஒருவித ஆச்சரியத்தோடு பார்த்தனர் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து அளவளாவியபடி டீ அருந்திக் கொண்டிருந்த ஊர் பெருசுகள்.
கடையில் டீ போட்டுக் கொண்டிருந்த இளம்பெண் இவர்கள் கண்ணில் பட்டாள்.
பார்த்ததும் திரும்பவும் பார்க்கவைக்கும் முகம். முகத்தில் எப்போதும் படர்ந்திருக்கும் புன்னகையென, அவளைக் கண்டதும் மூவருக்கும் 'அட' இங்க ஒரு 'மயில்விழி' என்பதாகவே தோன்றியது.
அவளும் இவர்களைக் கண்டதும் ஒரு புன்னகை பூத்தாள், கல்லாப்பெட்டியில் ஒரு அம்மா அமர்ந்திருந்தாள். அவளுக்கும் இவளின் முகச்சாடை.. இல்லையில்லை அந்த அம்மாவின் முகச்சாடையில் தான் இந்தப்பெண்.
"மூனு டீ கொடும்மா..", என மேகலா சொல்ல ஆர்வமாய் டீ போட ஆரம்பித்தாள் அப்பெண்.
இவர்களது மாடர்ன் டிரஸ்ஸையும், மாடர்ன் முகங்களையும் மேய்ந்தபடியே இருந்தது ஊராரின் கண்கள்.
'டீ' அற்புத சுவையுடன் இருந்தது. சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி போட்டிருந்தாள்.
டீ குடித்தபடியே அவளுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள் மேகலா.
"டீ.. செம சூப்பரா இருக்கு.. ஆகா ஆகா.. என்ன ஒரு சுவை"
"தேங்க்யூ அக்கா"
"இந்தக் கிராமத்துல நாங்க சில நாள் தங்க வந்திருக்கோம்"
"அப்படியா!?"
"எதாவது வீடு சில நாளுக்கு வாடகைக்கு கிடைக்குமா?"
தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.
அதற்கு முன்பே எழுந்து இவளிடத்தில் வந்திருந்தாள் அந்த அம்மா.
"என்ன.. இங்க தங்கப் போறீங்களா.. என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?"
டீக்கடைக்காரர்கள் போலவே இல்லை அவர்களது பேச்சு.. நன்றாகப் படித்தவர்களாக நடந்து கொண்டனர்.
"நாங்க ஒரு டி.வி. சேனல்ல இருந்து வந்திருக்கோம். இந்தக் காட்டுக்குள்ள சில வீடியோக்கள் எடுத்து சேனல்ல போடணும்.. அதான்"
"அப்படியா.. அடிக்கடி ரொம்ப பேரு இந்த மாதிரி எங்க கிராமத்துக்கு வந்து தங்கறது வழக்கம் தான்.. அதுக்காகவே ஊருக்குள்ள சிலர் நல்ல நல்ல வீடுகள கட்டி வச்சிருக்காங்க.. என்ன வாடகை மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்.. உங்களுக்குப் பரவாயில்லையா!"
"அதெல்லாம் பரவால்லேங்க"
"அப்பச் சரி.. பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல எல்லாம் பர்மிஷன் வாங்கிட்டீங்களா?"
"ம்... எங்க ஹெட் வாங்கியிருப்பாங்க" (சொல்லிவிட்டு மற்ற இருவரையும் பார்த்து மர்மமாய் புன்னகைத்தாள் மேனகா.. நிச்சயமாக வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது இவர்கள் மூவருக்குமே தெரியும்)
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி