காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 3
காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 3
பாகம் மூன்று
==============
(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை.. அதிலிருந்து வெளிவந்தார்களா.. இல்லை இன்னுமொரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்களா? அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)
ஒரு 500 அடி தூரம் சென்றதும் ஒரு குறுகலான சந்து வந்தது. அதற்குள் நுழைந்தான் அந்த அய்யனார் மீசை ஆசாமி.
இதுவரை பேசாமல் வந்தவன், இப்போது பேச ஆரம்பித்தான்.
"என்னங்க மேடம்.. மூனு பேரும் எதுவுமே பேசாம அமைதியா வர்றீங்க..! இப்படி ஒரு புது ஊர்ல.. ராத்திரி நேரத்துல அன்னிய தேசத்துக்காரனாட்டம் இருக்கற, இந்த மீசக்காரங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமேனு பயமா இருக்கா!"
"அப்படியெல்லாம் இல்லீங்க.. நீங்க உதவி செய்யத்தானே அழைச்சிட்டுப் போறீங்க.. இதெல்லாம் எங்களுக்குப் பழக்கந்தான்.. நாங்க அடிக்கடி ஊர் சுத்தற ஆளுங்க தான்... கராத்தே, தற்காப்புக்கலைனு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கோம்.. இல்லடி..", என மேகலா அவனுக்கு பதிலுரைத்தாள்.
"ஓகோ", என்பதாய் தலையாட்டியவன்.. "இதோ வந்துட்டோம்.. இந்த வீடு தான்", என்றான்.
"பூங்காவனம்.. பூங்காவனம்"
அன்பே உருவான ஒரு அமைதியான உருவம் கதவைத் திறந்தது. இவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டவளாய்..
"யாருங்க.. இவங்க.. ? இந்த நேரத்துல.."
"அடியே.. முதல்ல உள்ள வர வழிய விடு.. உனக்கு விளக்கமாச் சொல்றேன்"
அப்போது வீட்டுக்குள்ளிருந்த ஒரு இளம்பெண்.. இவர்களது மகளாக இருக்க வேண்டும். இவர்கள் முன் வந்தாள்.
"அம்மா.. யாரு வந்திருக்கா? யாரு இவங்க?"
"தெரியல மயில்... அப்பாத்தான் கூட்டிட்டு வந்தார்"
அவள் என்னவென்று விசாரிக்கும் முன் இவரே நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
"ஓ.. அப்படியா.. விஷயம்! ஒன்னும் பிரச்சனை இல்லேங்க.. இவர் கார சரி பண்ற வரைக்கும் நீங்க மூனு பேரும் இங்க தாராளமா ரெஸ்ட் எடுக்கலாம்", எனச் சொன்ன பூங்காவனம் இவர்கள் அமர சேர் எடுத்துவந்து போட்டாள்.
நன்றாக உலர்த்தப்பட்ட மூன்று துண்டுகளை எடுத்துவந்து இவர்கள் துடைத்துக்கொள்ள கொடுத்தாள் மயில்.
"என்னது நீ மயிலா..?"
"ஆமாங்கா.. மயில்விழி"
"ஆகா.. என்ன ஒரு பேர்! நீ என்ன மயில் பண்ற? எங்க உன் தோகை..? இந்த ராத்திரி நேரத்திலேயும் ஆடுமயிலாட்டம் இவ்ளோ ப்ரஷ்ஷா இருக்க?"
"ஏன்னா.. அவளுக்கு நாளைக்கு பர்த்டே..", என பூங்காவனம் சொல்ல..
"ஆமாக்கா. அதான் காரணம்.. நாளைக்கு எனக்கு 18 பொறக்குது. அதான் நைட்டு கேக் வெட்டி கொண்டாடலாம்னு இருக்கோம். சர்ப்ரைஸா மூனு அக்காங்க.. கெஸ்ட் ரோல் பண்ண வந்துட்டீங்க.. நான் செம ஹேப்பிக்கா..."
"வாவ்.. மயில்.. என் பேரு ஷாலினி.. எனக்கும் நாளைக்குத் தான் பர்த்டே தெரியுமா?"
"அப்படியாக்கா.. வாவ்.. வாவ்..", என்று கூறி மயில் ஷாலினியின் கையைப் பிடித்து குலுக்க...
"சரி பேசிட்டு இருங்க.. எதுவும் தப்பா நினைக்கலேனா.. நைட் சாப்பாடு இங்கேயே சாப்பிட்டிருங்க.. மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு.. நான் கூப்பிட்ட பசங்க ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க போல.. எனக்கு கால் பண்ணிட்டே இருக்கானுங்க.. சரி.. பூங்கா.. நான் போய் கார சரி பண்ணிட்டு வரேன்", எனச் சொல்லிவிட்டு அந்த அய்யனாரு மீசைக்காரர் கிளம்ப..
மயிலுடனும், பூங்காவுடனும் பேசியபடியே மூன்று பேரும் சகஜமாயினர்.
மயில் எழுந்து சென்று ஒரு போன் பேசிவிட்டு வந்து அமர்ந்தாள்.
இப்போது தான் வீட்டை மூவரும் பார்வையால் அலசினார்கள்.
அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் சரியாக வைக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த ஒரு ஷெல்ப்பில் நூறு, இருநூறு புத்தகங்கள் சரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன.
"வாவ்.. இவ்ளோ புத்தகம் வச்சிருக்கீங்க!""
"எல்லாம் அவரோட கலெக்சன் தான்.. வீட்டுக்கு வந்தார்னா எப்பவுமே படிப்பு தான். நல்லா படிப்பார்.. நல்லா எழுதுவார்.. தமிழ் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதான் இவ பேரு 'மயில்விழி'.. இப்ப இவளையும் பி.ஏ (தமிழ்) தான் சேர்த்து விட்டிருக்கார்"
"குட்.. குட்.. சூப்பருங்க.. 'பொன்னியின் செல்வன்' 'வேள்பாரி' எல்லாம் கூட வாங்கி வச்சிருக்காரே!"
"அதாங்க.. அவரு சம்பாதிக்கறதெல்லாம் இதுக்குத்தான் அப்படீனு சொல்லிட்டே இருப்பாரு.
"மயில்.. நீ கூட இந்த புத்தகமெல்லாம் படிப்பியா!?"
"நானும் படிப்பேன்கா.. அம்மாவும் படிப்பாங்க", என மயில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்டது.
கதவைத் திறக்கச் சென்ற பூங்காவனம், இரண்டு இளைஞிகளை அழைத்து வந்தாள்.
"ஹாய்.. மயில்..", என்ற படியே அவர்கள் வந்தனர்.
"ஹாய் தேவி.. ஹாய் கவிதா"
"அக்கா... இவங்க ரெண்டு பேரும் என்னோட குளோஸ் ப்ரண்ட்ஸ்.. பர்த்டே கொண்டாட வந்திருக்காங்க"
இதற்குள் தேவி தன் கையிலிருந்த கேக் பேக்கிங்கை அருகிலிருந்த டேபிள் மேல் வைத்தாள்.
"நாங்கதான் பர்த்டே கேக் வாங்கிட்டு வருவோம்னு ஒரே அடம். பக்கத்துல தான் வீடு", என மேலும் தொடர்ந்தது அவர்களுக்கான அறிமுகப் படலம்.
"தேவி.. கவிதா.. இவங்க மூனு பேரும் எங்களோட சர்ப்ரைஸ் கெஸ்ட்ஸ்"
"அதான் போன்லேயே சொன்னியேடி"
"சரி.. சரி.. அப்பா வர லேட்டாகும் போல.. இவங்க சீக்கிரமா வீட்டுக்கு வேற திரும்பி போகனும் இல்லையா! அதனால கேக்க இப்ப கட் பண்ணிடலாமா?"
"என்னம்மா... அப்பா இல்லாமலா? கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அப்பா வந்திடட்டும்"
"ஆமாங்க.. இவ்ளோ ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணலாமே!", என தர்ஷினி சொல்ல..
சரியெனத் தலையாட்டினாள் பூங்காவனம்.
இதற்குள் ஏழு பேரும் சகஜமாகி தங்களுக்குள்ளே பேச ஆரம்பித்தனர்.
சற்றுமுன் அவர்களது காரின் டயர் வெடித்து, கார் சரிவில் மாட்டிக்கொண்டு, வழி தெரியாமல் விழி பிதுங்கி மழையில் தவித்தபடி இவர்கள் மூவரும் நின்றிருந்தனர் என யாராவது சொன்னால் ஒருவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சிரிப்பு சிரிப்பு அவ்வளவு சிரிப்பு..
அப்போது மயிலின் அப்பாவும் வந்து சேர்ந்தார்.
"வாம்மா கண்ணுங்களா.. எப்படி இருக்கீங்க?"
"நாங்க ரொம்ப சூப்பரா இருக்கோம் அங்கிள்"
"என்ன பூங்கா.. இன்னுமா கேக் வெட்டாம இருக்கீங்க?"
"நீங்க வந்த பின்னாடிதான்னு எல்லோரும் சொல்லிட்டாங்க.. சரி நீங்க போன விஷயத்த சொல்லுங்க.. கார சரி பண்ணியாச்சா..?"
"அட ஆமால்ல... அத சொல்ல மறந்துட்டேன்.. ஸ்பாட்லயே ஆக வேண்டியதெல்லாம் பார்த்து இப்ப கார சரியான கன்டிஷனுக்கு கொண்டு வந்தாச்சு"
இதைக் கேட்டதும் மூவரின் முகங்களும் பிரகாசமாக மாறியது.
"இந்த ஒரு இக்கட்டான நிலையில தானா வந்து யாருனே தெரியாதவங்களுக்கெல்லாம் உதவி செய்யறதெல்லாம் வேற லெவலுங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க.. மொத்தம் எவ்ளோ ஆச்சுனு சொல்லுங்க?"
"அத அப்பறமா சொல்றேங்க.. இப்ப கேக் கட் பண்ணலாமா?"
படபடவெனெ டேபிள்.. ஹாலின் நடுவே தூக்கிவந்து வைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு அழகிய துண்டு விரிக்கப்பட்டு, கேக் பேக்கிங் அதன் மேல் வைக்கப்பட்டது.
அதனை ஓப்பன் செய்தாள் மயில்.
அதில் பார்வையை ஓட விட்ட ஷாலினிக்கு ஒரு ஷர்ப்ரைஸ்..
அதில் எழுதப்பட்டிருந்தது...
"ஹேப்பி பர்த்டே.. மயில் அன்டு ஷாலினி" என்று
ஷாலினிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
மயிலை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
"இத நீதான சொன்ன", எனக் கேட்பதாய் அந்த அணைப்பு இருந்தது.. "ஆமா.. நான் தான் சொன்னே", எனச் சொல்வதாய் மயிலின் அணைப்பு இருந்தது.
இந்த அற்புதமான தருணத்தை மொபையில் படம்பிடித்து பத்திரப்படுத்திக் கொண்டாள் மேகலா.
கேக் வெட்டப்ப்ட்டு, மயில் மற்றும் ஷாலினியின் முகத்தில் அப்பப்பட்டு மிகவும் குதூகலமாய் கழிந்தன நிமிடங்கள்.
இரவுச்சாப்பாடும் தனித்துவமாய் ஒவ்வொரு டிஷ்ஷையும் தனித்தனியாய் புகழும்படி இருந்தது. மூன்று பேரும் பூங்காவனத்தை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
"இப்ப நல்லா இருட்டிடுச்சு.. உடனே நீங்க கிளம்ப வேண்டாம். எதுவும் ஆட்சேபனை இல்லேனா இங்கேயே தங்கிட்டு காலைல சீக்கிரமா கிளம்பி போலாமே!", என மயிலின் அப்பா கேட்க.. இவர்களுக்கும் அது சரியாகவேப் பட்டது.
சாப்பாடு முடிந்ததும் தேவியும், கவிதாவும் கிளம்பிச் சென்றனர்.
மகிழ்வில் நிறைந்திருந்த இவர்களது மனம் தூக்கத்தை தூரமாய் தள்ளி வைத்திருந்தது. பூரிப்பாய் சிந்தித்தபடியே தூங்கிய அவர்கள்.. அலாரம் அடித்த காலை ஐந்து மணிக்குத்தான் எழுந்தனர்.
எழுந்ததும் விறுவிறுவெனக் கிளம்பினர்.
கிளம்பும் போது பல நாள் பழகிய உறவாய் தோன்றினர் பூங்காவனமும், மயிலும்..
"எங்களுடைய கஷ்டமான நாள, எங்களுக்குப் பிடிச்ச மிக இஷ்டமான நாளா மாத்தின உங்க மூனு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி", என்று கூறி பிரியாவிடை பெற்றனர்.
அப்போது தான் மூவருக்குமே ஒன்று தோன்றியது.
எல்லோருடைய பேரையும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா இந்த அய்யனார் மீசை ஆசாமி, கடாமீசைக்காரர், பூங்காவனம் ஹஸ்பன்டு, கார் மெக்கானிக், மயிலோட அப்பானு பல ரூபங்களில் கண்ணுக்குத் தெரியற இவரோட பேரக் கேட்காம இருக்கோமே என்று.."
"ஐயா.. உங்க பேரு என்னாது தெரிஞ்சுக்கலாமா?"
"அப்பாப்பேரு 'சின்னவன்'", என மயில் சொல்ல..
"என்ன சின்னவனா!? பேரு தாங்க சின்னவன்.. ஆனா மனதால நீங்க ரொம்ப ரொம்ப பெரியவங்க..", என மானசீகமாக நன்றி சொல்லித் தங்கள் காருக்குத் திரும்பினர்.
அதிகாலைச் சூரியன் பல்விலக்கிவிட்டு அவசரமாய் வெளியே வர மலைக்குப் பின்னிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை நோக்கிய தன் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தது அக்கார்.
"காலை நேரப் பூங்குயில்
கவிதை பாடப் போகுது
கலைந்து போகும் மேகங்கள்
கவனமாகக் கேட்குது"
என்ற இளையராஜாவின் பாடலுடன் தொடர்ந்தது அப்பயணம்.
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி