காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 2
காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 2
பாகம் இரண்டு
==============
(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. அடுத்து நடந்தது என்ன?)
கார் சீராகச் சென்று கொண்டிருந்தது.
மாலை கடந்து இரவு மெல்ல ஆக்ரமித்த நேரம்.
சற்று முன்னர் தான் சாலையோர டீக்கடையில் டீ, பிஸ்கட்டை எடுத்துக்கொண்டனர்.
'இது ஒரு பொன் மாலைப்பொழுது', என்ற வைரமுத்துவின் முதல் பாடலை எஸ்பிபி உருகி உருகி பாடிக் கொண்டிருக்க, இளையராஜாவுடன் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம்.
"என்னடி மேகலா.. உங்க வீட்டுல உடனே ஒத்துக்கிட்டாங்களா?"
"என்னைப்பத்தி எங்க வீட்டுல நல்லாத் தெரியும்டி, கூடவே உங்களைப் பத்தியும். உங்க கூடத்தான் போறேனு சொன்னப்பறம் எப்படி விடாம இருப்பாங்க!? உங்க வீட்டுல என்னடி சொன்னாங்க ஷாலினி?"
"அம்மா தான் மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிச்சு.. நாளைக்கு என்னோட பர்த்டே.. அதுக்கு பல பேர கூப்பிட்டு பெரிய விருந்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிடுச்சுப் போல.. திடீர்னு பத்து, பனிரெண்டு நாள் வெளியூர் போறேனு சொன்னா கோவம் வராது!? வந்தவுடனே அந்த செலிபரேசன வச்சுக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டு வந்திருக்கேன். திரும்பி வந்தா தான் அவங்க கோபத்தோட கரெக்ட்டான பவர் தெரியும்.. நீ உங்க வீட்டு கதையச் சொல்லு தர்ஷூ"
"எங்கதையா.. ஹா ஹா ஹா.. தப்பிச்சேன் பிழைச்சேனு ஓடி வந்திருக்கேன்"
"என்னது.. தப்பிச்சேன்.. பிழைச்சேனா.. என்னடி சொல்ற?"
"ஆமான்டி.. இன்னும் ரெண்டு நாள்ல என்னை பொண்ணு பார்க்க ஒருத்தவங்கள கூட்டிட்டு வர்றதா புரோக்கர் சொல்லி இருக்கார். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியது இருக்கு.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்னு சொன்னா கேட்டாத்தானே..! இப்பப் பாரு.. மாட்டிக்கிட்டாங்க.. இப்ப சாரி சொல்லிடுங்க.. நான் வந்தப்பறம் பார்க்க வரச் சொல்லுங்கனு சொல்லிட்டு, அந்தப்பையன் நம்பர மட்டும் வாங்கிட்டு வந்திருக்கேன்..."
"நம்பரா.. அத ஏன்டி இப்பவே வாங்கின!?"
"சும்மா... இருக்கட்டுமே.. இன்னும் எத்தனை பேரு என்னை பொண்ணு பார்க்க வருவாங்களோ.. இவன் ஹஸ்பன்டா வருவானானே தெரியாது... எப்பவாவது போர் அடிச்சா... எதாவது மெசேஜ் பண்ணி கலாய்க்கலாம்னு தான்.."
"இருந்தாலும் இது ரொம்ப ஓவர்டி"
"என்னடி இது? திடீர்னு இப்ப வானம் இருளுது?", என மேகலா சொல்ல.. அப்போது தான் இருவரும் கவனித்தனர்.
"அடைமழை, சூறாவளி, புயல்னு எந்த நியூஸும் நான் பார்க்கலையே..!"
"இப்படி மீடியா இருந்துக்கிட்டே நாம, மீடியாவ கலாய்க்கறதுல கூட ஒரு சுகம் தான்.. அப்ப செம மழை கண்டிப்பா இருக்கு.." என தர்ஷினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஷாலினியின் மொபைல் "தூரிகா.. தூரிகா..." எனப் பாட ஆரம்பித்தது.
"வாவ்.. வாவ்.. வாட் எ சாங்", என தர்ஷினி பாடலை ரசிக்க ஆரம்பிக்க.. அந்தக் காலை அட்டென்ட் செய்து அவளது ரசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஷாலினி.
"ஹலோ.. குட் ஈவ்னிங் மேம்"
சாருமதியின் அழைப்பு எனத் தெரிந்ததும் காரின் பாட்டுச் சத்தத்தைக் குறைத்து வைத்தாள் மேகலா.
"எப்படி போயிட்டிருக்கு பயணம்?"
"செமயா என் ஜாய் பண்ணிட்டு இருக்கோம் மேம்.. இன்னும் ஒரு 150 கிலோமீட்டர் இருக்கும் போல.. சோ.. வழியில நைட் எங்கேயாவது ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு அதிகாலைல கிளம்பி ஸ்பாட்டுக்கு சீக்கிரமா போக முயற்சிக்கிறோம்.."
"ஓகே.. வழியில எதாவது பிரச்சனை!?"
"அப்படியெல்லாம் எதுவும் இல்ல மேம்.. இப்பத்தான் வானம் மேகமூட்டமா இருக்கு.. மழை வந்தாலும் வரலாம்"
அடுத்து வரும் பிரச்சனை தெரியாமல் ஷாலினி இப்படி பேசுகிறாளே என யோசித்ததோ என்னவோ வானம்.. "சட் சட்"டென மழையை உடனடியாக அனுப்ப.. உடனே வைப்பரை ஆன் செய்தாள் மேகலா...
"மேம்.. மழை வந்திருச்சு.. நாங்க அப்பறம் பேசறோம்"
"ஓகே. ஓகே..", என சாருமதி போனைக் கட் செய்ய.. இங்கு பிடித்துக் கொண்டது அடைமழை.
காரின் வேகத்தைக் குறைத்த மேகலாவிற்கு.. சூழலின் திடீர் மாற்றம் ஆச்சரியம் கொடுத்தது.
"என்னடி.. வர்ற மாதிரி இருக்குனு நீ சொல்லச் சொல்ல.. மழை இப்படி பிடிச்சுக்கிச்சு..!?"
"மேகமும், வானமும் நாம பேசறத ஒட்டுக்கேட்டிருக்கும்னு தோணுதுடி"
"ஓ.. அதுக்குள்ள 'பேகாசஸ்' ஸ்பைவேர கடவுள் இன்ஸ்டால் பண்ணியிருப்பாரோ!"
"பேகாசஸ்.. இந்தப் பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. இப்ப இந்தியாவே அதிர்ந்து போய் இருக்கு.. இந்தியா மட்டுமில்ல.. முழு உலகம் கூட... எத்தன பேரோட செல்போன் பேச்சுக்கள ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கு... அதச் சரியா இப்ப மேகத்துக்கும், வானத்துக்கும் பொருத்தின பாரு சூப்பர்டி.."
அதே சமயம் அடைமழை மிக அதிகமான அடைமழையானது. காற்று தன் ரூபம் காட்டத் துவங்கியது. வழியெங்குமிருந்த மரங்கள் சாமியாட ஆரம்பிக்க.. வழியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. பைக் ஆசாமிகள் கண்ணிலேயே படவில்லை.
சட்டென கரண்ட் கட்டாக, சாலையோர மின் கம்பங்கள் விழியிழந்தன.
அப்போது காருக்குள் "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" பாடல் வர..
"வாவ்.. வாட் எ டைமிங்", என மூவரும் ரசித்த வேளை.. 'டமார்' என்ற பயங்கரமானச் சத்தம்.
'ஆ'வென இவர்கள் கத்த.. ஒரு டயரின் வெடிப்பில் அதிர்ந்த கார்.. சாலையை இரண்டு மூன்று முறைச் சுற்றி.. நிலை தடுமாறி ஒரு சரிவின் விளிம்பில் போய் நின்றது.
நல்ல வேளையாக ஒரு பெரிய மரம் அந்தக் காரினை மேலும் எங்கும் போக விடாமல் தடுத்து நிறுத்தியிருந்தது.
மூவரும் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அடைமழை, ஆள் நடமாட்டமில்லாச் சாலை, பஞ்சரானக் கார், பேய்க்காற்று, மூன்று இளம்பெண்கள்.. இப்படியெல்லாம் அவர்கள் நினைக்கும் ஆட்கள் இல்லை.
உடனே.. காரை விட்டு வெளியே வந்தனர். அக்கம்பக்கம் யாருடைய உதவியாவது கிடைக்குமா என அங்குமிங்கும் கண்களால் துளாவிப்பார்த்தனர். யாருமே கண்ணில் அகப்படவில்லை. அப்போது தூரத்தில் ஒரு வட்ட வடிவ வெளிச்சம் சட்டெனத் தோன்றியது.
அது மெல்ல மெல்ல அவர்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தது.
பக்கத்தில் வர வர அது டார்ச் லைட் எனத் தெரிந்தது. இன்னொரு கையில் குடைபிடித்தபடி அய்யனார் சாமி வடிவாய் மீசை வைத்த ஒருவன் அவர்கள் முன்னால் வந்து நின்றான்..
"என்னாச்சுங்க மேடம்? கார் மாட்டிக்கிச்சா..!?"
அவனை முதல்முதலாகப் பார்த்தால்.. பேசுவதா வேண்டாமா என்ற தயக்கம் ஆண்களுக்கே எட்டிப்பார்க்கும். ஆனால் மேகலா முன்னே வந்தாள்.
"ஆமாங்க.. ஒரு டயர் வெடிச்சிருச்சு.. கார் மெல்லமா வந்ததால.. இப்படியே சுத்தி சுத்தி இங்க வந்து நின்னுடுச்சு.. பக்கத்துல யாராவது மெக்கானிக் இருக்காங்களா?"
"நானே கார் மெக்கானிக் தாங்க.. அந்த டமார் சத்தம் கேட்டுத்தான் நானும் வந்தேன். கொஞ்சம் மழை நிற்கட்டும். அப்பறம் காரை சரி பண்ணித் தரேன்.. இந்தாங்க இந்தக் குடையை பிடிச்சுக்கங்க.. பக்கத்துல தான் என் வீடு.. மழை நிக்கற வரைக்கும் அங்க ரெஸ்ட் எடுங்க.. நான் இன்னும் ரெண்டு பேரை கூப்பிட்டுக்கறேன்.. அவங்க வந்தப்பறம் காரத்தள்ளி வெளிய எடுத்து சரி பண்ணிடலாம். சரிங்களா?"
அவனது கடா மீசைக்கும் இந்தக் கனிவான பேச்சுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காரிலிருந்த அவர்களது எந்தப் பொருளுக்கும் அதிகமான பாதிப்புகள் இல்லை. மிக மெதுவாகத்தானே கார் சுற்றி வந்து மாட்டியது.
"என்னடி சொல்றீங்க? போலாமா? மழை விடட்டும்.. அது வரைக்கும் இங்கேயே நிக்கறதும் நல்லாப் படல", என மேகலா சொல்லிவிட்டு முன்னே நடக்க, சரியென்று தலையாட்டி விட்டு ஷாலினியும், தர்ஷினியும்... விட்டு விட்டு வந்த மின்னல் வெளிச்சத்தில் அவனைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி