காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் -1
பாகம் ஒன்று
=============
நகரின் பிரதான வீதி.
'இளமதி' தொலைக்காட்சி நிறுவனத்தின் எட்டு மாடிக்கட்டிடம். வழக்கம் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கட்டிடத்தின் முக்கியமான பல அறைகளில் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கின்ற பல கேம் ஷோக்கள், சமையல் நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், டான்ஸ் ஷோக்கள், காமெடி ஷோக்கள் இவற்றின் படப்பிடிப்புக்கான தயாரிப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.
மற்றும் சில அறைகளில் படப்பிடிப்பு முடிந்தவற்றின் போஸ்ட் புரெடக் ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்பொழுது கட்டிடத்தின் நுழைவு வாயிலில் ஒரு புதுப்பரபரப்பு தொற்றிக் கொண்டது.
தொலைக்காட்டி நிறுவனத்தின் ஹெட்/தலைமை அதிகாரி 'சாருமதி' உள்ளே வந்து கொண்டிருந்தாள். இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் எட்டாம் இடத்தில் இருப்பவள்.
தனது தந்தை நிலாவண்ணனின் மறைவிற்குப் பின் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாள் இந் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்து, புது ரத்தம் பாய்ச்சி, புதுப் புது சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து, இன்று அசுர வளர்ச்சியில் இருக்கும் 'இளமதி' தொலைக்காட்சியை வழி நடத்தி வருபவள். பார்க்க நடிகை தேவயானியை ஞாபகப்படுத்தும் தோற்றம். சேலை கட்டிய தேவயானி அல்ல, மாடர்ன் டிரஸ் தேவயானி.
இன்னும் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதில் நம்பிக்கையில்லை என்று கூறி வருபவள்.
சாருமதி எங்கு சென்றாலும் திருமண காதல் அம்புகள் எல்லாத் திசைகளிலும் இருந்து பாயக் காத்திருக்கும். ஆனாலும் தன் பார்வையை அதனைத் தடுக்கும் கேடயமாகப் பயன்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு, அதனைச் சீர்குலைக்கவும் எல்லா விதமான சக்திகளும் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஆனால் தனது புத்திசாலித்தனத்தினால் எதிரியினைப் போலவும் சிந்திக்கும் திறன் பெற்றிருந்த சாருமதி, எதிரி.. அணுகுண்டுக்கான தீயை வைக்கும்முன், அதன் பியூசை பிடுக்கிவிடும் அளவுக்கு திறமை பெற்றிருந்தாள். எனவே எதிரி நிறுவனங்களும் இப்பொழுதெல்லாம் அதிகமாய் மோதும் போக்கை கடைபிடிப்பதில்லை. அதனால் 'இளமதி' தொலைக்காட்சி நிறுவனத்தின் வளர்ச்சி எவரெஸ்ட் உச்சிக்கு வளர்ந்து கொண்டிருந்தது.
அதனை மேலும் மேலும் எப்படி முன்னேற்றலாம் என்ற சிந்தனைக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட சாருமதி, வழியெங்கும் வாரி வழங்கப்பட்ட குட்மார்னிங்களை புன்னகையுடன் வாங்கிக் கொண்டு, தனது ஏ.சி. அறைக்குள் நுழைந்து கம்பீரமாய் அமர்தவள், பி.ஏ. ரூபாவை இன்டர்காம் மூலமாக அழைத்தாள்.
"குட் மார்னிங் மேம்"
"குட் மார்னிங் ரூபா.. ஷாலினி, தர்ஷினி, மேகலா மூனு பேரும் வந்துட்டாங்களா?"
"எஸ் மேம்.. வந்துட்டாங்க"
"சரி.. அவங்கள உடனடியா என்னைப் பார்க்க வரச்சொல்லு"
"ஓகே மேம்"
போனை வைத்துவிட்டு, எல் ஈ டிவியை ஆன் செய்தாள். கொரோனா செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. மூவரும் வந்துவிட்டனர்.
"குட் மார்னிங் மேம்"
"குட் மார்னிங்.. குட் மார்னிங்.. வாங்க.. எப்படி இருக்கீங்க மூனு பேரும்?"
"எங்களுக்கென மேம்.. சூப்பர இருக்கோம்.. எப்படா அடுத்த புரஜக்ட் கிடைக்கும்.. அப்படீனு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.." இது ஷாலினி..
"போன தடவை பண்ணின ஆலை திறப்பு போராட்டம் கிரேட் சக்ஸச்.. நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிலாளி வீட்டுக்கும் போய் போட்ட அப்டேட் எல்லாம் செம வைரலா போச்சு.. எங்கெங்கேயோ இருக்கற விஐபிஸ் எல்லாம் கூட எங்கள கான்டக்ட் பண்ணி கங்க்ராட்ஸ் பண்ணாங்க.. இன்னும் அந்த புரஜக்ட் பண்ண நாட்கள மறக்க முடியல மேம்.." இது தர்ஷினி.
"மேம்.. இனி எதாவது புரஜக்ட்னா பாரீன் அனுப்புங்க.. உள்ளூர்ல போதுமான அளவு சுத்திப்பார்த்தாச்சு.. என்ன சொல்றீங்க.. ஷாலு.. தர்ஷீ..?"
மூவரும் சாருமதியைப் பார்த்து புன்னகைத்தபடியே அமர்ந்திருக்க.. அதே புன்னகையுடன் மூவருக்கும் பதிலுரைத்தாள் சாரு..
"இப்ப என்ன..? பாரீன் புரஜக்ட் வேணும்.. அவ்ளோ தானே..! என்னோட பெஸ்ட் டீம் நீங்க.. உங்களுக்கு இல்லாததா..! கூடிய சீக்கிரம் உங்களத் தேடி வரும் அந்த பாரீன் புரஜக்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம்.. அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்கள கூப்பிட்டேன்""
"தமிழ் நாட்டுல மிக அடர்த்தியான காடுகள் உள்ள பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை. தமிழகம், கர்நாடகா, கேரளானு மூன்று எல்லைகளும் அதனைச் சூழ்ந்து இருக்கும். அங்க ஒரு கிராமத்துல என்னோட காலேஜ் ப்ரண்ட் ஒருத்தி ஒரு காலாண்டு இதழ்ல வேலை பார்க்கறவ.. பத்திரிக்கைச் செய்தி சேகரிக்கப் போயிருக்கா.. நேத்து அவ ஒரு விஷயம் எங்கூட பகிர்ந்துகிட்ட.. அதச் சொல்லத்தான் உங்கள வரவழைச்சேன்"
"சொல்லுங்க மேடம். அவங்க சொன்ன விஷயம் என்ன?"
"அங்க இருக்கற அடர்த்தியான காட்டுல காட்டுத்தீ ஒரு அஞ்சு நாளைக்கு முன்னாடி பத்திக்கிச்சாம். அது இப்ப அளவுக்கதிகமா பரவிட்டு வருதாம். முதல்ல எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் தகர்த்து எரிஞ்சிட்டு இப்ப அது படுவேகமா பரவிட்டு வருதாம். ஆனா அரசாங்கம் அத இன்னும் ஒரு நியூசா வெளிய சொல்லல. சொன்னா கெட்ட பேருனு இன்னும் சொல்லாம மறைக்கறாங்களாம். அத நாம மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டனும். அது உங்க மூனு பேரால முடியும்னு எனக்கு கண்டிப்பாத் தெரியும்"
"நிச்சயம் மேடம். எப்பக் கெளம்பணும்?"
"இன்னைக்கே.. இப்பவே.. நாளைக்கு ஈவ்னிங்குக்குள்ள ஒரு லைவ் ஷோவோ.. இல்ல ஹாட் நியூஸோ போட்டு தமிழ் நாட்டையே அலற விடுவோம்"
"எரியும் தீ பரப்பும் புகை அதன் தூசு பல நாட்களுக்கு சுத்திட்டே இருக்கும். அதை சுவாசிச்சா எல்லாத்துக்கும் ஆபத்து. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பண்ணிக்கோங்க. வழியில் என்ன பிரச்சனைனாலும் டைரக்டா என் மொபைலுக்கு கால் பண்ணுங்க"
"மேகலா.. வழக்கம் போல டிரைவிங்ல கலக்குங்க.. ரெண்டு பேருக்கும் உரிய பாதுகாப்பா இருங்க.. தற்காப்பு கலைய ரொம்ப நல்லா கத்துக்கிட்டவங்க நீங்க.. தர்ஷினி.. கேமரா உங்க கைல விளையாடும். வேற சேனலுக்குப் போக இருந்த உங்கள வலுக்கட்டாயம நம்ம சேனலுக்கு வரவழைச்சு அதன் பலன அனுபவிச்சுட்டு இருக்கறேன்.. அசத்துங்க.. ஷாலினி.. உங்க வாய்ஸால இதுவரைக்கும் எப்படி மக்கள கட்டிப்போட்டு வச்சு இருக்கீங்களோ.. அத இன்னும் சிறப்பா செய்ங்க.. விட்டா கோலிவுட்ல இறங்கி பாடகியாவோ, டப்பிங்க ஆர்ட்டிஸ்டாவோ கலக்கற திறமை உங்ககிட்ட இருக்கு.. பின்னுங்க.. சரியா?"
"ஷ்யூர் மேடம்.. உங்க எதிர்பார்ப்ப நாங்க எப்போதும் போல காப்பாத்துவோம்.. நாளைக்கு உங்கள நோக்கி ஒரு குட் நியூஸ் வரும். இப்ப நாங்க கெளம்பறோம் மேடம்"
"ஓ.கே. குட் லக்..", எனச் சொல்லி மூவருக்கும் கை கொடுத்து அவர்களை அனுப்பிவைத்தாள் சாருமதி.
உடனடியாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை நோக்கி.. ஒரு கார் புறப்பட்டது.
நாளை முதல் செய்திச் சேனல்களில் ஒரு புதிய செய்தி வந்து மக்களை மிரள வைக்கப்போகிறது. அரசாங்கத்தைக் கேள்வி கேட்கப் போகிறது.
சரி.. இனி நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிப்போம்..
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி